Feeds:
Posts
Comments

engaeppadi

கிபி இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் தமிழகத்தில் தோன்றியிராத காலம்.

ஒரு ஆரம்ப பள்ளியில் நடந்து கொண்டு இருந்த பாட்டு போட்டியில் மூக்கை உறிஞ்சிக்கொண்டு வேடிக்கை பார்த்த ஒரு சுட்டிப்பயல் பிங்கிக்கு நாமும் பாடி கைத்தட்டு வாங்கினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது. மளமளவென ஏறினான், கைகூப்பி கண்ணை மூடி “மிஸ் மிஸ் புடிச்சு புடிச்சு கிள்ளி  கிள்ளி வெக்கிறான் மிஸ்” தொனியில் பூஜையில் அம்மா பாடும் எதோ ஒரு சுலோகம் சொல்ல ஆரம்பித்தான். ஊரே கைகொட்டி சிரித்தது.

பிஞ்சு மொக்கானது, ஆரம்ப பள்ளியில் அடங்காதவன் மேல்நிலையில் அடங்குவானா? ஆறாம் வகுப்பு பாட்டு போட்டி. “உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்” என்று சோகத்தை பிழிந்தான். இந்த முறை கை தட்டு கிடைத்தது. அடுத்தடுத்து வந்தவர்கள் நிதமும் கழுத்தளவு தண்ணீரில் சாதகம் பிடிப்பவர்களாய் அமைந்ததில் இவனுக்கு பெரும் ஏமாற்றம். ஒரு வழியாக பிழிந்த சோகத்தின் பலனாய் மூன்றாம் பரிசு கிடைத்தது. பிறகு கிடைத்த பாட்டு புத்தகத்தை எல்லாம் வாங்கி பாடல்களை பாடி பாடி பழகினான். அடுத்த பாட்டு போட்டியில் “காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்” வரிகளில் பாவனைகளாலே விழுந்து விழுந்து தொழுதான். எவ்வளவு குட்டி காரணமடித்தாலும் எப்போதும் அவனுக்கு கிடைத்தது முத்தான மூன்றாம் இடமே.

காலப்போக்கில், முதல் இடம் என்பது முக்கியமல்ல பாடும் போது கிடைக்கும் சுய ஆசுவாசமே மேலென புரிந்து கொண்டான்.

மொக்கு பூவானது, பட்டயபடிப்பின் போது இவனுக்கு வாய்த்தது கலை நிகழ்சிகளை மறந்தும் அனுமதியா ஒரு பயிலகம். ஒரே ஒரு முறை சினிமா பாடல்களை அனுமதிக்க பல்வேறு தேர்வுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் நேரமின்மை காரணமாக அன்று குட்டிக்கு அந்த மேடை கிடைக்கவில்லை. அந்த ஏக்கங்களை மதிய வேளைகளில் பெஞ்சுகளில் தாளமிட்டபடி இவனையொத்த இசை பிரியர்கள் தங்களுடைய குரலை இந்த உலகுக்கு பறை சாற்றினார்கள். இந்த கட்டத்தில் பெரும்பாலானோருக்கும் உன்னிகிருஷ்ண கீச்சு  குரல் மறைந்து இளையராஜாவின் கனமான குரல் கிடைத்தது.

பருவ காலம் வந்தது, பூ காயானது, பட்டபடிப்பு ஆரம்பித்தது. எந்த பாடல் பாடினாலும் கூடவே பாடி இசையால் மற்றவர்களை இம்சிப்பதும் தொடர்ந்தது. கலை நிகழ்சிகளில் உள்ளூர் இசை குழுவினரை வரவழைத்து மாணவர்கள் பாடினர். தனிமையில் நன்றாக பாடக்கூடிய நண்பர்கள் கூட இசைக்குழுவினரின் தாளத்திலோ சுதியிலோ கோட்டை விட நீண்ட காலங்களுக்கு பிறகு குட்டிக்கு அன்று மேடை கிடைத்தது.

“காதலின் தீபம் ஒன்று” பாடலில் SPB அவனுள் குடி கொள்ள, தாளமும் சுதியும் தப்பாமல் பாடி பார்வையாளர்களை வியப்பிலாழ்தினான். ஒரு காண்டாமிருகத்தின் குரல் வலையிலிருந்து இப்படி ஒரு குயில் பாட்டை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மேடையிலிருந்து இறங்கியபோது நீங்கள் முறையாக எங்கு சங்கீதம் கற்றீர்கள் என்றெல்லாம் கேட்டு சங்கீதத்தின் மீதே சேற்றை வாரி இறைத்தனர் சிலர். என்ற போதும் SPB மட்டுமே அறிந்த ஒரு நேப்பாலி கூர்கா தன்னை மிகவும் ரசிப்பததாக சொன்ன மட்டுமே உண்மையான பாராட்டை நினைத்துக்கொண்டான். அன்றிலிருந்து பாடிப்பாடியே “பூவே உனக்காக” ராமசாமி போல எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் திரிந்தான். எல்லோரும் தூக்கோ தூக்கென்று தூக்க படிப்பு முடித்ததும் நேராக சென்னைக்கு சென்று ஒரு பாடகாராய் விட வேண்டும் என்று கிணற்று தவளையாய் கனவு காண ஆரம்பித்தான்.

வேலை நிமித்தமாய் சென்னையிலிருந்த போது நாலைந்து பேரை சந்தித்ததில்  உலகம் புரிய ஆரம்பித்தது. தனது தராதரம் குளியலறை தாழ்பாளுக்கு உட்பட்டது என உரைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளில் பொட்டு பொடுசுகள் எல்லாம போட்டு பொளந்ததில் தாழ்வு மனப்பான்மை தறிகெட்டு தாண்டவமாடியது.

ஆன போதும் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பதால் அவன் இன்னும் அடங்கியதாய் தெரியவில்லை.

http://soundcloud.com/balaganesh-kandasamy

https://www.smule.com/piliral

http://www.youtube.com/watch?v=U2HwjIfzark – மலையோரம் வீசும்

http://www.youtube.com/watch?v=kwFxLxE-hu0 – காதல் சொல்வது

http://www.youtube.com/watch?v=5iNY4O9cmLc – வெண்மதி வெண்மதியே

இது போக தாக்குதல் வேறு தொடருமென அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டு இருக்கிறான். ஆகவே மக்கழே  உங்களை நான் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் கண்ட இடங்களில் எல்லாம் சென்று அவனை ஒரு வழி செய்யவும்!

– பொது நலன் கருதி வெளியிடுவோர்….

Advertisements

“கூந்தலில் வெள்ளியும் மனதில் தங்கத்தையும் கொண்டவர்கள் பாட்டிகள்” – யாரோ

புளியம்பட்டியில் வந்து இறங்கியபோது வெயில் உக்கிரமாக வெறித்துக் கொண்டு இருந்தது. மேலே வேறு தெரியாமல் பார்த்து விட்டேன், இருட்டிக் கொண்டு வந்தது. நடத்துனரிடம் சில்லறை வாங்கி கொண்டு இருந்த என் அம்மாவை தேடினேன்.

“இன்னும் எவ்வளவு நேரம்மா ஆகும்”

“வந்தாச்சு சாமி, 18Bல ஏறுனா இன்னும் அரைமணி நேரத்துல போயிறலாம்”

“போம்மா. அங்க வெளையாட யாருமே இருக்க மாட்டாங்கம்மா, வீட்டுக்கே போலாம்”

“கண்ணு, மறுபடி ரகள பண்ண கூடாது, நாம எப்பவாவது தானே பாட்டிய பாக்க போறோம்” திங்கறதுக்கு ஏதாவது வாங்கிக்கலாமா”?

“என்னக்கொன்னும் வேண்டாம்.. நீயே தின்னுக்கோ..போம்மா…”

18B வந்தது, வேகமாக ஏறி ஜன்னலோர சீட்டை பிடித்து கொண்டேன். வண்டியில் கூட்டமே இல்லை, அம்மா ஏதோ படித்து கொண்டு வந்தாள். ஜன்னலில் தலை வைத்து வேகமாய் என்னை கடந்து போய்க்கொண்டு இருந்த தென்னை மரங்களை எண்ணிக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்னால் என் பாட்டி ஊருக்கு போனபோது பொழுதே போகவில்லை. அங்கு யாருமே கிரிக்கெட் விளையாடுவதில்லை. பெரும்பாலும் பெண் பிள்ளைகளே இருந்தார்கள், எனக்கு கூட விளையாடவும் பிடிக்கவில்லை.

ஊரே மயானக்காடாய் இருக்கும். தூரத்தில் எதோ ஒரு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் மோட்டார் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டே இருக்கும் குருவி,குயில் என அனைத்து ஜீவராசிகளின் ஒலியையும் துல்லியமாக கேட்கமுடியும். எங்குதான் இருப்பார்களோ, பகலில் கூட ஒருவர் இருந்ததில்லை.தனிமையில் தலையே வெடித்து விடும் போல் இருக்கும்.

பாட்டி ஊரில் உயர்நிலை பள்ளியின் தையல் ஆசிரியை. என் அம்மா சிறுவயதில் இருந்த போதே தாத்தா இறந்து விட்டிருக்கிறார். அதன் பின் அம்மாவை தனி ஆளாய் வளர்த்து இன்று அவள் ஒரு உத்யோகத்தில் இருப்பதற்கான காரணகர்த்தா. ஆனால் பாட்டி சரியான சினிமாப்பைத்தியம். அவளுக்கு எல்லாமே சினிமாதான். அந்த கிராமத்தில் கொட்டகை ஏதும் இல்லாததால் படம் பார்க்க வேண்டுமானால் பக்கத்துக்கு ஊரான புளியம்பட்டி ஒன்று தான் கதி. அதுவும் மாலைக் காட்சி 5 மணிக்கெல்லாம் துவங்கி விடும். பள்ளிக்கூட மணி அடிக்கிறதோ இல்லையோ 18Bஇல் ஏறிப் போய்விடுவாள். போஸ்டர் மாறினால் பஸ் டிரைவரே ஒலி எழுப்பி சிரத்தையாக அழைத்துச் சென்று, இரவு கடைசி முறையில் அழைத்து வந்து இறக்கிவிடுவார்.

தீபாவளி, பொங்கல் வந்தால் வெகு சிறப்பு, பக்கத்து டவுனில் உள்ள சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கி எல்லா புதுப்படங்களையும் காட்சி வாரியாக பார்த்து விட்டுத்தான் திரும்புவாளாம். அப்படி மொட்டை வெய்யிலில் சாப்பிடாமல் முரட்டுகாளை பார்க்க போன போது வரிசையில் மயக்கம் போட்டு விழுந்து வைத்திருக்கிறாள் என்று அம்மா பல முறைசொல்லி இருக்கிறாள். “நீ என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நெனைச்சுகிட்டு இருக்கியா” என்று அம்மாவும் திட்டாத நாள் இல்லை.

வண்டி எதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது. நின்ற இடத்தை சுற்றிலும் பச்சை பசேலென இருந்தது. எங்கள் ஊரில் மழைக்காலத்தில் மட்டுமே இப்படி இருந்து பார்த்திருக்கிறேன். குட்டையாய் மஞ்சள் செடி போல ஏதோ இருந்தது. அதற்குள் என் அம்மாவை யாரோ ஒரு முதியவர் அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார்.

“எப்புடி சாமி இருக்கற, இதேன் பையனா” என்று என் கன்னத்தை தடவ வந்தார். கைகள் சொரசொரவென இருந்தன,விருட்டென முகத்தை திருப்பிக்கொண்டேன்.

“அம்மா, இது மஞ்சச்செடியம்மா” என்று கேட்க

“இது பொகீலச்செடி சாமி” என்று அந்த முதியவர் சொல்ல மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

அம்மாவுக்கு என் செய்கை பிடிக்கவில்லை, “என்ன பழக்கம் பழகி இருக்க? பெரியவங்க பேசறாங்கல்ல” என்றாள்

“அட, விடு சாமி. சின்னப்புள்ளய ஏந்திட்டற” என்று  அந்த பெரியவர் என் அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, என் அப்பா ஏன் வரவில்லை? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

பனியன் மட்டும் தெரிய‌சட்டையை முழுமையாக திறந்து விட்டபடி “அந்த கூடய அந்தப்பக்கம் எடும்மா” என்றபடி கியரை போட்டார் ட்ரைவர்.

என் அப்பாவும் ஒரு ட்ரைவர்தான், பல முறை அவரோடு பஸ்ஸில்  போயிருக்கிறேன் யாரையாவது திட்டிக் கொண்டே அப்படி கியரை போடும் போது ஒரு கதாநாயகனாகவே காட்சி அளிப்பார். வளர்ந்து பெரியவனானால் நானும் ஒரு ட்ரைவராகவே வேண்டும் என்று எப்போதும் எனக்குள் ஒரு ஆசை

என் பாட்டி பெரும் பிடிவாதமும், வைராக்கியமும் கொண்டவள். என் அப்பாவும் இதற்கெல்லாம் சளைத்தவரா என்ன?

அவர்களுக்குள் பிரச்சனை, பேசிக்கொள்வதே இல்லை என்று அம்மா பல முறை என்னிடம் சொல்லி அழுது இருக்கிறாள்.

“கோட்டுபாளையம் வந்தாச்சு எறங்குங்க”

நானும் அம்மாவும் இறங்கினோம்.

பஸ் ஸ்டான்டின் அருகே ஒரு வாட்டர் டாங்கு அதை ஒட்டி ஒரு நீளமான ஆனால் குறுகலான தெரு, இடதும் வலதுமாய் பழைய வீடுகள் மொத்தமாய் ஒரு ஐம்பது வீடுகள் இருக்கும் போல. அந்த தெரு சென்று முடியும் இடத்தில் ஒரு குடிசையும் அதற்குப் பின் புகையிலை தோட்டங்கள்.

வழியெங்கும் ஆளாளுக்கு விசாரித்தார்கள்.எல்லோருக்கும் பதில் சொல்லிவிட்டு பாட்டி வீட்டுக்கு வரும் போது பாட்டி குமுதம் படித்துக் கொண்டு இருந்தாள்.

என்னை பார்த்ததும் வந்து கட்டிப் பிடித்து முத்தம் தந்தாள், வெற்றிலை வாசத்தோடு பிசுபிசுப்பும் கன்னத்தில் ஒட்டியது, நான் திமிறிக்கொண்டு விலகினேன்.

“என்னடி, உன் மகன் ரொம்பத்தான் சிலித்துகுறான்” என்றாள்.

சுற்றி பார்த்தேன், ஒரு சின்ன டிவி, ஒரு டேப் ரிக்கார்டர் இருந்தது, வாரப்பத்திரிக்கைகள், ரமணிசந்திரன், பாலகுமாரன், தேவிபாலாவின் நாவல்கள் நிரம்பி இருந்தன. அப்புறம் பாட்டியின் பகுதி நேர தொழிலான தையல் மெசின்.

அம்மாவும் மகளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், பதில் தெரிந்து இருந்தாலும் இடையே ஏன் அப்பா வரவில்லை என்ற காரணத்தை பாட்டி கேட்டு தெரிந்து கொண்டாள்.

வீட்டிலிருந்த காம்ப் கட்டிலில் ஒரு காலை மடித்து விட்டு அதை சருக்கல் மரமாக்கி ஏறி, சிறிது விளையாடி கொண்டு இருந்தேன்.

இரவு வரைக்கும் நேரம் நத்தையாய் ஊர்ந்தது.

சாப்பிட்டு கொண்டு இருந்த‌போதுதான் என் அம்மா அந்த குண்டை தூக்கிப் போட்டாள்.

ம‌று நாள் காலை அவ‌ள் ம‌ட்டும் கிளம்பி விடுவாளாம் இன்னும் ஒரு வார‌ம் க‌ழித்து பாட்டி கொண்டு வ‌ந்து ஊரில் விட்டு விடுவாளாம். நானும் பாட்டியும் ம‌ட்டும் இன்னும் ஒரு வாரம் த‌னியாக. ‌கேட்ட‌போதே கால் கிலோ பாவற்காயை பச்சையாக சாப்பிட்ட‌து போல‌ இருந்தது.

சாப்பாட்டுத் த‌ட்டை தள்ளி விட்டேன். என் அம்மாவை விட்டு இருக்க வேண்டுமென்ற எரிச்சலில் இருக்க‌வே முடியாது என்று ஓரியாடினேன்.

“ஏன் கண்ணு, எங்கூட நீ இருக்க மாட்டியா”? என்று ஏக்கத்தோடு கேட்டாள் பாட்டி

“உன்ன புடிக்கல போடி, நான் எங்கம்மா கூடத்தான் இருப்பேன் என்று அழுதேன்.

பாட்டிக்கு கடுமையான கோபம், என் அம்மாவை கண்டபடி திட்டினாள்.

“என்னடி இப்படி வளத்தி வெச்சிருக்க எப்படிடீ என்னையே புடிக்காம போகுமா அவனுக்கு?

அட, ஏம்மா அவன் சின்ன பையன் எதோ வெவரம் தெரியாம பேசறான், நீ அதப்போய் பெருசு பண்றே என்று எவ்வளவோ சமாதானம் செய்தும் கோபத்தில் விடிய விடிய துணி தைக்க ஆரம்பித்து விட்டாள்.

நானும் தேம்பியவாறே உறங்கி விட்டேன், திடீரென முழிப்பு வந்தது. அப்போதும் பாட்டி தைத்துக்கொண்டு இருந்தாள்

மூத்திரம் போக வேண்டும் போல இருந்தது, என் அம்மாவை கூப்பிட்டேன். இது அவள் முறை, வர மறுத்து விட்டாள். பிடிவாதக்காரி, வெளியே சென்று பார்த்தேன்.முள்ளுக்காடு, முழுதும் இருள் அப்பி கிடந்தது.

பாட்டியை கேட்கவும் மனமொப்பவில்லை.

“எனக்கு இங்க போர் அடிக்கும்மா” என்றேன்.

என்ன கண்ணு, பாட்டி உன்ன சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போகும் வேணும்கறத வாங்கி தரும், ரகள பண்ணாம இருக்கனுங்கண்ணு என்று சமாதானப் படுத்தி உறங்க வைத்து விட்டாள்

காலையில் கண்விழித்த போது அம்மா சென்று விட்டு இருந்தாள். அப்போதும் கோவத்தில் பாட்டி துணி தைத்துக் கொண்டு இருந்தாள் . அம்மாவின் இன்மையின் வேதனையில் அன்று முழுதும் பாட்டியுடன் தகராறு செய்து கொண்டே இருந்தேன், அவள் எனக்கு எல்லாமும் செய்து தந்தாள், வேண்டியதை எல்லாம் வாங்கித்தந்தாள் ஆனால் எனக்குத்தான் அவளை பிடிக்கவே இல்லை.

மறுநாள் சினிமாவுக்கு அழைத்துப்போனாள், எனக்கு தியேட்டரில் சென்று இருட்டில் படம் பார்க்க பயம். அந்த படத்தில் வேறு, பேய் வருவதைப் போல காட்ட நான் மிகவும் பயந்து போனேன். “அது ஒன்றுமில்லை சும்மனாச்சுக்கு” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி, அன்றைக்கு இரவு காய்ச்சல் வருவதை போலவே இருந்தது. ஒரு நாள் சந்தைக்கும் மற்றொரு நாள் பள்ளிக்கும் கூட்டிப்போனாள். இப்படியாக மீதமிருந்த ஒரு வாரமும் ஒரு வருடத்தை போல ஆமையாய் ஊர்ந்தது. ஊருக்கு கிளம்பும் முதல் நாளும் சினிமாவுக்கு கூட்டிப்போனாள். “அய்யயோ சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே, சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே” என்று எல்லோரும் வேடிக்கை பார்க்க ரகளை செய்ய ஆரம்பித்து விட்டேன். அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் நான் பிடிவாதமாக இருந்து விட படம் பார்க்காமல் திரும்பி விட்டோம். அவள் சரித்திரத்திலேயே தியேட்டர் வரை சென்று படம் பார்க்காமல் திரும்பியது அன்றுதான். இரவு நான் மிகவும் சந்தோசமாக தூங்கினேன்.

மறுநாள் எங்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டு விட,  நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். வந்ததும் வராததும் பசங்களோடு கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். பாட்டி திரும்ப ஊருக்கு போகும் போது வழியனுப்ப பாதி விளையாட்டில் வந்து அம்மா கூடி போனாள். வண்டி வந்து விட எனக்கு வலுக்கட்டாயமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு படியேறினாள். கை அசைக்கும் போது கண் கலங்கினாள். நான் திரும்ப கையசைக்காமல் குஷியாக மறுபடி விளையாட போய் விட்டேன்.பாட்டி மிகவும் வருத்தப்பட்டதாக அம்மா திட்டினாள், நான் செய்வது தப்பு என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

திடீரென்று ஒரு நாள் பாட்டிக்கு  மஞ்சள் காமாலை வந்து விட்டதாக செய்தி வர அம்மாவும் அப்பாவும் போய் கூட்டி வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பாட்டி உடல் நிலை மோசமாகப் போனது. இந்த சூழ்நிலையில் அப்பா, அம்மாவுடன் பாட்டிக்கு  ஒத்தாசையாக இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மா தினமும் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போய் வந்தாள். ஒருநாள் மட்டும் அம்மா என்னையும் கூட்டி போனாள். தீபாவளி அன்று சாப்பாடு  கொண்டு போகும் போது அம்மா என்னையும் கூப்பிட்டாள். “போம்மா நான் வரமாட்டேன் எல்லாருக்கும் இன்னிக்கு தான் ஸ்கூல் லீவ். இன்னிக்கு டிவில நெறைய ப்ரோக்ராம் எல்லாம் போடுவாங்கம்மா. சாயங்காலம் கிரிக்கெட் வேற இருக்கு” என்று சொல்லி நான் போக மறுத்து விட்டேன்.

அம்மா போன போது பாட்டி கடுமையான கோவத்தில் இருந்து இருக்கிறாள்.

“தீபாவளி அன்னிக்கு என்னைய இப்படி போட்டு படுக்க வெச்சு இருக்கிங்களே, என்னைய சினிமாவுக்காச்சும் கூட்டிப் போடி ” என்று அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கிறாள்.

“அட.சரி என்னென படம் ரிலீசுன்னாவது சொல்லு” என்று கேட்டதிற்கு “தெரியல, நான் பாக்கலே”ன்னு வெறுப்போடு சொல்லி இருக்கிறாள் அம்மா

“உன்னைய படிக்க வெச்சதுக்கு ஒரு போஸ்டர் பாத்து இன்னின்ன தியேட்டர்ல இன்னின்ன படம் ஓடுதுன்னு கூட சொல்ல தெரியாதா” என்று வேறு திட்டி இருக்கிறாள்.

சாயங்காலம் கிரிக்கெட்டில் சச்சின் வெளுத்துக் கொண்டு இருக்க, அங்கு பாட்டியின் நிலைமை மிகவும் மோசமாக, காகிதமாய் துவண்டு விட்டாளாம்.

குளுக்கோஸ் ஏற்ற நரம்பு கூட கிடைக்காமல் டாக்டர்கள் அவதிப்பட்டு இருக்கிறார்கள். காமாலை முற்றிப் போய் அங்கு பாட்டியின் உயிர் பிரிந்து விட, அது தெரியாமல் சச்சின் அவுட் ஆனதிற்கு நான் வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன்!

இன்று நான் வளர்ந்து கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறேன். இப்போதெல்லாம் நிறைய சினிமா பார்க்கிறேன், எங்கு வெளியே போனாலும் ஆயிரம் கேள்வி கேட்கும் அம்மா சினிமாவுக்கு போகிறேன் என்றால் மட்டும் மறுவார்த்தை சொல்லமாட்டாள். ஒவ்வொரு முறை சச்சின் அவுட்டாகும் போதுதெல்லாம் என் மனம் மேலும் கனமாகிறது, என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக இதைப் பற்றி ஒரு கதை எழுதி என் பாட்டிக்கு சமர்பிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்!

தாக்கம்: The Way Home

சிகப்பு விழுந்தது.

முகில் கலைந்து காட்சிகள் விரியத்துவங்கியது!

அவிழ்கிற கால் சட்டையை

பிடித்து கொண்டு நொடியில்

தோன்றி மறையும் பாவ முகத்தோடு

ஒரு விளையாட்டை போல

பிச்சை எடுக்கும் சிறுவர்கள்.

டோரா பலூனை வைத்து

விளையாட வேண்டிய வயதில்

அதை விற்றுக் கொண்டு

ஒரு சிறுமி.

சிற்றுந்தின் உள்ளிருந்து

அதை  வாங்க அடம்பிடிக்கும் குழந்தை

சிடுசிடுவென் மறுக்கும் தந்தை.

யாசகம் கேட்டு

என் பாட்டியின் வயதையொத்த

மூதாட்டியின் நச்சரிப்பு.

மஞ்சள் விழுந்தது.

சலித்துக்கொண்டே பிச்சையிட்டேன்

முகமலர்ந்தவள் எதிர்பாரா கணத்தில்

என் தலையில்

கை வைத்து ஆசிர்வதிக்க

உடல் சிலிர்த்து 

உள்ளுக்குள்  என்னவோ செய்ய

பச்சை விழுந்தது.

தாக்கம்: பிரவீன்         தலைப்புக்கு நன்றி:ஜி

ஜன்னல் துவாரத்தின் வழி  சூரிய கற்றையில்
என்னறை தூசிகள் நடனம்
சுயத்தை இழந்து கொண்டிருக்கும் உணவு பொட்டலத்தில்
எறும்புகளின் படையெடுப்பு
என் வியர்வை அணிந்த உடை குவியலில்
கொசுக்களின் இளைபாறல்
மின்விசிறியின்  சுழற்சியென்
கண்ணின்மணிகளில்
முன்னெப்போதிலும்  ஈக்களின்
அரவணைப்பில்
என்னுடல் குளிர்ச்சிக்கும்
உஸ்னப்படுத்த முயற்சிக்கும் வெறுந்தரையின்  தோல்விக்கும்
மத்தியில்
யாருக்கேனும்  தெரிவிப்பீரா
நான் அழுகிக்கொண்டு இருக்கிறேனென்று!
=
தாக்கம்: பிரவீன் Image courtesy-http://fineartamerica.com

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்… திடும்… திடும்…

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

 

வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார்.

– ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

hitchcock

பெரும்பாலும் “மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி,  அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக்.

McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன?

பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு சின்ன மைக்ரோ பிலிம்மாகவோ  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமீபத்திய உதாரணம் “தசாவதாரம்” படத்தில் கமல்(கள்) துரத்தும் வயல் (phial).

ஏன், நமக்கு வரும் பரிசு பொருள்கள் கூட ஒரு மெக்குஃபின் தான். உள்ளே இருக்கும் பரிசு பொருளை விட அதை நாம் தபால்காரரிடம்  காத்திருந்து பெற்று, அந்த தபாலை பிரிக்கும் அந்த விறுவிறுப்பும் குறுகுறுப்பும் அந்த பரிசு பொருளை விடவும் அதிகம் தானே?

இனி இந்த யுக்தியை கொண்டு அவர் இயக்கிய திரை வரிசையை பாப்போம்.

PSYCHO (குளித்து விட்டு வந்து பார்க்க)

psycho

ஹிட்ச்காக் இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படம்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை.

அரிசோனா மாகாணத்தில் வாழும் மேரியானுக்கு, (Janet leigh) தன் காதலன் சாமை (John Gavin) மணந்து கொள்வதில் ஒரு பிரச்சனை!  அவனுடைய முன்னால் மனைவிக்கு  திருப்பிதர வேண்டிய கடனும், ஜீவனாம்சமாக பெருந்தொகையும் (நமது நாட்டில் உள்ளதை போல ஐந்நூறு,ஆயிரமல்ல வருமானத்தில் சரி பாதி) கொடுக்க  நிதிநிலை சரியில்லாதது.இதற்க்காக தான் வேலை பார்க்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கவேண்டிய  40,000 டாலரை எடுத்து கொண்டு(திருடிக்கொண்டு) தன் காதலனை தேடி கலிபோர்னியா விரைகிறாள்.

பதட்டத்துடன் செல்லும் அவள் நெடுநேர பயணக்களிப்பில்   நெடுஞ்சாலையிலேயே தூங்கி விடுகிறாள்.  நடு நசியில் தூங்கிக்கொண்டிருப்பவளை ஒரு காவல் அதிகாரி எழுப்பி இவ்வாறு செய்யக்கூடாதென்றும், வழியில் உள்ள ஏதோனும் மோட்டலில் தங்குமாறு அறிவுறுத்துகிறார். பின் அவளது நடவடிக்கை சர்ச்சை அளிக்கவே தொடரவும் செய்கிறார். இதனால் பதட்டமடைந்த மேரியான், இந்த காரை விற்று வேறு புதிய கார் வாங்கி தன் பயணத்தை தொடர்கிறாள். அங்கும் அந்த போலீஸ் அதிகாரி வர, நெடுஞ்சாலையில் இருந்து விலகி வேறொரு பாதையில் செல்கிறாள். அங்கு தனிமையில் ஆள் அரவமற்று, அமானுஷ்யமாக காட்சியளிக்கிற ஒரு வீடும் அதை ஒட்டியே ஒரு மோட்டல் இருப்பதையும் காண்கிறாள். மழை வேறு பெய்து கொண்டு இருப்பதால் வழி இல்லாமல், யோசனைக்கு பின் அங்கு தங்க முடிவெடுக்கிறாள்.

அந்த விடுதியின் முதலாளி நார்மன் (Antony Perkins), அங்கு புதிதாக ஒரு புறவழிச்சாலை போடப்பட்டதால் தன் விடுதிக்கு வாடிக்கையாளர்கள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாகவும், இங்கு தனது தாயாருடன் வசிப்பதாகவும் கூறுகிறான். வெளியே மழை பெய்து கொண்டு இருப்பதால் தானே இரவு உணவு கொடுப்பதாகவும் வீட்டுக்கு சொல்கிறான்.

அங்கு நார்மனும் அவனது தாயாரும் சண்டையிடுவதையும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல கத்துவதும், மேரியான் பற்றி தரகுறைவாக பேசுவதையும் கேட்க நேரிடுகிறது. பின் உணவருந்தும் போது அதை பற்றி விவாதிக்கையில்  பிதற்றிக்கொண்டு இருக்கும் நார்மனின் தாயாரை ஒரு காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்துகிறாள். கோபப்பட்ட நார்மன் தனது தாயார்தான் தனக்கு உற்ற  தோழி எனவும், எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும் எனக்கூறுகிறான்.

உணவருந்திய பின் தனது அறைக்கு வந்த இரவு உடைக்கு மாறுகிறாள். அவள் ஆடை மாற்றுவதை பக்கத்து அறையின் ஒரு துவாரம் வழியாக நார்மன் பார்க்கிறான். சிறுது நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுகிறான்.மேரியான் செலவு கணக்கை பார்த்து விட்டு அங்கிருக்கும் ஒரு செய்தித்தாளில் பணத்தை சுற்றி வைத்துவிட்டு பிறகு குளிப்பதற்காக செல்கிறாள்..

மேரியான் குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது திரைசீலைக்கு பின் ஒரு பெண்ணின் உருவம் மெதுவாக கதவை திறந்து உள்ளே வருகிறது. பிறகு கூர்மையான் கத்தியால் பலமுறை பாய்ச்சி கொல்கிறது. திரைசீலையை பிடித்த படி  அங்கேயே விழுந்து மடிகிறாள் மேரியான். சற்றைக்கெல்லாம் நார்மன் தனது தாயாரை கடிந்து கொள்ளும் குரல் கேட்கிறது. வந்து பார்க்கும் நார்மன் அவளது சடலத்தையும், உடமைகளையும் (அறியாமல் பணம் சுற்றி உள்ள செய்தித்தாளையும் சேர்த்து) அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே உள்ள ஒரு குளத்தில் காரை தள்ளி விடுகிறான்.

மேரியானின் தங்கை லிலாவும், களவாடிய பணத்தை கைப்பற்ற மேரியானின் முதலாளியால் நியமிக்கபட்ட  துப்பறிவாளர் அர்போகாஸ்டும், மேரியானை விசாரித்து சாமை அடுத்தடுத்து அவனது ஹர்ட்வேர் கடையில் வந்து விசாரிக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அர்போகாஸ்ட், நார்மனின் விடுதிக்கு சென்று விசாரணை நடத்துகிறார். அவனது தாயாரையும் பார்த்து சில கேள்விகள் கேட்கவேண்டுமென சொல்கிறார்.ஆனால், தொடர்ந்து மழுப்பும் நார்மனின் பதிலில் திருப்தி அடையாத அவர்.இந்த விஷயத்தை லிலாவுக்கு தொலைபேசியில் சொல்லிவிட்டு, விரைவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு நார்மனுக்கு தெரியாமல் அவன் வீட்டுக்குள் நுழைகிறார்.

மாடி படிகளில் மெதுவாக ஏறிகொண்டிருக்கும் போது திடீரென வரும் ஒரு பெண்ணுருவத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யபடுகிறார். அர்போகாஸ்டை தொடர்ந்து அந்த விடுதியில் லிலா வும் சாமும் கணவன் மனைவி போல் அங்கு தங்குகின்றனர்.

அவர்களும் அந்த பெண்ணுருவத்துக்கு பலி ஆனார்களா? அல்லது கண்டுபிடித்து மர்மத்தை விடுவித்தார்களா ? என்பதை குறுந்தகட்டில் காண்க…

இந்த திரைப்படத்தில் 40,000 டாலர் தான்  மெக்குஃபின்.

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த படத்தில் பின்னணி இசையும் (சில நேரங்களில் அமைதியும்) திகிலூட்டுவதாக அமைந்திருக்கும்.

மேலும் இந்த படத்தில் வரும் ஜேனட்டின் குளியலறை கொலை காட்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான, பிரபலமான காட்சி. இது பிராவோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உலகத்தின் 100 உறைய வைக்கும் சினிமா காட்சிகளின் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

காட்சியின் உக்கிரத்தை கூட்ட, 90 சதவிகித காட்சியையும், ஜேனட்டின் முக பாவங்களையும்,  கத்தியின் வீச்சையும், க்ளோஸ்-அப் ஷாட்களில் வைத்திருக்கிறார் ஹிட்ச்காக்.அவ்வளவு பயங்கரமாக இந்த சீனில் கத்தி ஒருமுறை கூட மேரியானின் உடலில் பாய்வதை போல ஒரு காட்சி இருக்காது.

மொத்தம் 45 வினாடிகளில், 78 விதமான கோணங்களில் (78 seperate piece of films) படமாக்கபட்டு இருக்கிறது.

கீழே குறிப்பிட்டு உள்ளதை போல

shower

தண்ணீரை மேல் நோக்கி நேராக படமாக்க, ஒரு நீளமான லென்ஸ்சை கீழே பொருத்தி, பின் ஷவரின் உள் துளைகளை அடைத்து விட்டு, தண்ணீர் லென்சுக்கு வெளியே விழும் படி எடுத்திருகிறார்கள்.

கத்தி உடலில் பாயும் சத்தத்தை ஒலிப்பதிவு செய்ய பல சோதனைகளுக்கு பிறகு கசாபா எனப்படுகிற பழத்தில் கதியை பாய்ச்சி பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜேனட் கொலையாகி கீழே விழுந்த பிறகு ரத்தம் (சாக்லேட் சிரப்) தண்ணீரோடு கலந்து சுழற்ச்சியோடு பாத்டப்பின் டிரைன் ஹோல் வழியே வெளியேறுவதை க்ளோஸ் அப்பில் கட்டிய படி அடுத்த சாட் அதே சுழற்ச்சியில் ஜேனட்டின்  குத்திட்ட விழிகளில் இருந்து கேமரா சூம்  அவுட் ஆகும். பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் போட்டோ சுழல்வதை போல  போல இருக்கும் அந்த காட்சி, ஜேனட்டின் தலையில் இருந்து ஒரு துளி நீர் சொட்டும் போது தான் அது வீடியோ என்பது புலப்படும். அவ்வளவு தத்ருபமான நடிப்பு!

இந்த படம் வெளியான காலகட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணிகள், குளிக்கவே பயந்திருக்கிறார்கள். அப்போது ஒரு தந்தையிடம் இருந்து  தனது மகள் குளித்து சில நாட்கள் ஆகிறதென்று எல்லாம் உங்களால் தான் என்று கோபமான கடிதம் வந்திருக்கிறது. குறும்புக்கு பெயர் போன ஹிட்ச்காக் அவருக்கு இப்படி பதிலளித்தார். “முதலில் அவளை உலர் சலவையகத்துக்கு அனுப்புங்கள்” என்று.

த்ரில்லர் பட பிரியர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்!

அதாரம்: காண்பனுபவம், இணையம்.

 

விரைவில் எதிர்பாருங்கள்!!!

untitled1

 

 

பின்குறிப்பு/சுய விளம்பரம்:

 

youthful vikatan

‘நகங்களை இழக்க விருப்பமுள்ளவர்களுக்கு! ‘ கட்டுரையை  ‘குட்’ … Blogs பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள்!

“இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக  இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் காமெடி படங்களே எடுப்பதில்லை?”


“ஏன், நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே மிகப்பெரிய காமெடி தானே!”

– ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

alfred-hitchcock

நடு நசி, யாருமற்ற தனிமை, ஹிட்ச்காக்கின் சினிமா!

இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கென்று நான் வகுத்துக்கொண்ட கட்டமைப்பு இது. காதுகளுக்கு ஹெட் போன் அணிந்தால் கூடுதல் சிறப்பு.

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் பிதாமகர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்த்தால்தான் இப்போதெல்லாம்  வார இறுதி முழுமை பெற்றதாக ஆகிறது.சனிகிழமை இரவு ஒன்பது மணி ஆனாலே கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆம், ஹிட்ச்காக்கின் சினிமா- ஒரு போதைதான்.

சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழ்நிலைகளில் கிடத்துபவையாக இருக்கும் இவரது திரைபடங்களில் வசனங்களை விட காட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இவரது படங்கள் ஒரு கொலை, பின் அதை கண்டுபிடிக்கும் சம்பவங்களாக மட்டும் அல்லாமல் கொலையாளின் கொலைக்கு முன்/பின் சுபாவங்கள், நடவடிக்கைகள், பேச்சு போன்றவற்றை உளவியல் ரீதியாக அணுகுபவையாக இருக்கும். கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தும் விதத்திலும் தனது ஒவ்வொரு திரைபடங்களிலும் ஏதேனும் ஒரு பரிசோதனை/புதிய முயற்சியை மேற்கொள்வார்.

கிட்டதட்ட அரை நூற்றாண்டு கால சினிமா வாழ்வில் 50க்கும் மேற்பட்ட திரைபடங்களை இவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபல்யமானவை.

1899ல் கிழக்கு லண்டனில் பிறந்த இவர் ஆரம்ப காலங்களில் டிசைனராக ஒரு கேபிள் கம்பெனியில் பணியாற்றினார். பின்பு “பாரமௌன்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்தில் டைட்டில் கார்டு டிசைனராக பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் “Always Tell Your Wife” படத்தை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் நோய் வாய்ப்பட, மீதி படத்தை இயக்க வேண்டிய வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் இயக்கிய “Number 13” படமும் பாதியில் கைவிடப்பட இறுதியாக இவரது முழுமையான இயக்கத்தில் 1925ல் மௌன திரைப்படம் “Pleasure garden” வெளிவந்தது.ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.

அடுத்து வெளி வந்த  “The Lodger” வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடல்லாமல் இவரை முதல் தர இயக்குனராக அனைவரையும் உற்று நோக்க செய்தது.இந்த கால கட்டத்தில் தனது உதவி இயக்குனரான “அல்மா ரேவில்”ஐ 1928ல் மணந்தார்.

மெல்ல மௌன படங்களில் இருந்து தனது முதல் ஒலிஒளி திரைப்படமான “Black Mail” ஐ 1929ல் இயக்கினார். அப்போது அது  அவருக்கு பத்தாவது படம்.அடுத்தடுத்து “The Man who knew too much” (1934) , “The 39 steps” (1935) படங்களின் இமாலய வெற்றியின் மூலம் அவருக்கென்று ஒரு பாணியோடு, தனி தன்மையுடன்  பிரிட்டன் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆனார்.

பின்பு  “The Lady Vanishes” (1938)இன் மற்றுமொரு வெற்றியை தொடர்ந்து 1939களின் முடிவில் ஆஸ்கார் விருதுடன் பெருவெற்றி பெற்ற “Gone with the wind (1939)ன் ஹாலிவுட் பட  தயாரிப்பாளர் David O. Selznick இவரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து இவரை அமெரிக்காவுக்கு அழைத்து கொண்டார்.

அவரது முதல் ஹாலிவுட் படமான “Rebecca” (1940)க்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து Shadow of a doubt (1943), Life boat (1943), Spell bound (1945),  Notorious(1946), Rope (1948), போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

ஹிட்ச்காக்கின் பொற்காலம் என வர்ணிக்கப்பட்ட 1950களில் தான் அவரது புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார். Strangers on a train (1951), I confess (1953), Dial M for Murder (1954), Rear window (1954), தன்னுடைய மறுபதிப்பான The Man who knew too much (1956), Vertigo (1958), North by Northwest (1959) போன்ற வெற்றி படங்களை எடுத்தார்.

1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதும், பிரிட்டிஷ் குடியுரிமையையும் தக்க வைத்துக்கொண்டார்.

அறுபதுகளில், அவரது கிளாசிக் த்ரில்லரான  Psyco(1960), The Birds (1963),  Marnie (1964), Torn curatin (1966), Topaz (1969) என்று மேலும் ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

சினிமாவில் தீவிரமாக இருந்த போதும் Alfred Hitchcock Presents (1955-62) மற்றும்  The Alfred Hitchcock Hour (1962-1965) என்று இரண்டு தொலைகாட்சி தொடரையும் இயக்கினார்.

தனது இறுதி படமான Family Plot (1976)க்கு முன்பு Frenzy (1972) என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

பின்பு 1979 ல் இங்கிலாந்து அரசு இவருக்கு “Sir” பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளரும் இயக்குனர்களால் அதிகம் ஆராயப்பட்ட, படிக்கப்பட்ட ஒரு இயக்குனராக திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு தனது எண்பதாவது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ்சில்  உயிர் இழந்தார்.

பொதுவாக மக்களுக்கு பயத்தின் மேல் உள்ள ரகசிய ஆசையே (பெருகி வரும் தீம் பார்க்களின் எண்ணிக்கையே இதற்க்கு சான்று) இவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம்.

ஏனெனில் நமக்கு எப்போதும் பயம் என்ற குளிர்ந்த நீரில் காலை விட்டு பார்ப்பதில் ஆனந்தம்தானே?

ஒரே லொக்கேசன்

ஒரே ஒரு பாட்டுக்கு நாலு கோடியும், நாப்பது லொக்கேசனும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், ஒரு முழு திரைப்படமும் எடுக்க அவருக்கு ஒரு ஒரு லொக்கேசன் இருந்தாலே போதும். இதற்க்கு உதாரணமான திரைபடங்களை வரிசையாக அடுக்கலாம்.

படங்களின் தலைப்பை சொடுக்கி ட்ரைலரை பார்க்கலாம்….

Life boat (1943)

lifeboat2

அட்லாண்டிக் கடலில் இரண்டாம் உலகபோரில் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்க பயணிகள் கப்பலும், ஜெர்மனியின் U-Boat ம் மோதலில் ஈடுபட்டு மூழ்க பலவேறு தரப்பட்ட பயணிகள் ஒரு உயிர் காக்கும் படகில் தஞ்சம் அடைகின்றனர். சிறுது நேரத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஒரு ஜெர்மனியனை பலத்த வாக்கு வாதங்களுக்கு பிறகு அனுமதிக்கிறார்கள். ஆனால் அனுமதிக்கபட்டவன் யார்?

இந்த பின்னணியில் சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லிங்குடன் தனக்கே உரிய பாணியில் இயக்கி இருப்பார் ஹிட்ச்காக். இந்த திரைப்படம் முழுவதும் Life boat என்று சொல்ல கூடிய உயிர் காக்கும் படகில் வைத்ததே எடுத்திருப்பார். படகு மற்றும் கடல் இவ்வளவுதான் லொக்கேசன்.

மிகச்சிறிய செட்டில் எடுக்க பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முறியடிக்கப்பட முடியாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது இந்த திரைப்படம்.

Rope (1948)

rope

ஒரு உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அவருடைய முதல் டெக்னிக் கலர் படம்.

ஒரு தினவுக்கவும், சுவாரஸ்யத்திற்காகவும் ஒரு கொலையை செய்து விட்டு தங்களால் மறைக்கவும் முடியும் என்று நிரூபிப்பதற்காக அமுதன், இளமாறன் போல இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பனை தங்களது அப்பார்ட்மென்டில் வைத்தே கொலை செய்கின்றனர். அவனை ஒரு மரப்பெட்டியில் அடைத்துவிட்டு அதை விருந்து உபசரிக்கும் மேசையாக்கி அவனது பெற்றோர், முன்னாள் ஆசிரியர் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), காதலி மற்றும் சிலரையும் விருந்துக்கு அழைகிறார்கள். இப்படியாக பயணிக்கும் கதையை ஒரு பெரிய ஹாலில் வைத்தே, (கிட்டதட்ட மேடை நாடக செட் போல) முழு திரை படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் எடுத்திருப்பார்.

இந்த படத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்ததை போல தோற்றமளிக்க செய்திருப்பார்.

அந்த கால கட்டத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்களே ஒளிப்பதிவு செய்யும் வசதி இருந்திருக்கிறது. ஆகையால் முதல் ஷாட்  9:34 நொடிகளில் ஒரு நடிகரின் முதுகில் கருமையாக  முடிய இரண்டாவது ஷாட் அவரது முதுகில் இருந்தே தொடங்கும். இப்படியாக 81 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மிகத்திறமையாக பத்தே ஷாட்களில் முடித்திருப்பார்.

Rear Window (1954)

rear-window33

விமர்சகர்களால் ஹிட்ச்காக்கின் சிறந்த படமாக கருதப்படும் படம்.

சதுர வடிவில் உள்ள ஒரு பிளாட்டில் கால் முறிந்து வீல் சேரில் இருக்கும் ஒரு புகைப்பட கலைஞனுக்கு  (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்),  நாளெல்லாம் ஜன்னலில் அமர்ந்தபடி மற்ற பிளாட்டில்  நடப்பவைகளை பைனாகுலர் மூலம் நோட்டம் விடுவதே பொழுதுபோக்கு  . தினமும் இவனை சந்திக்க வரும் காதலியிடமும் (கிரேஸ் கெலி) , நர்சுடனும் நடந்தவைகளை/நடப்பவைகளை பற்றி புரளி பேசுவது இவனது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் எதிர் பிளாட்டில் இருக்கும் சேல்ஸ்மேனுடைய மனைவி மர்மமான முறையில் காணாமல் போக சூழ்நிலைகளையும், நடந்தவைகளையும் கிரகிக்க சேல்ஸ்மேன் தான் அவளை கொன்று இருக்க வேண்டுமென கருதுகிறான். அவனது யூகம் தவறா ? அல்லது இவன் காதலியின் துணை கொண்டு இதை துப்பறிந்து வெளிகொனர்கிறானா? என்பது மீதி கதை.

ஒரு அப்பார்ட்மென்ட் செட்டில் விறுவிறுப்பாக இயக்கியதை விட கூடுதல் விசேஷம் படத்தில் மொத்தம் இரண்டே கேமரா கோணங்கள் தான். ஒன்று ஜன்னலுக்கு வெளியே, ஜன்னலுக்கு உள்ளே !!

Dial M for Murder (1954)

dial_m_for_murder

எனக்கு மிகவும் பிடித்த ஹிட்ச்காக்கின் திரைப்படம்.

ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு நாளை முழுதாக பாரக்கலாம் என்றெண்ணி பார்க்க ஆரம்பித்தவன் படம் முடிந்து End credits  போடும் போதுதான் சுய நினைவிற்கு வந்தேன்.

ஒரு முன்னால் பிரிட்டைன் டென்னிஸ் வீரன், பணத்திற்காகவும், திருமணத்திற்கு முன்பு ஒரு அமெரிக்க கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவனுடன் உறவு வைத்து  இருந்ததற்காகவும் சொந்த மனைவியை  (கிரேஸ் கெலி) கொலை செய்ய முடிவு செய்கிறான். மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒருவனை கொலை செய்ய பணியாமர்த்துகிறான். திட்டம் இதுதான் மனைவியின் பழைய காதலன் ஊர் திரும்பியதும், அலிபிக்காக அவனோடு இரவு பார்ட்டிக்கு செல்ல வேண்டியது. வீட்டின் இரண்டு சாவியில் ஒரு சாவியை தன்னுடைய மனைவியின் கைபையில் இருந்து திருடி மாடிபடிகளில் ஒளித்து வைக்க வேண்டியது, இவர்கள் பார்டியில் இருக்கும் நேரம் கொலையாளி அந்த சாவியை உபயோகபடுத்தி வீட்டுக்குள் சென்று ஹாலில் ஒளிந்து கொள்ள வேண்டியது. மிகச்சரியாக  11 மணிக்கு இவன் வீட்டுக்கு போன் செய்ய வேண்டியது, அவள் தொலை பேசியை எடுத்து ஹலோ சொல்லும் போது கொலையாளி பின்னால் இருந்து ஸ்கார்ப் மூலம் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து, திருட வந்தவன் எதேச்சையாக கொலை செய்தது போல  தப்பிக்க வேண்டியது.

பல இடர்பாடுகளுக்கிடையே எல்லாம் சரியாக நடக்க 11 மணிக்கு தொலை பேசி மணி ஒலிக்கிறது..

கிரேஸ் கெல்லி தனது படுக்கை அறையில் இருந்து எழுந்து  இருளடர்ந்த ஹாலுக்கு வந்து தொலை பேசியை எடுக்க எதிர்முனையில் அவள் கணவன் மெளனமாக இருக்க, ஹலோ ஹலோ என கிரேஸ்  கேட்டுக்கொண்டே இருக்க பின்னால் இருந்து கொலையாளி கிரேஸ் கெல்லியின் மயில் கழுத்தை நெரிக்க முன்னேறுகிறான்……..பிறகு?????

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் ஒளி அமைப்பும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். பல திருப்பங்களை கொண்ட இந்த விறுவிறுப்பான திரைபடத்தை அவர் 90 சதவிகிதம் ஒரே ஹாலில் வைத்தே இயக்கி இருப்பார். மீதி 10 சதவிகிதம் வேறு இரண்டு செட்களில் எடுக்கபட்டு இருக்கும்.

விரைவில்!

McGuffin (மெக்குஃபின்) டெக்னிக் சார்ந்த படங்கள்:

hitchcock5

ஹிட்ச்காக் சூம்/ டாலி சூம் டெக்னிக் சார்ந்த படங்கள்:

sc-marnie1

%d bloggers like this: