Feeds:
Posts
Comments

Archive for May, 2009

“இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக  இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் காமெடி படங்களே எடுப்பதில்லை?”


“ஏன், நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே மிகப்பெரிய காமெடி தானே!”

– ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

alfred-hitchcock

நடு நசி, யாருமற்ற தனிமை, ஹிட்ச்காக்கின் சினிமா!

இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கென்று நான் வகுத்துக்கொண்ட கட்டமைப்பு இது. காதுகளுக்கு ஹெட் போன் அணிந்தால் கூடுதல் சிறப்பு.

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் பிதாமகர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்த்தால்தான் இப்போதெல்லாம்  வார இறுதி முழுமை பெற்றதாக ஆகிறது.சனிகிழமை இரவு ஒன்பது மணி ஆனாலே கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆம், ஹிட்ச்காக்கின் சினிமா- ஒரு போதைதான்.

சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழ்நிலைகளில் கிடத்துபவையாக இருக்கும் இவரது திரைபடங்களில் வசனங்களை விட காட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இவரது படங்கள் ஒரு கொலை, பின் அதை கண்டுபிடிக்கும் சம்பவங்களாக மட்டும் அல்லாமல் கொலையாளின் கொலைக்கு முன்/பின் சுபாவங்கள், நடவடிக்கைகள், பேச்சு போன்றவற்றை உளவியல் ரீதியாக அணுகுபவையாக இருக்கும். கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தும் விதத்திலும் தனது ஒவ்வொரு திரைபடங்களிலும் ஏதேனும் ஒரு பரிசோதனை/புதிய முயற்சியை மேற்கொள்வார்.

கிட்டதட்ட அரை நூற்றாண்டு கால சினிமா வாழ்வில் 50க்கும் மேற்பட்ட திரைபடங்களை இவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபல்யமானவை.

1899ல் கிழக்கு லண்டனில் பிறந்த இவர் ஆரம்ப காலங்களில் டிசைனராக ஒரு கேபிள் கம்பெனியில் பணியாற்றினார். பின்பு “பாரமௌன்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்தில் டைட்டில் கார்டு டிசைனராக பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் “Always Tell Your Wife” படத்தை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் நோய் வாய்ப்பட, மீதி படத்தை இயக்க வேண்டிய வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் இயக்கிய “Number 13” படமும் பாதியில் கைவிடப்பட இறுதியாக இவரது முழுமையான இயக்கத்தில் 1925ல் மௌன திரைப்படம் “Pleasure garden” வெளிவந்தது.ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.

அடுத்து வெளி வந்த  “The Lodger” வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடல்லாமல் இவரை முதல் தர இயக்குனராக அனைவரையும் உற்று நோக்க செய்தது.இந்த கால கட்டத்தில் தனது உதவி இயக்குனரான “அல்மா ரேவில்”ஐ 1928ல் மணந்தார்.

மெல்ல மௌன படங்களில் இருந்து தனது முதல் ஒலிஒளி திரைப்படமான “Black Mail” ஐ 1929ல் இயக்கினார். அப்போது அது  அவருக்கு பத்தாவது படம்.அடுத்தடுத்து “The Man who knew too much” (1934) , “The 39 steps” (1935) படங்களின் இமாலய வெற்றியின் மூலம் அவருக்கென்று ஒரு பாணியோடு, தனி தன்மையுடன்  பிரிட்டன் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆனார்.

பின்பு  “The Lady Vanishes” (1938)இன் மற்றுமொரு வெற்றியை தொடர்ந்து 1939களின் முடிவில் ஆஸ்கார் விருதுடன் பெருவெற்றி பெற்ற “Gone with the wind (1939)ன் ஹாலிவுட் பட  தயாரிப்பாளர் David O. Selznick இவரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து இவரை அமெரிக்காவுக்கு அழைத்து கொண்டார்.

அவரது முதல் ஹாலிவுட் படமான “Rebecca” (1940)க்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து Shadow of a doubt (1943), Life boat (1943), Spell bound (1945),  Notorious(1946), Rope (1948), போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

ஹிட்ச்காக்கின் பொற்காலம் என வர்ணிக்கப்பட்ட 1950களில் தான் அவரது புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார். Strangers on a train (1951), I confess (1953), Dial M for Murder (1954), Rear window (1954), தன்னுடைய மறுபதிப்பான The Man who knew too much (1956), Vertigo (1958), North by Northwest (1959) போன்ற வெற்றி படங்களை எடுத்தார்.

1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதும், பிரிட்டிஷ் குடியுரிமையையும் தக்க வைத்துக்கொண்டார்.

அறுபதுகளில், அவரது கிளாசிக் த்ரில்லரான  Psyco(1960), The Birds (1963),  Marnie (1964), Torn curatin (1966), Topaz (1969) என்று மேலும் ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

சினிமாவில் தீவிரமாக இருந்த போதும் Alfred Hitchcock Presents (1955-62) மற்றும்  The Alfred Hitchcock Hour (1962-1965) என்று இரண்டு தொலைகாட்சி தொடரையும் இயக்கினார்.

தனது இறுதி படமான Family Plot (1976)க்கு முன்பு Frenzy (1972) என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

பின்பு 1979 ல் இங்கிலாந்து அரசு இவருக்கு “Sir” பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளரும் இயக்குனர்களால் அதிகம் ஆராயப்பட்ட, படிக்கப்பட்ட ஒரு இயக்குனராக திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு தனது எண்பதாவது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ்சில்  உயிர் இழந்தார்.

பொதுவாக மக்களுக்கு பயத்தின் மேல் உள்ள ரகசிய ஆசையே (பெருகி வரும் தீம் பார்க்களின் எண்ணிக்கையே இதற்க்கு சான்று) இவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம்.

ஏனெனில் நமக்கு எப்போதும் பயம் என்ற குளிர்ந்த நீரில் காலை விட்டு பார்ப்பதில் ஆனந்தம்தானே?

ஒரே லொக்கேசன்

ஒரே ஒரு பாட்டுக்கு நாலு கோடியும், நாப்பது லொக்கேசனும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், ஒரு முழு திரைப்படமும் எடுக்க அவருக்கு ஒரு ஒரு லொக்கேசன் இருந்தாலே போதும். இதற்க்கு உதாரணமான திரைபடங்களை வரிசையாக அடுக்கலாம்.

படங்களின் தலைப்பை சொடுக்கி ட்ரைலரை பார்க்கலாம்….

Life boat (1943)

lifeboat2

அட்லாண்டிக் கடலில் இரண்டாம் உலகபோரில் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்க பயணிகள் கப்பலும், ஜெர்மனியின் U-Boat ம் மோதலில் ஈடுபட்டு மூழ்க பலவேறு தரப்பட்ட பயணிகள் ஒரு உயிர் காக்கும் படகில் தஞ்சம் அடைகின்றனர். சிறுது நேரத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஒரு ஜெர்மனியனை பலத்த வாக்கு வாதங்களுக்கு பிறகு அனுமதிக்கிறார்கள். ஆனால் அனுமதிக்கபட்டவன் யார்?

இந்த பின்னணியில் சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லிங்குடன் தனக்கே உரிய பாணியில் இயக்கி இருப்பார் ஹிட்ச்காக். இந்த திரைப்படம் முழுவதும் Life boat என்று சொல்ல கூடிய உயிர் காக்கும் படகில் வைத்ததே எடுத்திருப்பார். படகு மற்றும் கடல் இவ்வளவுதான் லொக்கேசன்.

மிகச்சிறிய செட்டில் எடுக்க பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முறியடிக்கப்பட முடியாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது இந்த திரைப்படம்.

Rope (1948)

rope

ஒரு உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அவருடைய முதல் டெக்னிக் கலர் படம்.

ஒரு தினவுக்கவும், சுவாரஸ்யத்திற்காகவும் ஒரு கொலையை செய்து விட்டு தங்களால் மறைக்கவும் முடியும் என்று நிரூபிப்பதற்காக அமுதன், இளமாறன் போல இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பனை தங்களது அப்பார்ட்மென்டில் வைத்தே கொலை செய்கின்றனர். அவனை ஒரு மரப்பெட்டியில் அடைத்துவிட்டு அதை விருந்து உபசரிக்கும் மேசையாக்கி அவனது பெற்றோர், முன்னாள் ஆசிரியர் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), காதலி மற்றும் சிலரையும் விருந்துக்கு அழைகிறார்கள். இப்படியாக பயணிக்கும் கதையை ஒரு பெரிய ஹாலில் வைத்தே, (கிட்டதட்ட மேடை நாடக செட் போல) முழு திரை படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் எடுத்திருப்பார்.

இந்த படத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்ததை போல தோற்றமளிக்க செய்திருப்பார்.

அந்த கால கட்டத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்களே ஒளிப்பதிவு செய்யும் வசதி இருந்திருக்கிறது. ஆகையால் முதல் ஷாட்  9:34 நொடிகளில் ஒரு நடிகரின் முதுகில் கருமையாக  முடிய இரண்டாவது ஷாட் அவரது முதுகில் இருந்தே தொடங்கும். இப்படியாக 81 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மிகத்திறமையாக பத்தே ஷாட்களில் முடித்திருப்பார்.

Rear Window (1954)

rear-window33

விமர்சகர்களால் ஹிட்ச்காக்கின் சிறந்த படமாக கருதப்படும் படம்.

சதுர வடிவில் உள்ள ஒரு பிளாட்டில் கால் முறிந்து வீல் சேரில் இருக்கும் ஒரு புகைப்பட கலைஞனுக்கு  (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்),  நாளெல்லாம் ஜன்னலில் அமர்ந்தபடி மற்ற பிளாட்டில்  நடப்பவைகளை பைனாகுலர் மூலம் நோட்டம் விடுவதே பொழுதுபோக்கு  . தினமும் இவனை சந்திக்க வரும் காதலியிடமும் (கிரேஸ் கெலி) , நர்சுடனும் நடந்தவைகளை/நடப்பவைகளை பற்றி புரளி பேசுவது இவனது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் எதிர் பிளாட்டில் இருக்கும் சேல்ஸ்மேனுடைய மனைவி மர்மமான முறையில் காணாமல் போக சூழ்நிலைகளையும், நடந்தவைகளையும் கிரகிக்க சேல்ஸ்மேன் தான் அவளை கொன்று இருக்க வேண்டுமென கருதுகிறான். அவனது யூகம் தவறா ? அல்லது இவன் காதலியின் துணை கொண்டு இதை துப்பறிந்து வெளிகொனர்கிறானா? என்பது மீதி கதை.

ஒரு அப்பார்ட்மென்ட் செட்டில் விறுவிறுப்பாக இயக்கியதை விட கூடுதல் விசேஷம் படத்தில் மொத்தம் இரண்டே கேமரா கோணங்கள் தான். ஒன்று ஜன்னலுக்கு வெளியே, ஜன்னலுக்கு உள்ளே !!

Dial M for Murder (1954)

dial_m_for_murder

எனக்கு மிகவும் பிடித்த ஹிட்ச்காக்கின் திரைப்படம்.

ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு நாளை முழுதாக பாரக்கலாம் என்றெண்ணி பார்க்க ஆரம்பித்தவன் படம் முடிந்து End credits  போடும் போதுதான் சுய நினைவிற்கு வந்தேன்.

ஒரு முன்னால் பிரிட்டைன் டென்னிஸ் வீரன், பணத்திற்காகவும், திருமணத்திற்கு முன்பு ஒரு அமெரிக்க கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவனுடன் உறவு வைத்து  இருந்ததற்காகவும் சொந்த மனைவியை  (கிரேஸ் கெலி) கொலை செய்ய முடிவு செய்கிறான். மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒருவனை கொலை செய்ய பணியாமர்த்துகிறான். திட்டம் இதுதான் மனைவியின் பழைய காதலன் ஊர் திரும்பியதும், அலிபிக்காக அவனோடு இரவு பார்ட்டிக்கு செல்ல வேண்டியது. வீட்டின் இரண்டு சாவியில் ஒரு சாவியை தன்னுடைய மனைவியின் கைபையில் இருந்து திருடி மாடிபடிகளில் ஒளித்து வைக்க வேண்டியது, இவர்கள் பார்டியில் இருக்கும் நேரம் கொலையாளி அந்த சாவியை உபயோகபடுத்தி வீட்டுக்குள் சென்று ஹாலில் ஒளிந்து கொள்ள வேண்டியது. மிகச்சரியாக  11 மணிக்கு இவன் வீட்டுக்கு போன் செய்ய வேண்டியது, அவள் தொலை பேசியை எடுத்து ஹலோ சொல்லும் போது கொலையாளி பின்னால் இருந்து ஸ்கார்ப் மூலம் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து, திருட வந்தவன் எதேச்சையாக கொலை செய்தது போல  தப்பிக்க வேண்டியது.

பல இடர்பாடுகளுக்கிடையே எல்லாம் சரியாக நடக்க 11 மணிக்கு தொலை பேசி மணி ஒலிக்கிறது..

கிரேஸ் கெல்லி தனது படுக்கை அறையில் இருந்து எழுந்து  இருளடர்ந்த ஹாலுக்கு வந்து தொலை பேசியை எடுக்க எதிர்முனையில் அவள் கணவன் மெளனமாக இருக்க, ஹலோ ஹலோ என கிரேஸ்  கேட்டுக்கொண்டே இருக்க பின்னால் இருந்து கொலையாளி கிரேஸ் கெல்லியின் மயில் கழுத்தை நெரிக்க முன்னேறுகிறான்……..பிறகு?????

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் ஒளி அமைப்பும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். பல திருப்பங்களை கொண்ட இந்த விறுவிறுப்பான திரைபடத்தை அவர் 90 சதவிகிதம் ஒரே ஹாலில் வைத்தே இயக்கி இருப்பார். மீதி 10 சதவிகிதம் வேறு இரண்டு செட்களில் எடுக்கபட்டு இருக்கும்.

விரைவில்!

McGuffin (மெக்குஃபின்) டெக்னிக் சார்ந்த படங்கள்:

hitchcock5

ஹிட்ச்காக் சூம்/ டாலி சூம் டெக்னிக் சார்ந்த படங்கள்:

sc-marnie1

Advertisements

Read Full Post »

%d bloggers like this: