Feeds:
Posts
Comments

Archive for the ‘சுயசொறிதல்’ Category

engaeppadi

கிபி இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் தமிழகத்தில் தோன்றியிராத காலம்.

ஒரு ஆரம்ப பள்ளியில் நடந்து கொண்டு இருந்த பாட்டு போட்டியில் மூக்கை உறிஞ்சிக்கொண்டு வேடிக்கை பார்த்த ஒரு சுட்டிப்பயல் பிங்கிக்கு நாமும் பாடி கைத்தட்டு வாங்கினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது. மளமளவென ஏறினான், கைகூப்பி கண்ணை மூடி “மிஸ் மிஸ் புடிச்சு புடிச்சு கிள்ளி  கிள்ளி வெக்கிறான் மிஸ்” தொனியில் பூஜையில் அம்மா பாடும் எதோ ஒரு சுலோகம் சொல்ல ஆரம்பித்தான். ஊரே கைகொட்டி சிரித்தது.

பிஞ்சு மொக்கானது, ஆரம்ப பள்ளியில் அடங்காதவன் மேல்நிலையில் அடங்குவானா? ஆறாம் வகுப்பு பாட்டு போட்டி. “உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்” என்று சோகத்தை பிழிந்தான். இந்த முறை கை தட்டு கிடைத்தது. அடுத்தடுத்து வந்தவர்கள் நிதமும் கழுத்தளவு தண்ணீரில் சாதகம் பிடிப்பவர்களாய் அமைந்ததில் இவனுக்கு பெரும் ஏமாற்றம். ஒரு வழியாக பிழிந்த சோகத்தின் பலனாய் மூன்றாம் பரிசு கிடைத்தது. பிறகு கிடைத்த பாட்டு புத்தகத்தை எல்லாம் வாங்கி பாடல்களை பாடி பாடி பழகினான். அடுத்த பாட்டு போட்டியில் “காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்” வரிகளில் பாவனைகளாலே விழுந்து விழுந்து தொழுதான். எவ்வளவு குட்டி காரணமடித்தாலும் எப்போதும் அவனுக்கு கிடைத்தது முத்தான மூன்றாம் இடமே.

காலப்போக்கில், முதல் இடம் என்பது முக்கியமல்ல பாடும் போது கிடைக்கும் சுய ஆசுவாசமே மேலென புரிந்து கொண்டான்.

மொக்கு பூவானது, பட்டயபடிப்பின் போது இவனுக்கு வாய்த்தது கலை நிகழ்சிகளை மறந்தும் அனுமதியா ஒரு பயிலகம். ஒரே ஒரு முறை சினிமா பாடல்களை அனுமதிக்க பல்வேறு தேர்வுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் நேரமின்மை காரணமாக அன்று குட்டிக்கு அந்த மேடை கிடைக்கவில்லை. அந்த ஏக்கங்களை மதிய வேளைகளில் பெஞ்சுகளில் தாளமிட்டபடி இவனையொத்த இசை பிரியர்கள் தங்களுடைய குரலை இந்த உலகுக்கு பறை சாற்றினார்கள். இந்த கட்டத்தில் பெரும்பாலானோருக்கும் உன்னிகிருஷ்ண கீச்சு  குரல் மறைந்து இளையராஜாவின் கனமான குரல் கிடைத்தது.

பருவ காலம் வந்தது, பூ காயானது, பட்டபடிப்பு ஆரம்பித்தது. எந்த பாடல் பாடினாலும் கூடவே பாடி இசையால் மற்றவர்களை இம்சிப்பதும் தொடர்ந்தது. கலை நிகழ்சிகளில் உள்ளூர் இசை குழுவினரை வரவழைத்து மாணவர்கள் பாடினர். தனிமையில் நன்றாக பாடக்கூடிய நண்பர்கள் கூட இசைக்குழுவினரின் தாளத்திலோ சுதியிலோ கோட்டை விட நீண்ட காலங்களுக்கு பிறகு குட்டிக்கு அன்று மேடை கிடைத்தது.

“காதலின் தீபம் ஒன்று” பாடலில் SPB அவனுள் குடி கொள்ள, தாளமும் சுதியும் தப்பாமல் பாடி பார்வையாளர்களை வியப்பிலாழ்தினான். ஒரு காண்டாமிருகத்தின் குரல் வலையிலிருந்து இப்படி ஒரு குயில் பாட்டை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மேடையிலிருந்து இறங்கியபோது நீங்கள் முறையாக எங்கு சங்கீதம் கற்றீர்கள் என்றெல்லாம் கேட்டு சங்கீதத்தின் மீதே சேற்றை வாரி இறைத்தனர் சிலர். என்ற போதும் SPB மட்டுமே அறிந்த ஒரு நேப்பாலி கூர்கா தன்னை மிகவும் ரசிப்பததாக சொன்ன மட்டுமே உண்மையான பாராட்டை நினைத்துக்கொண்டான். அன்றிலிருந்து பாடிப்பாடியே “பூவே உனக்காக” ராமசாமி போல எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் திரிந்தான். எல்லோரும் தூக்கோ தூக்கென்று தூக்க படிப்பு முடித்ததும் நேராக சென்னைக்கு சென்று ஒரு பாடகாராய் விட வேண்டும் என்று கிணற்று தவளையாய் கனவு காண ஆரம்பித்தான்.

வேலை நிமித்தமாய் சென்னையிலிருந்த போது நாலைந்து பேரை சந்தித்ததில்  உலகம் புரிய ஆரம்பித்தது. தனது தராதரம் குளியலறை தாழ்பாளுக்கு உட்பட்டது என உரைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளில் பொட்டு பொடுசுகள் எல்லாம போட்டு பொளந்ததில் தாழ்வு மனப்பான்மை தறிகெட்டு தாண்டவமாடியது.

ஆன போதும் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பதால் அவன் இன்னும் அடங்கியதாய் தெரியவில்லை.

http://soundcloud.com/balaganesh-kandasamy

https://www.smule.com/piliral

http://www.youtube.com/watch?v=U2HwjIfzark – மலையோரம் வீசும்

http://www.youtube.com/watch?v=kwFxLxE-hu0 – காதல் சொல்வது

http://www.youtube.com/watch?v=5iNY4O9cmLc – வெண்மதி வெண்மதியே

இது போக தாக்குதல் வேறு தொடருமென அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டு இருக்கிறான். ஆகவே மக்கழே  உங்களை நான் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் கண்ட இடங்களில் எல்லாம் சென்று அவனை ஒரு வழி செய்யவும்!

– பொது நலன் கருதி வெளியிடுவோர்….

Read Full Post »