Feeds:
Posts
Comments

Archive for January, 2013

“கூந்தலில் வெள்ளியும் மனதில் தங்கத்தையும் கொண்டவர்கள் பாட்டிகள்” – யாரோ

புளியம்பட்டியில் வந்து இறங்கியபோது வெயில் உக்கிரமாக வெறித்துக் கொண்டு இருந்தது. மேலே வேறு தெரியாமல் பார்த்து விட்டேன், இருட்டிக் கொண்டு வந்தது. நடத்துனரிடம் சில்லறை வாங்கி கொண்டு இருந்த என் அம்மாவை தேடினேன்.

“இன்னும் எவ்வளவு நேரம்மா ஆகும்”

“வந்தாச்சு சாமி, 18Bல ஏறுனா இன்னும் அரைமணி நேரத்துல போயிறலாம்”

“போம்மா. அங்க வெளையாட யாருமே இருக்க மாட்டாங்கம்மா, வீட்டுக்கே போலாம்”

“கண்ணு, மறுபடி ரகள பண்ண கூடாது, நாம எப்பவாவது தானே பாட்டிய பாக்க போறோம்” திங்கறதுக்கு ஏதாவது வாங்கிக்கலாமா”?

“என்னக்கொன்னும் வேண்டாம்.. நீயே தின்னுக்கோ..போம்மா…”

18B வந்தது, வேகமாக ஏறி ஜன்னலோர சீட்டை பிடித்து கொண்டேன். வண்டியில் கூட்டமே இல்லை, அம்மா ஏதோ படித்து கொண்டு வந்தாள். ஜன்னலில் தலை வைத்து வேகமாய் என்னை கடந்து போய்க்கொண்டு இருந்த தென்னை மரங்களை எண்ணிக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்னால் என் பாட்டி ஊருக்கு போனபோது பொழுதே போகவில்லை. அங்கு யாருமே கிரிக்கெட் விளையாடுவதில்லை. பெரும்பாலும் பெண் பிள்ளைகளே இருந்தார்கள், எனக்கு கூட விளையாடவும் பிடிக்கவில்லை.

ஊரே மயானக்காடாய் இருக்கும். தூரத்தில் எதோ ஒரு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் மோட்டார் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டே இருக்கும் குருவி,குயில் என அனைத்து ஜீவராசிகளின் ஒலியையும் துல்லியமாக கேட்கமுடியும். எங்குதான் இருப்பார்களோ, பகலில் கூட ஒருவர் இருந்ததில்லை.தனிமையில் தலையே வெடித்து விடும் போல் இருக்கும்.

பாட்டி ஊரில் உயர்நிலை பள்ளியின் தையல் ஆசிரியை. என் அம்மா சிறுவயதில் இருந்த போதே தாத்தா இறந்து விட்டிருக்கிறார். அதன் பின் அம்மாவை தனி ஆளாய் வளர்த்து இன்று அவள் ஒரு உத்யோகத்தில் இருப்பதற்கான காரணகர்த்தா. ஆனால் பாட்டி சரியான சினிமாப்பைத்தியம். அவளுக்கு எல்லாமே சினிமாதான். அந்த கிராமத்தில் கொட்டகை ஏதும் இல்லாததால் படம் பார்க்க வேண்டுமானால் பக்கத்துக்கு ஊரான புளியம்பட்டி ஒன்று தான் கதி. அதுவும் மாலைக் காட்சி 5 மணிக்கெல்லாம் துவங்கி விடும். பள்ளிக்கூட மணி அடிக்கிறதோ இல்லையோ 18Bஇல் ஏறிப் போய்விடுவாள். போஸ்டர் மாறினால் பஸ் டிரைவரே ஒலி எழுப்பி சிரத்தையாக அழைத்துச் சென்று, இரவு கடைசி முறையில் அழைத்து வந்து இறக்கிவிடுவார்.

தீபாவளி, பொங்கல் வந்தால் வெகு சிறப்பு, பக்கத்து டவுனில் உள்ள சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கி எல்லா புதுப்படங்களையும் காட்சி வாரியாக பார்த்து விட்டுத்தான் திரும்புவாளாம். அப்படி மொட்டை வெய்யிலில் சாப்பிடாமல் முரட்டுகாளை பார்க்க போன போது வரிசையில் மயக்கம் போட்டு விழுந்து வைத்திருக்கிறாள் என்று அம்மா பல முறைசொல்லி இருக்கிறாள். “நீ என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நெனைச்சுகிட்டு இருக்கியா” என்று அம்மாவும் திட்டாத நாள் இல்லை.

வண்டி எதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது. நின்ற இடத்தை சுற்றிலும் பச்சை பசேலென இருந்தது. எங்கள் ஊரில் மழைக்காலத்தில் மட்டுமே இப்படி இருந்து பார்த்திருக்கிறேன். குட்டையாய் மஞ்சள் செடி போல ஏதோ இருந்தது. அதற்குள் என் அம்மாவை யாரோ ஒரு முதியவர் அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார்.

“எப்புடி சாமி இருக்கற, இதேன் பையனா” என்று என் கன்னத்தை தடவ வந்தார். கைகள் சொரசொரவென இருந்தன,விருட்டென முகத்தை திருப்பிக்கொண்டேன்.

“அம்மா, இது மஞ்சச்செடியம்மா” என்று கேட்க

“இது பொகீலச்செடி சாமி” என்று அந்த முதியவர் சொல்ல மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

அம்மாவுக்கு என் செய்கை பிடிக்கவில்லை, “என்ன பழக்கம் பழகி இருக்க? பெரியவங்க பேசறாங்கல்ல” என்றாள்

“அட, விடு சாமி. சின்னப்புள்ளய ஏந்திட்டற” என்று  அந்த பெரியவர் என் அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, என் அப்பா ஏன் வரவில்லை? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

பனியன் மட்டும் தெரிய‌சட்டையை முழுமையாக திறந்து விட்டபடி “அந்த கூடய அந்தப்பக்கம் எடும்மா” என்றபடி கியரை போட்டார் ட்ரைவர்.

என் அப்பாவும் ஒரு ட்ரைவர்தான், பல முறை அவரோடு பஸ்ஸில்  போயிருக்கிறேன் யாரையாவது திட்டிக் கொண்டே அப்படி கியரை போடும் போது ஒரு கதாநாயகனாகவே காட்சி அளிப்பார். வளர்ந்து பெரியவனானால் நானும் ஒரு ட்ரைவராகவே வேண்டும் என்று எப்போதும் எனக்குள் ஒரு ஆசை

என் பாட்டி பெரும் பிடிவாதமும், வைராக்கியமும் கொண்டவள். என் அப்பாவும் இதற்கெல்லாம் சளைத்தவரா என்ன?

அவர்களுக்குள் பிரச்சனை, பேசிக்கொள்வதே இல்லை என்று அம்மா பல முறை என்னிடம் சொல்லி அழுது இருக்கிறாள்.

“கோட்டுபாளையம் வந்தாச்சு எறங்குங்க”

நானும் அம்மாவும் இறங்கினோம்.

பஸ் ஸ்டான்டின் அருகே ஒரு வாட்டர் டாங்கு அதை ஒட்டி ஒரு நீளமான ஆனால் குறுகலான தெரு, இடதும் வலதுமாய் பழைய வீடுகள் மொத்தமாய் ஒரு ஐம்பது வீடுகள் இருக்கும் போல. அந்த தெரு சென்று முடியும் இடத்தில் ஒரு குடிசையும் அதற்குப் பின் புகையிலை தோட்டங்கள்.

வழியெங்கும் ஆளாளுக்கு விசாரித்தார்கள்.எல்லோருக்கும் பதில் சொல்லிவிட்டு பாட்டி வீட்டுக்கு வரும் போது பாட்டி குமுதம் படித்துக் கொண்டு இருந்தாள்.

என்னை பார்த்ததும் வந்து கட்டிப் பிடித்து முத்தம் தந்தாள், வெற்றிலை வாசத்தோடு பிசுபிசுப்பும் கன்னத்தில் ஒட்டியது, நான் திமிறிக்கொண்டு விலகினேன்.

“என்னடி, உன் மகன் ரொம்பத்தான் சிலித்துகுறான்” என்றாள்.

சுற்றி பார்த்தேன், ஒரு சின்ன டிவி, ஒரு டேப் ரிக்கார்டர் இருந்தது, வாரப்பத்திரிக்கைகள், ரமணிசந்திரன், பாலகுமாரன், தேவிபாலாவின் நாவல்கள் நிரம்பி இருந்தன. அப்புறம் பாட்டியின் பகுதி நேர தொழிலான தையல் மெசின்.

அம்மாவும் மகளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், பதில் தெரிந்து இருந்தாலும் இடையே ஏன் அப்பா வரவில்லை என்ற காரணத்தை பாட்டி கேட்டு தெரிந்து கொண்டாள்.

வீட்டிலிருந்த காம்ப் கட்டிலில் ஒரு காலை மடித்து விட்டு அதை சருக்கல் மரமாக்கி ஏறி, சிறிது விளையாடி கொண்டு இருந்தேன்.

இரவு வரைக்கும் நேரம் நத்தையாய் ஊர்ந்தது.

சாப்பிட்டு கொண்டு இருந்த‌போதுதான் என் அம்மா அந்த குண்டை தூக்கிப் போட்டாள்.

ம‌று நாள் காலை அவ‌ள் ம‌ட்டும் கிளம்பி விடுவாளாம் இன்னும் ஒரு வார‌ம் க‌ழித்து பாட்டி கொண்டு வ‌ந்து ஊரில் விட்டு விடுவாளாம். நானும் பாட்டியும் ம‌ட்டும் இன்னும் ஒரு வாரம் த‌னியாக. ‌கேட்ட‌போதே கால் கிலோ பாவற்காயை பச்சையாக சாப்பிட்ட‌து போல‌ இருந்தது.

சாப்பாட்டுத் த‌ட்டை தள்ளி விட்டேன். என் அம்மாவை விட்டு இருக்க வேண்டுமென்ற எரிச்சலில் இருக்க‌வே முடியாது என்று ஓரியாடினேன்.

“ஏன் கண்ணு, எங்கூட நீ இருக்க மாட்டியா”? என்று ஏக்கத்தோடு கேட்டாள் பாட்டி

“உன்ன புடிக்கல போடி, நான் எங்கம்மா கூடத்தான் இருப்பேன் என்று அழுதேன்.

பாட்டிக்கு கடுமையான கோபம், என் அம்மாவை கண்டபடி திட்டினாள்.

“என்னடி இப்படி வளத்தி வெச்சிருக்க எப்படிடீ என்னையே புடிக்காம போகுமா அவனுக்கு?

அட, ஏம்மா அவன் சின்ன பையன் எதோ வெவரம் தெரியாம பேசறான், நீ அதப்போய் பெருசு பண்றே என்று எவ்வளவோ சமாதானம் செய்தும் கோபத்தில் விடிய விடிய துணி தைக்க ஆரம்பித்து விட்டாள்.

நானும் தேம்பியவாறே உறங்கி விட்டேன், திடீரென முழிப்பு வந்தது. அப்போதும் பாட்டி தைத்துக்கொண்டு இருந்தாள்

மூத்திரம் போக வேண்டும் போல இருந்தது, என் அம்மாவை கூப்பிட்டேன். இது அவள் முறை, வர மறுத்து விட்டாள். பிடிவாதக்காரி, வெளியே சென்று பார்த்தேன்.முள்ளுக்காடு, முழுதும் இருள் அப்பி கிடந்தது.

பாட்டியை கேட்கவும் மனமொப்பவில்லை.

“எனக்கு இங்க போர் அடிக்கும்மா” என்றேன்.

என்ன கண்ணு, பாட்டி உன்ன சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போகும் வேணும்கறத வாங்கி தரும், ரகள பண்ணாம இருக்கனுங்கண்ணு என்று சமாதானப் படுத்தி உறங்க வைத்து விட்டாள்

காலையில் கண்விழித்த போது அம்மா சென்று விட்டு இருந்தாள். அப்போதும் கோவத்தில் பாட்டி துணி தைத்துக் கொண்டு இருந்தாள் . அம்மாவின் இன்மையின் வேதனையில் அன்று முழுதும் பாட்டியுடன் தகராறு செய்து கொண்டே இருந்தேன், அவள் எனக்கு எல்லாமும் செய்து தந்தாள், வேண்டியதை எல்லாம் வாங்கித்தந்தாள் ஆனால் எனக்குத்தான் அவளை பிடிக்கவே இல்லை.

மறுநாள் சினிமாவுக்கு அழைத்துப்போனாள், எனக்கு தியேட்டரில் சென்று இருட்டில் படம் பார்க்க பயம். அந்த படத்தில் வேறு, பேய் வருவதைப் போல காட்ட நான் மிகவும் பயந்து போனேன். “அது ஒன்றுமில்லை சும்மனாச்சுக்கு” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி, அன்றைக்கு இரவு காய்ச்சல் வருவதை போலவே இருந்தது. ஒரு நாள் சந்தைக்கும் மற்றொரு நாள் பள்ளிக்கும் கூட்டிப்போனாள். இப்படியாக மீதமிருந்த ஒரு வாரமும் ஒரு வருடத்தை போல ஆமையாய் ஊர்ந்தது. ஊருக்கு கிளம்பும் முதல் நாளும் சினிமாவுக்கு கூட்டிப்போனாள். “அய்யயோ சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே, சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே” என்று எல்லோரும் வேடிக்கை பார்க்க ரகளை செய்ய ஆரம்பித்து விட்டேன். அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் நான் பிடிவாதமாக இருந்து விட படம் பார்க்காமல் திரும்பி விட்டோம். அவள் சரித்திரத்திலேயே தியேட்டர் வரை சென்று படம் பார்க்காமல் திரும்பியது அன்றுதான். இரவு நான் மிகவும் சந்தோசமாக தூங்கினேன்.

மறுநாள் எங்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டு விட,  நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். வந்ததும் வராததும் பசங்களோடு கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். பாட்டி திரும்ப ஊருக்கு போகும் போது வழியனுப்ப பாதி விளையாட்டில் வந்து அம்மா கூடி போனாள். வண்டி வந்து விட எனக்கு வலுக்கட்டாயமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு படியேறினாள். கை அசைக்கும் போது கண் கலங்கினாள். நான் திரும்ப கையசைக்காமல் குஷியாக மறுபடி விளையாட போய் விட்டேன்.பாட்டி மிகவும் வருத்தப்பட்டதாக அம்மா திட்டினாள், நான் செய்வது தப்பு என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

திடீரென்று ஒரு நாள் பாட்டிக்கு  மஞ்சள் காமாலை வந்து விட்டதாக செய்தி வர அம்மாவும் அப்பாவும் போய் கூட்டி வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பாட்டி உடல் நிலை மோசமாகப் போனது. இந்த சூழ்நிலையில் அப்பா, அம்மாவுடன் பாட்டிக்கு  ஒத்தாசையாக இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மா தினமும் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போய் வந்தாள். ஒருநாள் மட்டும் அம்மா என்னையும் கூட்டி போனாள். தீபாவளி அன்று சாப்பாடு  கொண்டு போகும் போது அம்மா என்னையும் கூப்பிட்டாள். “போம்மா நான் வரமாட்டேன் எல்லாருக்கும் இன்னிக்கு தான் ஸ்கூல் லீவ். இன்னிக்கு டிவில நெறைய ப்ரோக்ராம் எல்லாம் போடுவாங்கம்மா. சாயங்காலம் கிரிக்கெட் வேற இருக்கு” என்று சொல்லி நான் போக மறுத்து விட்டேன்.

அம்மா போன போது பாட்டி கடுமையான கோவத்தில் இருந்து இருக்கிறாள்.

“தீபாவளி அன்னிக்கு என்னைய இப்படி போட்டு படுக்க வெச்சு இருக்கிங்களே, என்னைய சினிமாவுக்காச்சும் கூட்டிப் போடி ” என்று அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கிறாள்.

“அட.சரி என்னென படம் ரிலீசுன்னாவது சொல்லு” என்று கேட்டதிற்கு “தெரியல, நான் பாக்கலே”ன்னு வெறுப்போடு சொல்லி இருக்கிறாள் அம்மா

“உன்னைய படிக்க வெச்சதுக்கு ஒரு போஸ்டர் பாத்து இன்னின்ன தியேட்டர்ல இன்னின்ன படம் ஓடுதுன்னு கூட சொல்ல தெரியாதா” என்று வேறு திட்டி இருக்கிறாள்.

சாயங்காலம் கிரிக்கெட்டில் சச்சின் வெளுத்துக் கொண்டு இருக்க, அங்கு பாட்டியின் நிலைமை மிகவும் மோசமாக, காகிதமாய் துவண்டு விட்டாளாம்.

குளுக்கோஸ் ஏற்ற நரம்பு கூட கிடைக்காமல் டாக்டர்கள் அவதிப்பட்டு இருக்கிறார்கள். காமாலை முற்றிப் போய் அங்கு பாட்டியின் உயிர் பிரிந்து விட, அது தெரியாமல் சச்சின் அவுட் ஆனதிற்கு நான் வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன்!

இன்று நான் வளர்ந்து கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறேன். இப்போதெல்லாம் நிறைய சினிமா பார்க்கிறேன், எங்கு வெளியே போனாலும் ஆயிரம் கேள்வி கேட்கும் அம்மா சினிமாவுக்கு போகிறேன் என்றால் மட்டும் மறுவார்த்தை சொல்லமாட்டாள். ஒவ்வொரு முறை சச்சின் அவுட்டாகும் போதுதெல்லாம் என் மனம் மேலும் கனமாகிறது, என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக இதைப் பற்றி ஒரு கதை எழுதி என் பாட்டிக்கு சமர்பிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்!

தாக்கம்: The Way Home

Advertisements

Read Full Post »

%d bloggers like this: