Feeds:
Posts
Comments

Archive for February, 2009

பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்து மெட்ரோவுக்கு வந்து, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை பார்க்கும் அன்பு உள்ளங்களுக்காக…

ரயில் பயணத்தைப் போலவே வாழ்க்கைப் பயணமும். சிலருக்கு, அது முன்பதிவு செய்யப்பட்ட சவுகர்யமான பயணமாக இருக்கும். ஆனால் பலருக்கு, முன்பதிவு செய்யப்படாத அசவுகர்யமான பயணமாக இருக்கும்.

“ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகறாங்க, பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க”ன்னு முதல்வன்லேயும், ”Rich get richer, Poor get poorer” சிவாஜிலேயும் நம்ப அமரர் சுஜாதா எழுதுனது இந்த விசயத்துல ஒரு மாதிரியா ஒத்துப் போகுது.

ஏன்னா, ரயில்வே துறையின் சட்ட மாற்றத்தின்படி( 2008 ) அதிகபச்சமாக பயண தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாகவே இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணத்தேதி அன்று இருக்கை முன்பதிவு செய்துகொண்டிருந்த”தத்கால்” எனப்படுகிற அவசர கால முன்பதிவு  சட்டமும் திருத்தபட்டு, 5 நாட்களுக்கு முன்னதாகவே செய்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

இப்போ, டெக்னாலஜிய யூஸ் பண்ண தெரிஞ்சவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நோம்பி நொடி என்னைக்குன்னு காலண்டர பாக்கறோம். வீடுலயோ, ஆபீஸ்லயோ உக்காந்து மொத நாள் கவுண்டர் தெறந்த்தொடனே நெட்டுகுள்ள கையா உட்டு (அதாங்க ரயில்வே துறையின் பிரத்யேக வலை தளமான http://www.irctc.co.in) டிக்கெட்ட வாங்கிட்டு, கையில வெச்சிருக்கற ரெண்டு மூணு அட்டைல எதோ ஒரு அட்டைய வச்சு நோகாம புக் பண்ணிற வேண்டியது. அப்புறம் கண்டிப்பா மறக்காம ஆபீஸ்ல போயி பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டு,  சௌரியமா நம்ப வேலைய பாக்க ஆரம்பிச்சிருவோம்.

ஆனா பாவம் எப்படியும் டிக்கெட் கெடசிரும்னு, எதுக்கு நிக்கறோம்னு தெரியாம ரயில்வே ஸ்டேசன்ல கியூல நிக்கறவங்க நின்னுகிட்டுத்தான இருக்கறாங்க.  கொஞ்சம் அதிகமானாலும் பரவால்லன்னு  ஏஜென்ட் மூலமா டிக்கெட் வாங்கறவங்களும் வாங்கிட்டுதான் இருக்கறாங்க, டெக்னாலஜிய தெரிஞ்சுக்காதது/ யூஸ் பண்ண தெரிஞ்சுக்காதது யார் தவறு? மக்கள் தவறா ? அல்லது சரியாக மக்களுக்கு தேவையான படிப்பறிவோ விழிப்புணர்வோ தரத்தவறியது இந்த நாட்டின் அரசிய…….ப்ச்..எனக்கு இதற்கு இப்போது நேரமில்லை..நான் அவ்வளவு நல்லவனுமில்லை.

அட, நான் சொல்ல வந்த சமாச்சாரமே வேறங்க..

நம்பாளு ஒருத்தன் தீபாவளிக்கு ஊருக்கு போகணும். அவனுக்கு நேரம் சரியா இருந்தா, அவன் 3 மாசத்துக்கு முன்னாடியே  டிக்கெட் புக் பண்ணி சந்தோசமா ரிசர்வேசன்ல ஊருக்கு போறான்..இல்லெனா அவனுக்கு அன் ரிசர்வேசன்லையே தீபாவளி… இதுதான் கான்செப்ட்.

“ரன் லோலா ரன்”, ஏக் தின்  24 கண்டே, அப்புறம் நம்ப 12B போன்ற படங்களில் வந்த மேட்டர் தான்…

ஆனா நான் முன்னால சொன்ன மாதிரி அட்டைய வெச்சு புக் பண்ற மேட்டர், விசுக்குனு சொல்றது சுலபமா இருந்தாலும், அதெல்லாம் சரியா நடக்கணும்னா நம்ப ஜாதகத்துல இருக்க சுக்ரன், சச்சின் எல்லாம் நம்பல மட்டுமே பாத்துகிட்டு இருந்தாதான் உண்டு.  இதுல ஏகப்பட்ட சிக்கல் இருக்குங்க.அதுல ஒவ்வொரு கட்டமா தாண்டனும், மொதல்ல எடம் இருக்கான்னு பாக்கணும், இருந்திச்சுன்னா, நம்ப  ஜாதகத்தையே குடுக்கணும், கடைசியா அட்டைய வெச்சு நம்பர் தட்டணும்.எல்லா முறவாசாலும் செஞ்சிட்டு பட்டன  அமுக்குனம்னா……..

100 கோடி மான்கள் ஓடும் வேகம் போல… இதயம் படக்கு படக்கு ன்னு அடிச்சுக்கும்….

அப்புறமென்ன வழக்கம்போல வெப்சைட் பல்ல இளிச்சிரும்…சமயத்துல கைகாசும்  போயிரும், ஆனா டிக்கெட் புக் ஆகாது.

இதற்கு பின் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் அதிகமில்லை ஜென்டில் மேன்..பரமபதத்துல  பாம்பு கடிச்ச மாதிரிதான் திரும்ப மொதல்ல இருந்து வெளையாட வேண்டியது தான்.

ஆமா, அத புடிச்சு எல்லாரும் ஒரே நேரத்துல தொங்குனா என்னாகும் சொல்லுங்க… அப்புறம் அதுவும் தொங்கிரும்.நாலஞ்சு தடவை தொங்கிட்டு, அஞ்சாவது தடவ போய் பாத்தம்னா வெயிடிங்  லிஸ்ட்  200ன்னு காமிக்கும் (வடை போச்சே!). அதுக்கப்பறம் எந்த ட்ரெயின்ல பாத்தாலும் வெய்டிங் லிஸ்ட் 100 மேல தான் இருக்கும்.  சரி போன போகுது, அதான் அடுத்த ஆப்சன் தத்கால் இருக்குல, இருக்குல,..இருக்குல. ஆனா மறுபடியும் நம்ப யோகத்துக்கு தத்கால்ல புக் பண்ணும் போது பழைய மாதிரி பாம்பு கடிக்காம  இருந்தா அது போன பிறவில நம்ம  பெத்தவங்க பண்ண பிரியாணி தான்.

சரி, சரி, Let us watch the play …

நல்ல நேரம்

தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு,  ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்

அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…

எல்லா கட்டத்தையும் தாண்டி அவனுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆனதும், “எஸ் எஸ் எஸ்” ன்னு மின்னலே மாதவன் மாதிரி குதிக்காத குறைதான். வாழ்கை மேலேயே  ஒரு நம்பிக்க வந்திரும் அவனுக்கு.அவன சுத்தி இருக்கறவங்க எல்லாருமே விக்ரமன் படத்துல வர்ற மாதிரி நல்லவங்களாவே தெரியுவாங்க.. அவங்கம்மாவ கூப்புட்டு அப்பவே மெனுவ சொல்ல ஆரம்பிச்சிருவான்.அடுத்தது அவன் பிரண்ட்ஸ்  எல்லாருக்கும் டிக்கெட் கெடச்சுதான்னு செக் பண்ணிக்குவான்.(அங்கயும் இதே கூத்து தான்)

சில பேருக்கு கெடைச்சிருக்காது , அவங்க பஸ்லதான் கெடச்சிதும்பாங்க…  “என்னது பஸ்சா, இந்த நாலு சக்கரம் வெச்சு கொஞ்ச நீளமா, ராத்திரி தூங்க உடாம டீ.வி ய போட்டுட்டு வருவானுக, அடிக்கடி ஜெர்க் வேற ஆகுமே அதுவா..,  வோன்ட் யூ பீல் டயர்ட்” ன்னு ஓவர் சீன் போடுவான்.

ஆனா இவனுக்கும் ஆப்பு  வெக்க ஒரு ஆசாரி இருப்பான்… “என்னது ட்ரெயினா, ரொம்ப நீளமா, பொட்டி பொட்டியா, ரெண்டு கம்பி மேல போகுமே, தடக்கு தடக்குனு சத்தம் கூட வருமே.., அட ராமா, எப்பிடி தான் 8 மணி நேரம் ட்ரேவல் பண்றயோ… பை மீன்ஸ் ஆப் ஏர், ஒன்லி டூ அவர்ஸ் மச்சி…ஐ வில் பீ தேர் பிஃபோர் யூ.. . நாங்க எல்லாம் பாலைவனத்துலையே பால் பாயசம் சாபட்றவங்க, தெரியும்ல எங்க கிட்டயேவா”ன்னு பல்பு குடுப்பான்.

“சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச பயலுக தான் நீங்கல்லாம்…எல்லாம் எங்களுக்கு தெரியும் போடா..”  திட்டிட்டு சமாதானமாவான்.

அடுத்ததா அவன் டேமேஜர்  கிட்ட தகவல சொல்லிட்டு லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணிருவான்.. அவரு வழக்கம் போல “I will approve for now, but as you know if situation demands then…”அப்படினு ஒரு pause விட்டுட்டு கடலோர கவிதைகள்ல சத்தியராஜ் லாங்சாட்ல நடந்து போற மாதிரி போயிட்டு இருப்பாரு…

லீவ் ஓகே ஆகி தீபாவளிக்கு மொதநாள், அவன் கெளம்ப வேண்டிய அன்னிக்கு, எல்லாம் திட்டபடி நடத்துவான்.லோக்கல்ல இருக்கறவங்க கிட்ட செண்டிமெண்டா பேசி வேலைய நைசா தள்ளி விட்டிட்டு ஆபிஸ்ல இருந்து ஸ்டேஷன்க்கு 2 மணி நேரம் முன்னாடியே கெளம்பிருவான்.

“பாஸ், அதான் டிக்கெட் புக் பண்ணிடிங்கல்ல அப்பறமென்ன மெதுவா போலாம்ல கேட்டா”..

“ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல யாருமே ஓடிப் போனது கெடயாது “னு வெட்டி சீன் போட்டுட்டு நேரத்துலையே கெளம்பி ரிலாக்ஸ்டா தன் பயணத்த கண்டினியூ பண்ணுவான்.

ரவுண்ட் நெக், தொவைக்காத ஜீன்ஸ் பான்ட்,காதலன்” பிரபுதேவா சூ, சோல்டர் பேக்(உள்ள பூரா வேறென்ன அழுக்கு துணிதான்), ‘ஐபாட்'(இதுவும் மொபைலும் அதிகமா பொழங்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ஊருக்குள்ள எவனும் பக்கத்துல இருக்கறவான் கிட்ட பேசமாட்றான். கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி இத காதுல இருந்து கழட்டவே மாட்றானுக) , மினரல் வாட்டர் சகிதமா மொத ஆளா வண்டி பிளாட்பாரத்துக்கு வரதுக்கு 15 நிமிஷம் முன்னாடியே போயிருவான். இவன் மட்டுமில்ல ரயில்வே ஸ்டேசன்ல பாத்திங்கன்னா ஊருக்கு போற முக்காவாசி பயலுக இந்த கெட்டப்ல தான் இருப்பானுக …

போன் போட்டு “சரியா 5 மணி, 3வது பிளாட்பார்ம் கரெக்ட்டா வந்தரனும், என்ன”ம்பான், எதோ கால் டாக்ஸி தான் புக் பண்ணறான்னு பாத்தா, “அடடடடா, எத்தன தடவப்பா..உங்களுக்கு சொல்றது சரியா 5 மணி, அலாரம் வெச்சுகிட்டு படுங்க,சரியா”ம்பான்.

வண்டி வர்ற சமயம் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவும்.பாவம், அன்ரிசர்வுல போற மக்கள் சீட் புடிக்க அரக்க பறக்க ஓடுவாங்க.

அதுல யாராது ஒருத்தன் நம்பாள் மேல மோதிருவான்.உடனே “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே” ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான்.மோதுனவனும்  “சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்.

TTR அ சுத்தி மக்கள் நின்னுகிட்டு “பாத்து எதாவது பண்ணுங்க, சார்”ன்னு. கேட்டுகிட்டு இருப்பாங்க.

யாரு இந்த ஆபிசர்,  கிளைமேட்க்கு சம்பந்தமே இல்லாம கோட் சூட்எல்லாம் போட்டுட்டு நிக்கிறாரு அப்பிடின்டு நக்கலா ஒரு பார்வையோடபாட்டு கேட்டுகிட்டே பிளாட்பாரம் ஓரமா நின்னுகிட்டு எங்கயாச்சு பராக்கு பாத்துட்டு இருப்பான்… எதோ தோள்ல ஓரசற மாதிரி இருக்கும்…

திடீர்னு யாரவது கைய புடிச்சு இழுத்து “ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா..உசிர உட்றாதிங்க”பான்.  ஹெட் செட்ட கழட்டி விட்டதுமில்லாம யார்ரா அவன் நம்பள திட்றதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதுதான் சாருக்கு அவரு  தோள ஓரசுனது ரயிலுனே ஒறைக்கும்.

அடுத்து வண்டி வந்ததும் மொதல் வேலைய ரிசர்வேசன் சார்ட்ல, அவன் பேருக்குக்கு பக்கத்துல எதாவது “ஸ்வப்னா, ஸ்வேதா, லாவண்யா” ன்னு மாடர்ன் பொண்ணு பேரு இருக்கான்னு பாப்பான்..இருந்தா அப்பவே பொகைய போட்டுட்டு கனவுலகத்துக்கு போயிருவான். இல்ல “சாரதாம்பாள், சுந்தராம்பாள், ஈசுவரி” ன்னு போட்ருந்தா போட்ட பொகைய ஆப் பண்ணிட்டு..அதென்ன சினிமால மட்டும் தான் த்ரிஷா, சதா, சமீரா எல்லாரும் பக்கத்து பெர்த்துல வருவாங்களா? ன்னு பொலம்பிகிட்டே வண்டில ஏறுவான்.

இவன் பெர்த்துக்கு போனா ..ஒரு பெரியவரும் பாட்டியும் உள்ள இருப்பாங்க…அவங்க மகன், மருமக பேரம் பேத்திக வெளிய இருந்து( “பாத்து போயிட்டு வாங்க”, “உடம்ப பாத்துகோங்க”)பேசிகிட்டு இருப்பாங்க.. அப்புறம் ஒரு மிடில் கிளாஸ் அம்மா, அப்பா அப்பறம் அவங்க குழந்தை இருக்கும்… அது போக இன்னொரு பெரியவரும் இருப்பார்.. செட்டப்ப பாத்ததுமே நம்பாளுக்கு தெரிஞ்சு போயிரும்…இன்னிக்கு படுக்க மணி பதினொன்னு ஆயிடும்னு…

ஏன்னா, நம்பாளுக்கு மிடில் பர்த்தா இருக்கும். அடச்சே, அப்பர் பர்த் கெடச்சுட்டா பிரச்சனை இல்லாம நேரமே காலமே தூங்கிறலாம்.. இல்லேனா இவங்க தூங்கற வரைக்கும் அவங்களோட அளவலாவிட்டு, அவங்க போடற மொக்கைய கேட்டுகிட்டு , எப்படா கடைய சாத்துவாங்கன்னு காத்திருக்க வேண்டியது தான். அப்படின்னு மனசுக்குள்ள சலிச்சிக்குவான்

சட்டுன்னு நம்பாளு எதிர்பாக்காத மாதிரி அந்த குழந்தையோட அப்பா “சார், குழந்தை வேற இருக்கு, நீங்க அப்பர் பர்த் போய்க்க முடியுமான்னு” கேப்பார். நம்பாளும் குஷியா வாங்கிட்டு மேல போய்டுவான்.

அறிமுகமான கொஞ்ச நேரத்துலையே அந்த ரெண்டு பெரியவரும், எந்தெந்த தட் ரெயின், எந்தெந்த ஊர் வழிய எத்தன மணிக்கு கெளம்பி எத்தன மணிக்கு சேரும் ங்கறத பத்தி ஒரு சின்ன விவாதத்த ஆரம்பிசிரு வாங்க, “இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா” ங்கற மாதிரி பேச்சுக்கள்,அப்பறம் அப்படியே கொஞ்ச நேரத்துல பொதுநலன், அரசியல், இந்தியா முன்னேற மிக எளிய வழிமுறைகள்ன்னு தீவிரமா எறங்கிருவாங்க.. பாட்டியம்மா பெரியவர் எப்ப படுப்பார் அப்புடின்னு தூக்கத்தோட அவரு வாயவே பாத்திட்டு இருப்பாங்க. குழந்தைக்கு அந்த அப்பா,அம்மா ரெண்டு பெரும் சோறு ஊட்ட ட்ரை பண்ணி டயர்ட் ஆயிருபாங்க.. பாட்டி கொஞ்சம் குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சிருக்கும்..

நமபாள், வெளியில எதாவது ஒரு பவன்ல வாங்குன சப்பாத்தியையும், இட்லியையும் 5 நிமிசத்துல சாப்டுட்டு…கவர ஜன்னல் வழியா டிஸ்போஸ் பண்ணிட்டு.. பிஸ்லரி வாடர்ல கைய கழுவிட்டு, சூவ கழட்டி சீட்டுக்கு அடியில போட்டுட்டு…கொஞ்சம் நறுமண த்தோட இருக்கற சாக்ஸோட மேல ஏறி, கவச குண்டலத்த மாட்டிட்டு, யேசுதாஸ எழுப்பி விட்டுட்டு இவன் 5 நிமிசத்துல தூங்கிருவான்.

மொதல் தவணையா நம்ப TTR வந்து எழுப்பி டிக்கெட் செக் பண்ணிட்டு போவாரு, மொனகிட்டே மறுபடி தூங்கிருவான். திடீர்னு பாதி தூக்கதுல முழிச்சு பாத்தா, ‘ஐபாட்’ல அட்னான் சாமி தமிழ்ங்கற தக்காளி பழத்து மேல புல்டோசர் வெச்சு ஏத்திகிட்டு இருப்பார்… அணைச்சிட்டு கவச குண்டலத்த கழட்டி வெச்சிட்டு திரும்பி படுப்பான்….

கால் மணி நேரத்துல, குழந்தை அழுக ஆரம்பிச்சிருக்கும்..அந்தம்மா குழந்தைய சமாதானபடுத்தி தோற்றுபோக, அப்புறம் அந்த அப்பா கொஞ்சம் அந்த குழந்தைய தூக்கிகிட்டு ஒரு சின்ன வாக் போக…புரண்டு படுப்பான்..

தூக்கத்துல நம்பாளுக்கு ஒரு கெட்ட கனவு வரும். ஒரு ஜூவுக்குல ஒரு சிங்கத்தோட கூண்டுக்குள்ள இவன போட்டிருக்காங்க அது தெரியாம தூங்கிகிட்டு இருக்கான்…திடீர்னு சிங்கம் உறுமுது…அரண்டு போயி முழிச்சு பாப்பான், முளிச்சதுக்கு அப்பறம் தான் தெரியும் உருமுனது சிங்கமில்ல, கொறட்ட விட்டிட்டு இருக்கறது அந்த பெரியவர்னு.,அட ஆண்டவா தூங்க விடமாட்டாரு, போ ..புரண்டு படுப்பான்..

மறுபடியும் நடு ராத்திரியில் புரண்டு படுப்பான்.. அந்த குழந்தையோட அப்பா கீழ பேப்பர் விரிச்சு படுத்து கிட்டு ஒரு கைய சீட்ல படுதிருக்கற குழந்தை மேல போட்டு தூங்கிகிட்டு இருப்பார்…

டுங் டூங்…

“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,

“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..

தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ஜிலேபிய வாயில வெக்கும் போது எவண்டா தள்ளி விட்டது ன்னு முழிச்சு பாத்தா அந்த பெரியவர் பெரிய மனசு பண்ணி எழுப்பி விட்டிருப்பார்.

“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்…

“அலாரமும் அடிக்கல, அப்பாவும் போன் பண்ணல என்ன ஆச்சு”ன்னு மொபைல செக் பண்ணுவான். தூக்கத்துல சுவிட்ச் ஆப் ஆயிருக்கும். மொதல்ல மொபைல ஆன் பண்ணி “எங்க இருக்கீங்க…என்னப்பா நீங்க, நான் தான் உங்கள அலாரம் வெக்க சொன்னன்லன்னு தோரணய ஆரம்ப்சிருவான்…..

கெட்ட நேரம்

“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”…..”யத்ரியோ கடி கரிபியா “…..”இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா”…… “”சார், குழந்தை வேற இருக்கு”…. ” “ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா”.. “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”…..”ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல”….” I will approve for now, but as you know”.”சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச”…..”என்னது ட்ரெயினா”…..”என்னது பஸ்சா”…..

தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு,  ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்

அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…

டிக்கெட் கன்பார்ம் ஆகி புக் ஆயிரும்… சந்தோசமா லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணுவான் … அவன் சந்தோசத்துல சாணிய கரைச்சு ஊத்தற மாதிரி, அவன் டேமேஜர் ஒரு குண்ட போடுவாரு….

திடும்…திடும்…திடும்…

ஏற்கனவே திட்டமிட்டபடி, தீபாவளி அன்றும் அதற்க்கு மறுநாளும் ஏகப்பட்ட ஆணிகள் அறையப்படும் என்றும், அத்துணை ஆணிகளையும் கழற்றி ஏறிய இந்த பிரபஞ்சத்திலேயே இவன் ஒருவனால் மட்டுமே முடியும் என்று திட்ட வட்டமாக கூறி இவனது தீபாவளி கனவை கர்ண கொடூரமாக கலைத்து விடுவார்.

“ச்சே, இப்பிடி தீபாவளி அன்னிக்கு ஊருக்கு போக முடியாம ஆயிரிச்சே”ன்னு நெருக்கமானவங்க எல்லாம் பரிதாபபடுவாங்க…

“படபடபடபட, சர், சூம், டமால், அய்யன் பட்டாசுகள் வாங்கிடிங்களா”ன்னு இந்த நேரம் பாத்து எதிரிக எல்லாம் இளக்காரமா, சேட்டை பண்ணுவாங்க…

வீட்டுக்கு போன் பண்ணி சொன்னா, அவன் அப்பத்தா மட்டும் “அப்புடி என்னடா பொல்லாத கம்பேனி, ஒரு நோம்பி நொடி கூட இல்லாம, தீபாவளி அன்னிக்கு கூடவா வேல பாப்பாங்க..என்னமோ போ”ன்னு வருத்தப்படும் .

நம்பாளு மேக்னாவ பிரிஞ்ச சூர்யா மாதிரி சோகமா ஆயிருவான்..ஒரு சிம்பதிகாக வாழ்வே மாயம் கெட்டப் லையே டேமேஜர் முன்னாடி திரியுவான்…

திடீர்னு, தீபாவளிக்கு மூணு நாள் முன்னாடி அவர் வந்து இவன் கழற்றி ஏறிய வேண்டிய ஆணிகள் இன்னும் சரியாக அறைய படவில்லை என்றும், அறைவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதாகவும் சொல்லி…இவனது தீபாவளி பயணத்தை உறுதி செய்து விடுவார்.

இந்த சந்தோசமான சேதிய வீட்டுக்கு சொல்லிட்டு , உடனே ஓடி போடி ப்ரம்ஹாஸ்த்ரத்த (தத்கால்) பயன்படுத்துவான் (டிக்கெட் எல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே தீந்து போயிருக்கும்டா முட்டாள்.அப்படின்னு புத்தி சொல்லும், ஆனா பாழாப்போன  மனசு  கேக்கவா செய்யும்) . அடுத்து டிராவல்ஸ்ல எல்லாம் செக் பண்ணுவான். அங்கயும் கைய விரிச்சிருவாங்க.

அவனுக்கு ரெண்டே ரெண்டு ஆப்சன் தான் இருக்கும்…

ஒன்னு ட்ரெயின்ல அன்ரிசர்வுல போறது, இன்னொன்னு பஸ்ல அன்ரிசர்வுல போகறது (அரசு பேருந்துன்னா, வரிசைல நின்னு நாம ஏறதுக்கே, நடு ராத்திரி ஆயிரும், ஒன்னும் பிரச்சனை இல்ல, சரியா மதியான சாப்பாடுக்கு வீடு போயிறலாம், தனியார் பஸ்ன்னா, தீபாவளிக்கு மொத நாள் பெர்மிட் இல்லாம ஏக பட்ட சுந்தரா ட்ரவல்ஸ் ஓடி கிட்டு இருக்கும். அதுல எதாவது ஒண்ணுல ஏறுனா, சொல்ல முடியாது அநேகமா “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்ன்ன்ன்ன்  முறையாக” படம் போடறதுக்குள்ள வீடு போயிறலாம்)

“எரியற கொள்ளியா, காச்சுன கம்பிய” என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி..ரெண்டுமே கொடுமைதான், இருந்தாலும்  ரயில்னா நேரத்துலயாவது போயிரலாம்னு ரெண்டாவது ஆப்சனையே தேர்ந்து எடுத்திருவான்.

ஊர்ல இருக்கறவங்களுக்கு கெட்ட நேரம் தபால்ல வந்தா, நம்பாளுக்கு தந்தில வரும். சரியா அன்னிக்குன்னு பாத்து தான் வேல வந்து குமியும், அடிச்சு புடிச்சு கடைசி நேரத்துல பஸ்ச புடிச்சு போனா, நம்பாளுக்காக ஒரு நல்ல தரமான ட்ராபிக் ஜாம் காத்துகிட்டு இருக்கும்.

நேரம் ஆக ஆக ஹார்ட் பீட் ஏறும்…பட்டுன்னு பாதி வழில எறங்கி ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு வழிய ரயில்வே ஸ்டேஷன் போயி சேர்ந்திருவான். ரயில் வரதுக்குள்ள எப்படியாவது பிளாட்பாரத்துக்கு போயரனும்ன்னு அரக்க பக்க ஓடுவான்.

ஓடற அவசரத்துல யாராது ஒருத்தன் மேல மோதிருவான்.உடனே அவன் “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான், “சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்..

சரியா ரயில் வந்துகிட்டு இருக்கும் போது போயி சேந்திருவான். வண்டி வந்து நிக்க நிக்க அந்த எடமே கலவர பூமி ஆயிரும்..அடிச்சு புடிச்சு எல்லாரும் ஏறுவாங்க..

“டேய் ரமேசு இங்க வாடா”, மாப்ள அங்க ரெண்டு சீட் இருக்காடா ”

“எலேய் சிவனாண்டி இங்கிட்டு வா”

“எண்ணே இங்க வாரியளா இங்கனக்குள்ள ஒரு சீட் இருக்கு ”

“டேவிட்டு, இங்க ஒரு சீட் இருக்குடே, இந்தால வந்திரு”,

“எடோ, கோபி இவட வரூ”

அந்த ரெண்டு நிமிஷம் பல வட்டார மொழிகளும்  நம்மாளு காதுல வந்து தேனா பாயும்…அந்த மியூஸிகல் சேர் போட்டில சந்தேகமில்லாம தோத்து போவான். பெர்த்துல ஏறி அதுக்குள்ளயே சில பேரு கர்சீப்ப மூஞ்சில மூடி தூங்கறா மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாங்க. பேக்க தூக்கி சைடுல லக்கேஜ் கேரியர்ல வெக்கலாம்னா, அந்த முக்கால் அடி கம்பிளையும் ஆளுக படுத்திருபாங்க. சரி தீபாவளி இப்பவே ஆரம்பிசிருசுன்னு நம்பாள் முடிவு பண்ணிருவான். பக்கத்துல யாராவது கிட்ட சொல்லிட்டு, அந்த அழுக்கு துணி பேக்க பாத்துக்க சொல்லிட்டு TTR பாக்கலாம்னு போவான் .

TTR  என்ன பண்ணமுடியும் இவனுக்குத்தான் saturn Solid ஆ இருக்கே.,சீட் இல்லேன்னு சொல்லிருவாரு.

தலைய தொங்கபோடுட்டு திரும்ப இவன் காம்பார்ட்மண்டடுக்கு வந்து பாத்தா. அந்த கேப்புல புதுசா ஒரு அம்பது பேர் அந்த பொட்டிய ஆக்குபை பண்ணிருபாங்க..இவன் வண்டிக்குள்ள ஏற்றதே சிரமம்னு நெலம ஆயிரும். பேக் மேல ஒரு கண்ணு வெச்சுகிட்டே..விடியலை நோக்கி விநாடிய எண்ண ஆரம்பிச்சிருவான்…

வண்டி கெளம்பின உடனே உள்ள பாத்திங்கன்னா..பெர்த்துல கர்சீப் போட்டு மூடிருகரவங்களுக்கும சக பயணிகளுக்கு சண்டை வலுக்க ஆரம்பிக்கும்…

“எழுப்புங்க சார், அந்தாள, இவளோ பேர் நிக்க எடமில்லாம படியில தொங்கிட்டு வர்றாங்க , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நாலு பேரு உக்கார எடத்துல எப்படி நீட்டி படுத்துட்டு வரான் பாருங்கன்னு”…ஒருத்தர் ஆரம்பிப்பார்.

“வேணும்னா நீயும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து எடம் புடிக்க வேண்டியது தான” (கர்சீபுக்குள்ள இருந்து கிட்டே) இவரு வண்டி கெளம்பும் போது வருவாராம், இவருக்கு எந்திரிச்சு எடம் குடுக்கணுமாம்.. போயா”

சண்ட முத்தி கடைசியா, படுத்திருகறவர் கால் பக்கத்துல ஒரு எடம் வாங்கி மேல ஏறி உக்காந்திருவார்.

நம்பாள் படி கிட்ட இருந்து கொஞ்ச கொஞ்சமா முன்னேறி ரெண்டடி நகருவான்..பக்கத்துல ஒரு ஆள் புல் சரக்குல இருப்பான்..

“சார், எப்பவுமே நான் ஜெனரல்ல போகும் போது லைட்டா ஒரு கட்டிங் உட்டுக்குவேன், எந்த டையர்டும் இல்லாம ட்ரேவல்  பண்ணல்லாம் பாருங்க” ன்னு சொல்லிட்டு இவன பாத்து சிநேகமா புன்னகைப்பான். ஆள பாத்தா கட்டிங் கட்டிங்கா உட் மாதிரி இருக்கான், இவன பாத்து நாம சிரிச்சம்னா, சொந்த செலவுல நாமலே சூன்யம் வெச்சுக்கறா மாதிரின்னு ‘வி. ஜி. பி’ல வெறப்பா ஒருத்தர் நிப்பாப்ள இல்ல அந்த மாதிரி எந்த உணர்ச்சியும் கட்டாம நிப்பான் .

இன்னொருத்தர் பக்கத்துல பாத்தா, படிச்சவர் மாதிரியே இருக்காது ஆனா ஹிந்து பேப்பர் கைல வெச்சுகிட்டு நிப்பாரு..என்னடான்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே… “சார் கொஞ்சம் கால் எடுத்துக்கோங்க., நான் உள்ள போயிக்கறேன்”னு ஏதோ விசேஷ விட்டுக்குள்ள போற மாதிரி அந்த முக்கால் அடி கேப் இருக்கற சீட்டுக்கு அடியில  மாயமா மறைஞ்சிருவார். அதுக்கப்பறம் தான் ரயிலுக்கும், நியூஸ் பேப்பர்களுக்கும் இடையில ஒரு நீங்காத பந்தம் இருக்குங்கறதே நம்பாளுக்கு புரியும்.

ஒரு ரெண்டு மணி நேரம் கால் வலிக்கு அப்பறம், ஒருத்தர் இரக்கபட்டு சீட்டு நுனில ஒரு ஓரமா எடம் குடுப்பாரு.. சந்தோசமா பத்து நிமிஷம் உக்காந்திருப்பான். திடீர்னு “சார் உங்க சூ சைஸ் என்ன எட்டா”ன்னு காலுக்கு கீழ ஒரு குரல் கேக்கும்.

ஆச்சர்யத்தோட கேப்பான் ” எப்படி சார் கண்டுபுடிசீங்க”

“யோவ் மூஞ்சிக்கு மேல வெச்சு தேச்சா தெரியாதா பின்ன, கால எட்ட எடுயா, வந்துடானுக”ன்னு சல்லுன்னு இவன் மேல எரிஞ்சு விழுவான்…மேனேஜர தவிர வாழ்கையில யாருமே அவன திட்டி இருக்க மாட்டாங்க..நம்பாள் ரொம்ப சோர்ந்து போயிருவான். அந்த பொசிசன்லையே ரொம்ப நேரம் ஒண்டிக்கிட்டு உக்காந்துகிட்டு இருப்பான்..

போதாக்கொறைக்கு எந்த நேரமும் இவன் பேண்ட்ல வாந்தி எடுக்கற மாதிரி இவன் காலுக்கு கீழ இன்னொரு குடிமகன் தலை எல்லாம் தொங்கி போயி உக்காந்துக்கிட்டு இருப்பார்.

சமயம் பாத்துட்டே இருப்பான். மேல பெர்த்துல இடம் காலியான உடனே மேல ஏறி உக்காந்துக்குவான். இவனுக்கு பின்னாடி ஒரு ரெட்ட நாடிகாரர் கட்டய சாச்சிருபார். இவனால அஞ்சு நிமிஷம் கூட கால மடக்கி உக்கார முடியாது, கொஞ்சம் நேரம் கால நீட்டி எதிர்த்த பெர்த்துல வெச்சுப்பான்.

கீழ இருந்து ஒருத்தர் சொல்லுவார் “தம்பி சூவ  கழட்டி வைப்பா மண்ணு விழுகுதில்ல, கீழ இருக்கறவங்கள பாத்தா மனுசரா தெரியல”… (இப்ப நான் என்ன செய்யயயயயய…..)

சரி, இந்த ரண காலத்துலயும் ஒரு கிளு கிளுப்பா, பாட்டு கேக்கலாம்னா..அது பேக்ல இருக்கும் ஏறங்குனம்னா ஏற விட மாட்டானுக…சரி மொபைல்லையாவது பாட்டு கேப்போம்னு பாத்தா, சார்ஜ் பண்ண மறந்திருப்பான், செல்லு செத்து போயிருக்கும்..

லேசா வயத்த வேற கிள்ளும் அப்போதான்,  இந்த கூத்துல அவன் சாப்பட மறந்ததே  தெரியும்.

மேல பார்த்து (சாமியத்தான்)  “செய்யுங்க, உங்கனால எவளோ முடியுமோ செய்யுங்கன்னு… நொந்துக்குவான் .

எப்படியோ மாத்தி மாத்தி கால வெச்சு உக்காந்து,ஏதாவது ஒரு பொசிசன்ல தூங்கி போயிருவான். நடு ராத்திரில முழிச்சு பாப்பான், எல்லாரும் அமைதியா ஒருத்தர் தோள்ள ஒருத்தர் சாஞ்சு படுத்துகிட்டு இருப்பாங்க..இவனுக்கு எதிர் பெர்த்துல சண்ட போட்ட அந்த ரெண்டு பேரும் ஒருத்தன் கால ஒருத்தன் கட்டி புடிச்சிட்டு, நேர் எதிரா படுத்திருபாங்க… உண்மையான சமத்துவபுரம் இந்த ஜெனரல் காம்பார்ட்மண்டதான்னு புரிஞ்சுக்குவான். வாழ்க்கைல நிரந்தரமா தூங்கற வரைக்கும் தான் ஒரு இடத்துக்காக(நிலைக்காக) அடிச்சிக்குறோம்ன்னு, வாழ்க்கையோட பல தத்துவங்கள அந்த அமைதி அவனுக்கு உணர்த்தும்.

ஊர் நெருங்க நெருங்க அவனுக்கு ஒரு முழு சீட் கெடச்சிரும்…விடியற்காலைல நல்லா தூங்கிட்டு வருவான்..

டுங் டூங்..

“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,

“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..

“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ன்னு யாரவது எழுப்பி விடுவாங்க..

“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்..

“அடடா, மொபைல் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு அப்பாவ வேற வர சொல்லிருந்தோமே”, அப்படின்ட்டு பிளாட்பாரத்துல எறங்கி மெதுவா அவர தேடிகிட்டே நடக்க ஆரம்பிப்பான்.

ஒரு அம்பது அடி தூரத்துலேயே அவங்கப்பா அவன கண்டு புடிச்சிட்டு வந்து மொதல்ல பேக்க வாங்குவார்.

“பரவால்ல இருகட்டும்பா”ன்னு இவன் சொன்னாலும் அவன் கிட்ட இருந்து வாங்கிட்டு.. “ரொம்ப கூட்டமா இருந்திருக்குமே, சீட்டு கெடச்சுதா, ஆமா ரொம்ப டல்லா இருக்கியே ராத்திரி சாப்டியாப்பா” ன்னு கேப்பார்.

“ம்ம்.. அதெல்லாம் சாப்புட்டம்பா”, ஜன்னல் சீட்டே கெடச்சுது, அத விடுங்கப்பா, அப்பறம் வீட்டுல எல்லாரும் எப்படி இருகாங்க”ன்னு முன்னெப்போதையும் விட பக்குவப்பட்டவனா பேசிக்கிட்டே சந்தோசமா குடும்பத்தோட தீபாவளிய கொண்டாட வேகமா நடைய போடுவான்.

பயணங்கள் எப்போதும் நம்மை பக்குவப்படுத்தும், அதுவும் விளிம்பு நிலை மக்களோடு இது போல் பயணிக்கையில், நம்மை சுற்றி இருக்கக்கூடிய வாழ்கை முறையில் இருந்து நாம் எவ்வளவு வித்யாசப் படுகிறோம் என்பதை உணர நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் .என்னை பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறையாவது, தனியாக முன்பதிவு செய்யாமல் பல தரப்பட்ட மக்களோடு பயணம் செய்ததால், யதார்த்த வாழ்வின் எளிமையும், சராசரி உலகத்…(வந்துட்டாருப்பா, மெசேஜ் சொல்றதுக்கு, இவரு பெரிய வெண்ணிற ஆடை மூர்த்தி மெசேஜ் சொல்லாம முடிக்க மாட்டாரு, போப்பா, எல்லாம் அவங்களுக்கு தெரியும்)…

My sincere thanks to my inspirers and well-wishers ‘Pinkuripukkal’ Praveen and ‘Veri goodra vellachaami’ Gowtham for proof reading this article.

Advertisements

Read Full Post »

%d bloggers like this: