Feeds:
Posts
Comments

Archive for the ‘கதை’ Category

“கூந்தலில் வெள்ளியும் மனதில் தங்கத்தையும் கொண்டவர்கள் பாட்டிகள்” – யாரோ

புளியம்பட்டியில் வந்து இறங்கியபோது வெயில் உக்கிரமாக வெறித்துக் கொண்டு இருந்தது. மேலே வேறு தெரியாமல் பார்த்து விட்டேன், இருட்டிக் கொண்டு வந்தது. நடத்துனரிடம் சில்லறை வாங்கி கொண்டு இருந்த என் அம்மாவை தேடினேன்.

“இன்னும் எவ்வளவு நேரம்மா ஆகும்”

“வந்தாச்சு சாமி, 18Bல ஏறுனா இன்னும் அரைமணி நேரத்துல போயிறலாம்”

“போம்மா. அங்க வெளையாட யாருமே இருக்க மாட்டாங்கம்மா, வீட்டுக்கே போலாம்”

“கண்ணு, மறுபடி ரகள பண்ண கூடாது, நாம எப்பவாவது தானே பாட்டிய பாக்க போறோம்” திங்கறதுக்கு ஏதாவது வாங்கிக்கலாமா”?

“என்னக்கொன்னும் வேண்டாம்.. நீயே தின்னுக்கோ..போம்மா…”

18B வந்தது, வேகமாக ஏறி ஜன்னலோர சீட்டை பிடித்து கொண்டேன். வண்டியில் கூட்டமே இல்லை, அம்மா ஏதோ படித்து கொண்டு வந்தாள். ஜன்னலில் தலை வைத்து வேகமாய் என்னை கடந்து போய்க்கொண்டு இருந்த தென்னை மரங்களை எண்ணிக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்னால் என் பாட்டி ஊருக்கு போனபோது பொழுதே போகவில்லை. அங்கு யாருமே கிரிக்கெட் விளையாடுவதில்லை. பெரும்பாலும் பெண் பிள்ளைகளே இருந்தார்கள், எனக்கு கூட விளையாடவும் பிடிக்கவில்லை.

ஊரே மயானக்காடாய் இருக்கும். தூரத்தில் எதோ ஒரு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் மோட்டார் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டே இருக்கும் குருவி,குயில் என அனைத்து ஜீவராசிகளின் ஒலியையும் துல்லியமாக கேட்கமுடியும். எங்குதான் இருப்பார்களோ, பகலில் கூட ஒருவர் இருந்ததில்லை.தனிமையில் தலையே வெடித்து விடும் போல் இருக்கும்.

பாட்டி ஊரில் உயர்நிலை பள்ளியின் தையல் ஆசிரியை. என் அம்மா சிறுவயதில் இருந்த போதே தாத்தா இறந்து விட்டிருக்கிறார். அதன் பின் அம்மாவை தனி ஆளாய் வளர்த்து இன்று அவள் ஒரு உத்யோகத்தில் இருப்பதற்கான காரணகர்த்தா. ஆனால் பாட்டி சரியான சினிமாப்பைத்தியம். அவளுக்கு எல்லாமே சினிமாதான். அந்த கிராமத்தில் கொட்டகை ஏதும் இல்லாததால் படம் பார்க்க வேண்டுமானால் பக்கத்துக்கு ஊரான புளியம்பட்டி ஒன்று தான் கதி. அதுவும் மாலைக் காட்சி 5 மணிக்கெல்லாம் துவங்கி விடும். பள்ளிக்கூட மணி அடிக்கிறதோ இல்லையோ 18Bஇல் ஏறிப் போய்விடுவாள். போஸ்டர் மாறினால் பஸ் டிரைவரே ஒலி எழுப்பி சிரத்தையாக அழைத்துச் சென்று, இரவு கடைசி முறையில் அழைத்து வந்து இறக்கிவிடுவார்.

தீபாவளி, பொங்கல் வந்தால் வெகு சிறப்பு, பக்கத்து டவுனில் உள்ள சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கி எல்லா புதுப்படங்களையும் காட்சி வாரியாக பார்த்து விட்டுத்தான் திரும்புவாளாம். அப்படி மொட்டை வெய்யிலில் சாப்பிடாமல் முரட்டுகாளை பார்க்க போன போது வரிசையில் மயக்கம் போட்டு விழுந்து வைத்திருக்கிறாள் என்று அம்மா பல முறைசொல்லி இருக்கிறாள். “நீ என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நெனைச்சுகிட்டு இருக்கியா” என்று அம்மாவும் திட்டாத நாள் இல்லை.

வண்டி எதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது. நின்ற இடத்தை சுற்றிலும் பச்சை பசேலென இருந்தது. எங்கள் ஊரில் மழைக்காலத்தில் மட்டுமே இப்படி இருந்து பார்த்திருக்கிறேன். குட்டையாய் மஞ்சள் செடி போல ஏதோ இருந்தது. அதற்குள் என் அம்மாவை யாரோ ஒரு முதியவர் அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார்.

“எப்புடி சாமி இருக்கற, இதேன் பையனா” என்று என் கன்னத்தை தடவ வந்தார். கைகள் சொரசொரவென இருந்தன,விருட்டென முகத்தை திருப்பிக்கொண்டேன்.

“அம்மா, இது மஞ்சச்செடியம்மா” என்று கேட்க

“இது பொகீலச்செடி சாமி” என்று அந்த முதியவர் சொல்ல மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

அம்மாவுக்கு என் செய்கை பிடிக்கவில்லை, “என்ன பழக்கம் பழகி இருக்க? பெரியவங்க பேசறாங்கல்ல” என்றாள்

“அட, விடு சாமி. சின்னப்புள்ளய ஏந்திட்டற” என்று  அந்த பெரியவர் என் அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, என் அப்பா ஏன் வரவில்லை? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

பனியன் மட்டும் தெரிய‌சட்டையை முழுமையாக திறந்து விட்டபடி “அந்த கூடய அந்தப்பக்கம் எடும்மா” என்றபடி கியரை போட்டார் ட்ரைவர்.

என் அப்பாவும் ஒரு ட்ரைவர்தான், பல முறை அவரோடு பஸ்ஸில்  போயிருக்கிறேன் யாரையாவது திட்டிக் கொண்டே அப்படி கியரை போடும் போது ஒரு கதாநாயகனாகவே காட்சி அளிப்பார். வளர்ந்து பெரியவனானால் நானும் ஒரு ட்ரைவராகவே வேண்டும் என்று எப்போதும் எனக்குள் ஒரு ஆசை

என் பாட்டி பெரும் பிடிவாதமும், வைராக்கியமும் கொண்டவள். என் அப்பாவும் இதற்கெல்லாம் சளைத்தவரா என்ன?

அவர்களுக்குள் பிரச்சனை, பேசிக்கொள்வதே இல்லை என்று அம்மா பல முறை என்னிடம் சொல்லி அழுது இருக்கிறாள்.

“கோட்டுபாளையம் வந்தாச்சு எறங்குங்க”

நானும் அம்மாவும் இறங்கினோம்.

பஸ் ஸ்டான்டின் அருகே ஒரு வாட்டர் டாங்கு அதை ஒட்டி ஒரு நீளமான ஆனால் குறுகலான தெரு, இடதும் வலதுமாய் பழைய வீடுகள் மொத்தமாய் ஒரு ஐம்பது வீடுகள் இருக்கும் போல. அந்த தெரு சென்று முடியும் இடத்தில் ஒரு குடிசையும் அதற்குப் பின் புகையிலை தோட்டங்கள்.

வழியெங்கும் ஆளாளுக்கு விசாரித்தார்கள்.எல்லோருக்கும் பதில் சொல்லிவிட்டு பாட்டி வீட்டுக்கு வரும் போது பாட்டி குமுதம் படித்துக் கொண்டு இருந்தாள்.

என்னை பார்த்ததும் வந்து கட்டிப் பிடித்து முத்தம் தந்தாள், வெற்றிலை வாசத்தோடு பிசுபிசுப்பும் கன்னத்தில் ஒட்டியது, நான் திமிறிக்கொண்டு விலகினேன்.

“என்னடி, உன் மகன் ரொம்பத்தான் சிலித்துகுறான்” என்றாள்.

சுற்றி பார்த்தேன், ஒரு சின்ன டிவி, ஒரு டேப் ரிக்கார்டர் இருந்தது, வாரப்பத்திரிக்கைகள், ரமணிசந்திரன், பாலகுமாரன், தேவிபாலாவின் நாவல்கள் நிரம்பி இருந்தன. அப்புறம் பாட்டியின் பகுதி நேர தொழிலான தையல் மெசின்.

அம்மாவும் மகளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், பதில் தெரிந்து இருந்தாலும் இடையே ஏன் அப்பா வரவில்லை என்ற காரணத்தை பாட்டி கேட்டு தெரிந்து கொண்டாள்.

வீட்டிலிருந்த காம்ப் கட்டிலில் ஒரு காலை மடித்து விட்டு அதை சருக்கல் மரமாக்கி ஏறி, சிறிது விளையாடி கொண்டு இருந்தேன்.

இரவு வரைக்கும் நேரம் நத்தையாய் ஊர்ந்தது.

சாப்பிட்டு கொண்டு இருந்த‌போதுதான் என் அம்மா அந்த குண்டை தூக்கிப் போட்டாள்.

ம‌று நாள் காலை அவ‌ள் ம‌ட்டும் கிளம்பி விடுவாளாம் இன்னும் ஒரு வார‌ம் க‌ழித்து பாட்டி கொண்டு வ‌ந்து ஊரில் விட்டு விடுவாளாம். நானும் பாட்டியும் ம‌ட்டும் இன்னும் ஒரு வாரம் த‌னியாக. ‌கேட்ட‌போதே கால் கிலோ பாவற்காயை பச்சையாக சாப்பிட்ட‌து போல‌ இருந்தது.

சாப்பாட்டுத் த‌ட்டை தள்ளி விட்டேன். என் அம்மாவை விட்டு இருக்க வேண்டுமென்ற எரிச்சலில் இருக்க‌வே முடியாது என்று ஓரியாடினேன்.

“ஏன் கண்ணு, எங்கூட நீ இருக்க மாட்டியா”? என்று ஏக்கத்தோடு கேட்டாள் பாட்டி

“உன்ன புடிக்கல போடி, நான் எங்கம்மா கூடத்தான் இருப்பேன் என்று அழுதேன்.

பாட்டிக்கு கடுமையான கோபம், என் அம்மாவை கண்டபடி திட்டினாள்.

“என்னடி இப்படி வளத்தி வெச்சிருக்க எப்படிடீ என்னையே புடிக்காம போகுமா அவனுக்கு?

அட, ஏம்மா அவன் சின்ன பையன் எதோ வெவரம் தெரியாம பேசறான், நீ அதப்போய் பெருசு பண்றே என்று எவ்வளவோ சமாதானம் செய்தும் கோபத்தில் விடிய விடிய துணி தைக்க ஆரம்பித்து விட்டாள்.

நானும் தேம்பியவாறே உறங்கி விட்டேன், திடீரென முழிப்பு வந்தது. அப்போதும் பாட்டி தைத்துக்கொண்டு இருந்தாள்

மூத்திரம் போக வேண்டும் போல இருந்தது, என் அம்மாவை கூப்பிட்டேன். இது அவள் முறை, வர மறுத்து விட்டாள். பிடிவாதக்காரி, வெளியே சென்று பார்த்தேன்.முள்ளுக்காடு, முழுதும் இருள் அப்பி கிடந்தது.

பாட்டியை கேட்கவும் மனமொப்பவில்லை.

“எனக்கு இங்க போர் அடிக்கும்மா” என்றேன்.

என்ன கண்ணு, பாட்டி உன்ன சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போகும் வேணும்கறத வாங்கி தரும், ரகள பண்ணாம இருக்கனுங்கண்ணு என்று சமாதானப் படுத்தி உறங்க வைத்து விட்டாள்

காலையில் கண்விழித்த போது அம்மா சென்று விட்டு இருந்தாள். அப்போதும் கோவத்தில் பாட்டி துணி தைத்துக் கொண்டு இருந்தாள் . அம்மாவின் இன்மையின் வேதனையில் அன்று முழுதும் பாட்டியுடன் தகராறு செய்து கொண்டே இருந்தேன், அவள் எனக்கு எல்லாமும் செய்து தந்தாள், வேண்டியதை எல்லாம் வாங்கித்தந்தாள் ஆனால் எனக்குத்தான் அவளை பிடிக்கவே இல்லை.

மறுநாள் சினிமாவுக்கு அழைத்துப்போனாள், எனக்கு தியேட்டரில் சென்று இருட்டில் படம் பார்க்க பயம். அந்த படத்தில் வேறு, பேய் வருவதைப் போல காட்ட நான் மிகவும் பயந்து போனேன். “அது ஒன்றுமில்லை சும்மனாச்சுக்கு” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி, அன்றைக்கு இரவு காய்ச்சல் வருவதை போலவே இருந்தது. ஒரு நாள் சந்தைக்கும் மற்றொரு நாள் பள்ளிக்கும் கூட்டிப்போனாள். இப்படியாக மீதமிருந்த ஒரு வாரமும் ஒரு வருடத்தை போல ஆமையாய் ஊர்ந்தது. ஊருக்கு கிளம்பும் முதல் நாளும் சினிமாவுக்கு கூட்டிப்போனாள். “அய்யயோ சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே, சினிமாவுக்கு கூட்டிட்டு போறியே” என்று எல்லோரும் வேடிக்கை பார்க்க ரகளை செய்ய ஆரம்பித்து விட்டேன். அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் நான் பிடிவாதமாக இருந்து விட படம் பார்க்காமல் திரும்பி விட்டோம். அவள் சரித்திரத்திலேயே தியேட்டர் வரை சென்று படம் பார்க்காமல் திரும்பியது அன்றுதான். இரவு நான் மிகவும் சந்தோசமாக தூங்கினேன்.

மறுநாள் எங்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டு விட,  நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். வந்ததும் வராததும் பசங்களோடு கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். பாட்டி திரும்ப ஊருக்கு போகும் போது வழியனுப்ப பாதி விளையாட்டில் வந்து அம்மா கூடி போனாள். வண்டி வந்து விட எனக்கு வலுக்கட்டாயமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு படியேறினாள். கை அசைக்கும் போது கண் கலங்கினாள். நான் திரும்ப கையசைக்காமல் குஷியாக மறுபடி விளையாட போய் விட்டேன்.பாட்டி மிகவும் வருத்தப்பட்டதாக அம்மா திட்டினாள், நான் செய்வது தப்பு என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

திடீரென்று ஒரு நாள் பாட்டிக்கு  மஞ்சள் காமாலை வந்து விட்டதாக செய்தி வர அம்மாவும் அப்பாவும் போய் கூட்டி வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பாட்டி உடல் நிலை மோசமாகப் போனது. இந்த சூழ்நிலையில் அப்பா, அம்மாவுடன் பாட்டிக்கு  ஒத்தாசையாக இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மா தினமும் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போய் வந்தாள். ஒருநாள் மட்டும் அம்மா என்னையும் கூட்டி போனாள். தீபாவளி அன்று சாப்பாடு  கொண்டு போகும் போது அம்மா என்னையும் கூப்பிட்டாள். “போம்மா நான் வரமாட்டேன் எல்லாருக்கும் இன்னிக்கு தான் ஸ்கூல் லீவ். இன்னிக்கு டிவில நெறைய ப்ரோக்ராம் எல்லாம் போடுவாங்கம்மா. சாயங்காலம் கிரிக்கெட் வேற இருக்கு” என்று சொல்லி நான் போக மறுத்து விட்டேன்.

அம்மா போன போது பாட்டி கடுமையான கோவத்தில் இருந்து இருக்கிறாள்.

“தீபாவளி அன்னிக்கு என்னைய இப்படி போட்டு படுக்க வெச்சு இருக்கிங்களே, என்னைய சினிமாவுக்காச்சும் கூட்டிப் போடி ” என்று அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கிறாள்.

“அட.சரி என்னென படம் ரிலீசுன்னாவது சொல்லு” என்று கேட்டதிற்கு “தெரியல, நான் பாக்கலே”ன்னு வெறுப்போடு சொல்லி இருக்கிறாள் அம்மா

“உன்னைய படிக்க வெச்சதுக்கு ஒரு போஸ்டர் பாத்து இன்னின்ன தியேட்டர்ல இன்னின்ன படம் ஓடுதுன்னு கூட சொல்ல தெரியாதா” என்று வேறு திட்டி இருக்கிறாள்.

சாயங்காலம் கிரிக்கெட்டில் சச்சின் வெளுத்துக் கொண்டு இருக்க, அங்கு பாட்டியின் நிலைமை மிகவும் மோசமாக, காகிதமாய் துவண்டு விட்டாளாம்.

குளுக்கோஸ் ஏற்ற நரம்பு கூட கிடைக்காமல் டாக்டர்கள் அவதிப்பட்டு இருக்கிறார்கள். காமாலை முற்றிப் போய் அங்கு பாட்டியின் உயிர் பிரிந்து விட, அது தெரியாமல் சச்சின் அவுட் ஆனதிற்கு நான் வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன்!

இன்று நான் வளர்ந்து கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறேன். இப்போதெல்லாம் நிறைய சினிமா பார்க்கிறேன், எங்கு வெளியே போனாலும் ஆயிரம் கேள்வி கேட்கும் அம்மா சினிமாவுக்கு போகிறேன் என்றால் மட்டும் மறுவார்த்தை சொல்லமாட்டாள். ஒவ்வொரு முறை சச்சின் அவுட்டாகும் போதுதெல்லாம் என் மனம் மேலும் கனமாகிறது, என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக இதைப் பற்றி ஒரு கதை எழுதி என் பாட்டிக்கு சமர்பிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்!

தாக்கம்: The Way Home

Advertisements

Read Full Post »

ஏய், பிரசாதத்த வாங்காம அங்க என்னத்த வேடிக்க பாத்துக்கிருக்க…

கவிதாவின் தலையை லேசாக தட்டினான் கதிர்..

குருக்களிடமிருந்து குங்குமத்தை வாங்கி நெற்றியில் கீற்றிட்டவளை அமைதியாக ரசித்தவன்…சரி, வா அந்த திண்டுல உக்காருவோம்…

அறிவிருக்கா, அப்போ எதுக்கு தலைல தட்டுனிங்க…

ஆமா, அவரு பாட்டுல நீட்டிகிட்டே நிக்கறாரு, உம்பாடுல எங்கயோ பாத்துகிருந்தா…ஹேய்.. தள்ளி உக்காரு, அங்க பாரு யாரோ விபூதிய கொட்டிருக்கான்…

ஏன் கதிர், அம்மா கிட்ட நம்ப விஷயத்த சொல்லனும்னு சொன்னியே, சொல்லிடியா…

ஆமா…சரின்னு சொல்லிடாங்க…சொல்ல மறந்துட்டேன்..

எவளோ முக்கியமான விஷயம்… இப்பிடி சொல்றிங்க

நீவேற… எனக்கு எப்படியோ, கல்யாணமானா  போதும்னு இருக்காங்க…உங்கப்பா கிட்ட நேரம் பார்த்து பேச சொன்னாங்க…

ஹீம்ம்…..உங்கம்மா அப்படிங்கறாங்க ஆனா எங்கப்பாவுக்கு, தமிழ் சினிமால வர்ற மாதிரி USல எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம்..அவனுக்குதான் கட்டி குடுக்கனும்னு எங்க பெரிப்பா கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்..
.
கதிர் சிரிக்க….

நான் சீரியஸாதான் சொல்றேன்…

என்னது சீரியஸா சொல்றியா, அடிப்பாவி இதையே சாக்கா வைச்சு என்ன கழட்டி விட்டுடாத… எனக்கெல்லாம் தாடி வேற சரியா வராது….

நாம லவ் பண்ண ஆரம்பிச்சு, ஆறு மாசமாச்சு எப்பபாரு நம்பிக்கையில்லாம இதையே சொல்லிக்கிட்டு இருங்க… கோபப்பட்டாள். பொண்ணுக முடிவெடுக்க ரொம்ப யோசிப்போம்… ஆனா முடிவெடுத்துட்டோம்னா அதுல இருந்து மாற மாட்டோம்….

என்ன திடீர்னு, தலைவர் மாதிரி பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்ட….

நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன், உங்களுக்கு நக்கலா இருக்கா..

காமெடியா பஞ்ச் டயலாக் எல்லாம் நானா பேசுன்னேன்…

என் கவலை எனக்கு, இன்னும் ஒரு மாசத்துல எனக்கு காலேஜ் முடிஞ்சிடும், மீட் பண்ணறது ரொம்ப கஷ்டம்…அப்புறம் ஜூன் ஜூலைக்குள்ள கால் லெட்டர் வந்திருச்சுன்னா நான் சென்னை போய்டுவேன்…

சரி பொலம்பாத, எனக்கு மட்டும் அறிவில்லையா.. மெட்ராஸ்ல ரெண்டு மூணு கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன்..எதாச்சு ஒன்னுல கெடச்சிடும்….நீ மொதல்ல நம்ப விஷயத்த உங்கப்பா கிட்ட சொல்ற வழியப்பாரு…

இன்னும் கொஞ்ச நாள் இதே மாதிரி சுத்திகிட்டு இருந்தோம்னா, அவருக்கே தெரிஞ்சிரும்…

அடிப்பாவி, எதோ இந்த ஒரு மாசமா தான் வெளிய தனியா மீட் பண்றோம்..அதுவும் இங்க கோவில்லதான் பாத்துகறோம்..என்னமோ தெனமும் சினிமாவுக்கும், வைகை டேமுக்கும் போயிட்டு வர்ற மாதிரி சொல்லற…

அப்பறம் அடிக்கடி வீட்டுக்கு போன் பண்ணாதிங்க… போன ஹால்ல வேற வெச்சிருக்கோம்..ப்ரீயா பேச முடியாது..தேவை இல்லாம பிரச்சனை…

இது வேறயா, சரி ஓவரா உம்  பகுமானத்தை  காட்டாத… இனிமேல் நான் பண்ணல… மண்டையன் காறி துப்பறான்…இதுக்கு பேரு லவ்வான்னு..

அப்படியா சொன்னார், என்னால நம்பமுடியல.. என்கிட்ட எவளோ அமைதியா பேசுவாரு…

அவன பத்தி உனக்கு முழுசா தெரியாது..அவன் ஒரு பெரிய டெரர்…

கதிர், ரவியாவது என்னோட ரெண்டொரு வார்த்தை பேசறார். ஆனா செந்தில் ஏன்  பேசவே மட்டேன்கறார்..

அவரு பொதுவாவே அப்படித்தான்…  நாளாச்சுன்னா சரியாயிரும்..

சரி, நான் கெளம்பறேன் கதிர்.. என்னால நாளைக்கு கோவிலுக்கு வர முடியாது… சனிக்கிழமை பாக்கலாம்..

ம்ம்…சரி பாப்போம்…

                                     @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மாப்ள.. இனிக்கு சாயங்காலம் படத்துக்கு போலாம்டா, சேர்ந்து வெளிய போயி ரொம்ப நாளாச்சு..

என்ன சித்தப்பு போவமா…

ம்ம்.. போலாம்…சாயங்காலம் கடைக்கு வந்திருங்க…அப்புடியே போயிருவம்டா…

தியேட்டருக்கு கிளம்பும் சமயம்.

ஹலோ, ம்ம் சொல்லு..இப்போவா எத்தன மணிக்கு…சரி இன்னும் 20 நிமிஷம் கழிச்சு வரேன்…

மண்டையா, நான் வரலடா…

என்னாச்சு மாப்ள..

அவ கோவிலுக்கு கூப்றா..

என்ன பங்காளி.. இவன் திடிர்னு இப்புடி சொல்றியான்…

லேய்…இப்போ நீ வரியா இல்லையா…எவன் வந்தாலும் வராட்டியும்…நான் கெளம்பறேன்…

என்ன சித்தப்பு கோவிச்சுக்கற….

நான் எதுக்குப்பா உன்ன கோவிக்கணும்..உனக்கு முக்கியமான வேலை இருக்கும் போயி பாரு… டேய் நீ வண்டியில ஏறு…

                                              @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரண்டு வாரங்களுக்கு பின் ஒரு நாள் மாலை.. வைகை புக் ஷாப்…

ஹலோ…சொல்லுடா கதிரு… பதட்டமாகி…. ஆமா நான் செந்தில்தான் பேசறேன்..  நீங்க யாரு… என்ன சொல்றிங்க, எப்போ சார்… கதிருக்கு என்ன ஆச்சு…  இந்தா உடனே கெளம்பி வரேன் சார்…

என்னாச்சு பங்காளி…

நம்ப கதிருக்கு ஆக்சிடென்டாமுடா… அவன் செல்லுல இருந்து ஒருத்தர் கூப்புட்டாரு…

ஐயோ…அடி ஏதும் பலமான்னு கேட்டியா…

தெரியலடா, உடனே சாய்ராம் ஆஸ்பத்திரிக்கு கெளம்பி வரச்சொன்னாங்க…

எனக்கு பயமா இருக்கு பங்காளி, சீக்கிரம் வண்டி எடு.. நான் கடைய அடைக்கறேன் .

                                              @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அவசர சிகிச்சை பிரிவில் கதிர் படுத்திருக்க..அவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது..

அவனது வலது கால்  நசுங்கி, பேண்ட்  முழுவதும் ரத்த சகதியிலிருக்க நினைவிழந்திருந்தான்.

இந்த காட்சியை கண்டதும் மண்டையன், சித்தப்புவின் தோளில் சாயந்து தேம்பி அழ ஆரம்பித்தான்.. 

அவனை சித்தப்பு அமைதிப்  படுத்திவிட்டு… கதிரை கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு.. அவனது உடைமைகளையும், சிதிலமடைந்த அவனது வண்டியை சேர்த்திருந்த வொர்க் ஷாப்  நம்பெரையும் பெற்று கொண்டு திரும்ப..

கதிரின் செல் மீண்டும் அடிக்க தொடங்கியது…

யாரென்று பார்க்க…கவிதா..

பேச விருப்பமில்லாமல், மண்டையனிடம் பேசக்  கொடுத்து விட்டு டாக்டரை பார்க்க நடந்தான்..

முதலுதவி நடந்து கொண்டிருக்க…

நீங்கதான பேஷண்டோட ப்ரெண்டு… அவங்க பேரண்ட்ஸ உடனே வரசொல்லுங்க…

இல்ல டாக்டர், அவங்கம்மாவுக்கு இன்னும் தகவல் சொல்ல.. நீங்க என்கிட்டயே சொல்லுங்க…

என்னோட ரூம்ல வெயிட் பண்ணுங்க.. இதோ வந்தர்றேன்…

சித்தப்பு டாக்டரின் அறையில் 20 நிமிடங்கள் காத்திருக்க, டாக்டர் வேகமாக நுழைந்தார்

அவரின் பின்னால் அழுது சிவந்த கண்களோடு கவிதாவும்….மண்டயனும்,

இங்க பாருங்க… பேஷண்டுக்கு இம்மீடியட்டா… அப்பரெட் பண்ணி ஆகணும்…ரைட் லெக்ல க்ரஷ் இஞ்சுரி ஆகிருக்கு.. வலது கால முழங்காலுக்கு கீழ  எடுக்க வேண்டியிருக்கும்….

என்ன டாக்டர் சொல்றிங்க…

ஆமா மல்டிபிள் ப்ராக்ச்சர்னா கூட பரவல்ல…இது க்ரஷ் இஞ்சுரி, எலும்பு சுத்தமா நொறுங்கிரிச்சு…

இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்..

ஆம்புட்டேஷேன் பண்ணி ஆகணும்..இல்லென பஸ் ஸ்ப்ரெட்  ஆகி  நெலம மோசமாகிடும்.. இன்னிக்கு நைட்டே ஆபரேஷன் ஆரம்பிக்கணும்…நீங்க உடனே பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..

பணத்த பத்தி பிரச்சனையே இல்ல டாக்டர், நீங்க ஆக வேண்டியத பாருங்க…

பதட்டமாகி வெளியே வந்தார்கள்…

கவிதா அழுகையை அடைக்க முடியாமல் அழுது கொண்டிருக்க….

பங்காளி… கதிர் அம்மாவுக்கு சொல்லிரலாமா….

சொல்லலாமா, வேண்டாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்… எப்புடினாலும்  சொல்லித்தான் ஆகணும்..எனக்கு என்ன செய்யரதுண்டே புரியல.. இவன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்.. வண்டிய ஒழுங்கா வெச்சுக்கோடா.. அப்பபோ சர்வீஸ்க்கு விட்றா… ம்ஹும்… அக்கறையே இருந்ததில்லை… அந்த பிரேக்க கூட ஒழுங்கா வெச்சிருந்தது கெடயாது.. இப்போ பாரு..அவங்கம்மாவுக்கு நாம என்னாண்டு பதில சொல்றது…

பேசிக்கொண்டே இருந்த சமயத்தில்…

பங்காளி அந்த பிள்ளைய காணோம்…

ம்ஹ்ம்…விரக்தியாய் சிரித்தான்..இனிமேல் நாம அந்த பிள்ளைய பாக்கவே மாட்டோம்ன்னு நெனைக்கறேன்…. எங்கப்பன் பாய்சன் அடிச்சிருவேங்கறான், பாயாசம் சாப்புட்டுருவேங்கறான்னு அப்பிடியே கட்டய, குடுத்துட்டே கம்பிய நீட்டிருவாளுக..

சும்மா இரு பங்காளி, அந்த பிள்ள அப்படியெல்லாம் பண்ணாது…

லேய்..நடக்கற கதைய பேசுடா… எனக்கு இவன் வாழ்கைய நெனைச்சாத்தான்  கவலையா இருக்கு… இன்னும் அவங்கம்மா கிட்ட எப்படி சொல்லப்போறம்னு தெரியாது… ஒன்னும் புரியல…

ஏம்பங்காளி, எந்த வண்டி அடிச்சிதுன்னு தெரியலையா…

அவுங்கெல்லாம் வரும்போதே அடிபட்டு கெடந்திருக்கான்… அவன் முழிச்சாத்தான் தெரியும்..சரி நீ இங்கயே கூட இரு… நான் போய் பணத்த பெரட்டிட்டு வாறேன்…

எவளோ தேவைப்படும் பங்காளி…

அத வேற கேக்கலையே.. எப்டியும் 50 க்கு மேல ஆயிடும்.. விடு.. அந்த காஸ் ஏஜென்சிக்காக  வெச்சிருந்தத வெளிய ரொட்டேசன்ல விட்ருக்கேன்.. அவசரத்துக்கு ‘முத்தூட்’ ல  வாங்கிட்டு கூட அப்பறமா மாத்தி விட்டுக்கலாம்…சேரி நீ உள்ள போ நான் அவிங்கம்மாவுக்கு போன் பண்ணிட்டு, ரெண்டு மண்நேரத்துல பணத்தோட வர்றேன்… டாக்டர் கிட்ட ஒரு வார்த்த சொல்லிரு.. அப்புடியே 50 ஆயிரம் போதுமான்னு கேட்டுட்டு செல்லுக்கு அடி சரியா…

                                     @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வழியாக கதிரின் அம்மாவுக்கு திணறித்திணறி  விஷயத்தை சொல்லி  விட்டு, ஏற்பாடு செய்த  பணத்தை கவுண்டரில் கட்டி விட்டு…கதிரை அட்மிட் செய்திருந்த அறைக்கு சென்றவனுக்கு மெல்லிய அதிர்ச்சி..

கதிர் இன்னும் மயக்கத்தில் இருக்க… அவனையே பார்த்து கொண்டு, அருகே கவிதா அமர்ந்திருந்தாள்..

திரும்பி மண்டயனை தேட.. வராண்டாவின் மூலையில் நின்று கொண்டிருந்தவனிடம் சென்றான்.

என்ன பங்காளி, பணத்த கட்டிடியா…

40 ஆயிரம் கட்டிருக்கேன், அப்புறமா டாக்டர்கிட்ட பேசிக்கலாம்..எப்படியோ கதிரம்மா கிட்ட விஷயத்த சொல்லிட்டேன்.. இப்போதைக்கு லேசான அடின்னு தான் சொல்லி சமாளிச்சிருக்கேன்..கெளம்பி வந்துட்டிருக்காங்க…

சின்ன மௌனத்துக்கு பிறகு….

ஆமா, என்னடா இந்த நேரத்துல அந்த பொண்ணு இங்க வந்து உக்காந்திருக்கு…

என்னமோ சொன்னியே பங்காளி…அந்த பொண்ணு, இனிமேல் வாழ்ந்தா இவனோடதான்னு அவங்கப்பா கிட்ட சண்டைய போட்டு கெளம்பி வந்திருச்சு..

சித்தப்பு பதிலேதும் கூற முடியாமல், தவறாக நினைத்து விட்டோமே என்று வெட்கபட்டு உறைந்து நிற்க..

தன் ஒரே அன்பு மகளின் காதலை ஏற்றுக்கொண்டு ரிஷப்சனில் கவிதாவின் அப்பா, கதிரை பற்றி விசாரித்து கொண்டு இருக்க…

கதிரின் எதிர்காலம் குறித்து மண்டையன் மனதுக்குள் நிம்மதி அடைய..

காரணம்.

கவிதாவும்….காதலும்!

                                        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பின்குறிப்பு:

சித்தப்புவிலிருந்து, என்னிலிருந்து சமீபத்திய சுப்ரமணியபுரம் வரை பொதுவாக பெண்களின் காதல் மேல் இந்த சமுதாயத்தில் ஒரு இரண்டாந்தரமான பார்வையே  இருந்து வருகிறது. ஆனால் எல்லோருமே அவ்வாறு இருப்பதில்லை என்பதற்கு கவிதாவும்  ஒரு உதாரணம்.

இந்த கதையின் கரு, என்னை மிகவும் பாதித்த என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.

Read Full Post »

ஆனாலும் அவளை பார்க்காதவன் போல் தீவிரமாக ஆ.வி ஐ படிக்க ஆரம்பித்தான்…

ஹலோ, கதிர்..

நிமிர்ந்து..

கவிதா..

போலியாக ஆச்சர்யம் காட்டினான்…..

நீங்க எங்க இங்க… உங்க கடையா?

இல்ல, ஆனா அப்படி தான்…

என்ன கொழபறிங்க….எதாவது ஒன்ன சொல்லுங்க….

என்னோட பிரண்ட் செந்திலோட கடை, நாங்க எல்லாரும் ஒண்ணா தான் தங்கியிருக்கோம்…அதான் அப்படி சொன்னேன்… சிரித்தான். ..பசங்க வெளிய போயிருக்காங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்…

பிரிவோம் சந்திப்போம்  புக் இருக்கான்னு பாக்கலாம்னு வந்தேன்..

ஓ… அது ஸ்நேகாவோட படமாச்சே.. அந்த புக்கா…

இல்லைங்க இது நம்ப சுஜாதா 80ல ஆனந்த விகடனில் தொடர்கதையா எழுதின ஒரு அற்புதமான ரொமான்டிக் ஸ்டோரி…

ம்ம் நானும் கேள்வி பட்டிருக்கேன்..அந்தம்மா எவளோ பெரிய ரைட்டர்..
அவனை அறியாமல் சேற்றை வாரி சந்தோசமாக அப்பிகொண்டான்.

அவள் பலமாக சிரித்தாள்… உங்க பிரண்ட நெனச்ச பாவமா இருக்குங்க…

ஏங்க…

இல்லங்க உங்கள நம்பி கடைய விட்டு போயிருக்காரே….அதன் சொன்னேன்..சுஜாதாங்கறது மேல் ரைட்டர் தாங்க..அது அவுங்க மிஸ்சஸ் பேரு.. சரி நீங்க சிரமப்பட வேண்டாம்  நானே தேடிக்கறேன்…

பேசாம இருந்திருக்கலாம் போலேயே…ஒரு கதவ தெறந்தா ஆண்டவன் இன்னொரு கதவ மடார்ன்னு சாத்திப்புட்ரானே…என எண்ணிக்கொண்டு..

பா.விஜய், தபுசங்கர் புக்கெல்லாம் அந்த கடைசி ராக்ல இருக்குங்க…

நான் இன்னும் அவங்க புக்கெல்லாம் படிக்க ஆரம்பிக்கலைங்க…

அவள் தேடி இரண்டு பாகங்களையும் எடுத்து கொண்டாள்..

நான் ரொம்ப ரேரா தாங்க படிப்பேன்…அசடு வழிந்தான்.

பரவா இல்லைங்க…ஆனா கண்டிப்பா இந்த மாதிரி புக்க படிங்க..உங்களுக்கும் புக்ஸ்ல ஆர்வம் வந்திரும்..என்று பணம் கொடுக்க முற்பட்ட போது…

அட இருங்க, மொத மொதல்ல கடைக்கு வந்திருக்கிங்க என்ன சாப்டறிங்க…

ஹையோ…எனக்கு ஏதும் வேண்டாங்க…

சும்மா இங்கிட்டு உக்காருங்க கவிதா..நான் ரெண்டு நிமிசத்துல வந்தறேன்…

இரண்டு மாஸாவோடு வந்தான்….

இப்படி வர்ற கஸ்டமருக்கெல்லாம் செலவு பண்ணா கடை பனால் தான்…

எல்லாதுக்குமா பண்ணுவாங்ய ….ஸ்பெஷலானவங்களுக்கு மட்டும்தான்… உரிமையாடு புன்னைகைத்தான்…

ஏற்றுக்கொண்டாள்..மாஸாவையும்

எப்பவுமே அப்பாதான் புக்ஸ் வாங்கிட்டு வருவாரு இன்னிக்கு பேங்க் ஆப்-டே அதான் சரி நானே வாங்கிக்கலாம்னு…

எந்த பேங்குல இருக்காரு ..

இங்க தான் பக்கத்துல கோ-ஆப்ரடிவ் பாங்க்ல கேசியரா இருக்கார்..

அம்மா என்ன பண்றாங்க…

அம்மா ஆறு வருசத்துக்கு முன்னாடியே  தவறிட்டாங்க…

மன்னிச்சிருங்க கவிதா.. 

பரவால்லங்க… நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு..அப்பா செல்லம்..உங்களுக்கு நேடிவ்வே இதானா கதிர்?

இல்லங்க கரூர், நான் சின்ன வயசா இருந்தப்பவே, அப்பா எறந்துட்டாரு…வீட்டுல நானும் அம்மாவும்தான்…

அவளோடு பேசியபடியே, நல்ல்ல்ல்ல்ல கூலிங்காக வாங்கி வந்த 300 ml மாஸாவின் (ஏன்ணே, இதுக்கும் பெருசா இல்லையா? ) அளவு குறைவதை கண்டு மனதுக்குள் மிகவும் வருந்தினான்.

எத்தனையோ நாள் தான் லீவ் போட்டிருந்தாலும்..இந்த லீவுக்குதான் மிகப்பெரிய அர்த்தம் இருப்பதாக எண்ணி மனதுக்குள் மாக்கோலம் வரைந்து கொண்டிருந்த நேரத்தில் மின்னலென சித்தப்புவும் மண்டயனும்  கடைக்குள் நுழைந்தார்கள்.

எலேய், வண்டில பிரேக்க டைட் பண்ண மாட்டியா சாகத்திரிஞ்சமுடா….

நீ எதுக்கு என் வண்டிய எடுத்திட்டு போனே…அதெல்லாம் ஒரு நேக்கா அமுக்கணும் சித்தப்பு…

நல்ல நேக்க கண்ட போ..

சித்தப்பு,  இவங்கல ஞாபகம் இருக்கா..கவிதா இவரு தான் செந்தில் நான் சொல்லல இந்த கடையோட ஓனர். இவன் ரவி…

உனக்கு இப்ப காயமெல்லாம் ஆறிருச்சாமா …

அதெல்லாம் அப்பவே சரியாயிரிச்சு…என்று எழுந்தவள் இந்தாங்க ரெண்டு புக்ஸ் எடுத்திருக்கேன் என்று பணத்தை கொடுத்தாள்.

சரி நான் வர்றேங்க..பாக்கலாம்..

இந்தாமா புஸ்தகத்த மறந்துட்டு போற…

தேங்க்ஸ்ங்க செந்தில் … 

நீங்க சைக்கிள்லையா  வந்திங்க…

இல்ல கதிர், அன்னிக்கு என்னோட வண்டி சர்வீஸ்க்கு விட்டிருந்தேன், அதனால சைக்கிள்ல வந்தேன் ..

ஓஹோ..சரி பாத்து பத்திரமா போங்க..

அதான் நீங்க இங்க இருக்கிங்களே…

எங்க நீங்க அன்னிக்கு ராங் சைட்ல வந்திட்டு..என்ன சொல்றிங்களா.. என்று சிரித்து விட்டு கடைக்கு வெளியே வந்து

ரவி, நம்ப வண்டிய ஓரமா போடு அவங்க வண்டிய எடுக்கட்டும்..

இந்தா வாறேன் மாப்ள…

அவள் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு மறையும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தவனுக்கு விசாரணை கமிசன் காத்திருந்தது.

என்னையா அதுக்குள்ள வந்துட்டிங்க….

அந்தாள் எங்கள வரச்சொல்லிட்டு எங்கயோ தொலஞ்சிட்யான்…

மாப்ள, சரி அதெல்லாம் இருக்கட்டும்டா…இது என்னதிது..

பைக் சாவி…

நான் அத கேக்கலடி மாப்ள,  நீ இதுக்கு தான் லீவு போட்டியா..

டேய்.. நீ வேற, இது தற்செயலா நடந்ததுடா…

நீங்க ரெண்டு பேரும் செட்டாயி உக்காந்திருந்த சைச பாத்தா அப்படி தெரியலையே…
பாத்தியா பங்காளி மாஸா..நீயும் தான் இருக்கியே என்னைக்காவது எனக்கு வாங்கி குடுத்திருப்பியா?

என்னைய எதுக்கு கொடயற, அவன கேக்க வேண்டியது தானே….

அவன் எங்க நாம சொல்றத கேக்கறான்..அங்கிட்டு  பாரு எதோ இன்ஸ்பெக்சனுக்கு வந்தா மாதிரி புக்க நோண்டிகிட்டு  இருக்கறத..

ஏன் சித்தப்பு சுஜாதாவோட பிரிவோம் சந்திப்போம் இன்னொரு காப்பி இருக்கா..

என்ன திடீர்னு சுஜாதாவோட புக்க பத்தியெல்லாம் கேக்கற

இல்ல, படிக்கலாம்னு தான்.

ஏம்பா அதெல்லாம் தான் என் பழக்கமாச்சே உனக்கெப்புடி வந்துச்சுப்பா?

நம்ப கடைல இருக்கா இல்லையா…

பங்காளி, எடுத்து குடுத்திரு இல்லென இப்பவே மதுரைக்கு வண்டி ஏறிருவான்  போல…

அது வீட்டுலதாண்ட கெடக்கு, நான் போன வாரந்தான் படிச்சு முடிச்சேன்…

எனக்கு தெரியும் சித்தப்பு, நீ தங்கம்னு…

இப்புடி ஒரே அடியா பொங்கரானே…அந்த புக்ல என்ன விஷேசம் பங்காளி…

தெரியல… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி, இதே புக்குதான் ஸ்கூட்டில போச்சு…

அதானா சங்கதி..அப்ப சரி..

சும்மா பேசிக்கிருக்காம வெரசா கெளம்புங்க….. ரூமுக்கு போயி சாப்புட்டு ரெஸ்ட் எடுக்கலாம்…

என்ன மாப்ள, படத்துக்கு போகணுமுன்ட..

இல்லடா மண்டையா, எப்பவாச்சுதான் லீவே போடறேன்…நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டாமா.. ஏன் சித்தப்பு புக்கு வீட்டுலதான இருக்கு…

                                             @@@@@@@@@@@@@@@@@@@@

இதற்க்கு பின் அவளை சந்திக்கும் வாய்ப்பை அடிக்கடி ஏற்படுத்தி கொண்டான்.அவள் கல்லூரி, பாட்டு வகுப்புக்கு சென்று வரும் நேரங்களை பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டான்.
தேனீ பெயரளவிலேதான் மாவட்டம், மற்றபடி மிக சிறிய டவுன். ஆதலால் இவர்கள் சந்திக்கும் வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பித்து, நெருக்கமும் வளர்ந்தது.

இதை மண்டையன் ஆதரிக்கவும், நாசுக்காக சித்தப்பு கண்டிக்கவும்  தவறவுமில்லை. 

கவிதா, இந்த சண்டே நீ ப்ரீயா..

ஏங் கதிர்,

அன்னிக்கு என்னோட பர்த்டே, அதனால இங்க  போடிக்கு பக்கத்துல இருக்கற ஒரு ஹோம்ல சில்ரன்ஸ்க்கு புட் பீட் பண்ண போறோம். நீயும் வரணுங்கறது என்னோட விருப்பம்.

கைய குடுங்க..அட்வான்ஸ் விஷ்ஸஸ், நல்ல விஷயம் கண்டிப்பா போறோம்..

                                              @@@@@@@@@@@@@@@@@@@@

மண்டையா, இவ எங்கடா இங்கிட்டு வந்த…பொறந்த நாளதுவுமா வாயில விழுகரானே..

ஸ்கூட்டியை விட்டு இறங்கியவள் சிநேகமாய் புன்னகைத்தாள்

வாங்க..அசடு வழிந்து சிரித்தான் மண்டையன்

செந்தில், நான் என்ன ஹெல்ப் பண்ணட்டும் சொல்லுங்க..

நீ சிரமப்பட வேண்டாம்மா நாங்களே பாத்துகறோம்..

சித்தப்பு கவிதா கிட்ட ஸ்வீட் பாக்ஸ் குடுயா.. கவிதா, கொழந்தைங்களுக்கு  நீதான் ஸ்வீட்ட  குடுக்கணும்…

அமைதியாக குனிந்தது  திரும்பி…என்ன பங்காளி, ஓம்மூக்க காணோம்…

நடத்துங்கடா, எம்புட்டு நாளைக்குன்னு நானும் பாக்கறேன்

                                              @@@@@@@@@@@@@@@@@@@@

பின்பு நல்லதொரு நாளின், ராகு காலத்தில்…

கவிதா, எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியல…என்ன கல்யாணம் பண்ணிக்குவியா..

                                                       ?? ?? ?? ?? ?? ?? ?? ?? ?? ?? ??

Read Full Post »

யோவ், என்னையா நடந்திச்சு…. வாயத்தொறந்து பேசுயா…. டே மண்டையா  நீயாவது சொல்லுடா….

அரை நிமிட மௌனம்…. சித்தப்பு நீயாவது தயவு செஞ்சு சொல்லுயா…

அவனையே கேளு, என்ன பண்ணிருக்யான்னு……

ஏன்யா என் உயிரை வாங்கறிங்க…. அப்படி என்னதான்டா பண்ண?

சார், இனிக்கு வேலைக்கு போனாரான்னு கேளு?

அவன் காலைல கெளம்பி போனதத்தான் நான் பாத்தேனே….

வேலைக்கு போனான் சரி, எந்த வேலைக்கு போனான்னு கேளு…

அவனுக்கென்ன ஆறேழு வேலையா இருக்கு, பொடி வெக்காம விஷயத்த சொல்லுயா….

அவன் யுனிவெர்சிட்டிக்கு வேலைக்கு போயி நாலு நாளாகுது, அந்த டெம்ப்பரரி போஸ்டிங்க எடுத்திட்டாங்கயலாம்.இவரு நமக்கெலாம் பாரமா இருக்க வேண்டாம்ன்ட்டு, சென்றிங் வேலைக்கு போயிருக்காரு….

என்னையா சொல்ற, கம்பி கட்ற வேலைக்கா போனான்….ஏன்டா,என்னடா இதெல்லாம்…

இல்ல மாப்ள…

என்னடா…..சும்மா வாய் வார்த்தைக்கா நாம பழகறோம்…உன்ன என்னிக்காவது,எதுலயாவது விட்டு குடுத்திருக்கோமா…உன்ன கூலி வேலைக்கு போக….

கதிரு, சும்மா எதுக்கு பேச்ச வளத்துகிட்டு, ரவி சார், என்ன செய்யராரோ..அதுபடி செய்யட்டும்…ஆனா எங்கயாச்சு, பங்காளி மாப்ளன்ட்டு மறுபடி பசப்பரத பாத்தேன், கொல விழுகும் ஆமா சொல்லிட்டேன்…

அட நீ இரு சித்தப்பு….நான் பேசிக்கறேன்…

பின்ன என்னடா, இவனுக்கு முன்னாடி ஒரே ஒருநாள் நாம சாபுட்ருப்போமா..எதுலயாவது பிரிச்சு பாத்திருப்பமா…  இவரு பெரிய தியகியாட்டமா…வேண்டாம்டா ஒரே பேச்சு, சார் அவரு இஷ்டபடி என்ன வேணுமோ செஞ்சுக்கட்டும்…

இல்ல பங்காளி..

நீ பேசதேன்னேன்..

நான் பண்ணது தப்புதான், எதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிபுட்டேன் பங்காளி…மாப்ள நீயாவது சொல்லு மாப்ள…

விடு சித்தப்பு, அவன் அழுதாத்தான் நீ விடுவியா…. அட பேசுயா…

சரி இப்போ சொல்றன்டா, நாங்க சொல்றத கேட்டுட்டு இங்க இருக்கற மாதிரி இருந்த இரு..இல்லேனா அப்பறம் உன் சௌரியம்

சரி பங்காளி… அதான் கேக்கறேன்டன்ல…

நான் கேஸ் ஏஜென்சி போடலாம்டு இருக்கேன்..அது சம்பந்தமா நான் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்..நீ SI செலெக்ஷன் போற வரைக்கும்..கடைல ஒத்தாசையா என்னோடையே இரு…

சரி, இவளோதான, விடு பங்காளி இருந்துட்டா போகுது…

சூழ்நிலை சரி இல்லாததால் கவிதா விஷயத்தை தற்காலிகமாக தள்ளிப்போட்டான் கதிர்.

                                      @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அண்ணே, ரெண்டீய… ம்ம் மூணு டீய குடுத்து விடுங்க…என்று விட்டு வைகைக்குள் நுழைந்தான்.

சித்தப்பு, மளிகைசாமா வேற தீர்ற மாதிரி இருக்கு.. இன்னிக்கு சாயங்காலம் வாங்கிருவோம்….

ம்ம்… சரிடா

என்ன மாப்ள, இன்னிக்கு வேலைக்கு போகலையா…

இல்ல, லீவ் போட்டு ரொம்ப நாள் ஆகுது…அதான் இன்னிக்கு பாடிய ரெஸ்ட்ல போடலாம்டு..ஏன்னா இன்னிக்கு போட்டம்னா, நாளைக்கு ஞாயிரும் சேத்து ரெண்டு நாள் லீவ் இல்ல…சரி இந்தா தம்ம பத்த வெய்….

லேய், கடைக்குள்ள அடிக்காதிங்கடா….

இது எப்ப இருந்துயா..உம் பகுமானத்துக்கு அளவே இல்ல. எல்லாம் நாளைல இருந்து பாக்கலாம்….நீ பத்த வைடா…  என்னத்தயா சும்மா  படிச்சுகிட்டு இருக்க..

காரல் மார்க்சும் கம்யூனிசமும்….

ஆமா… என்னையா, புக் வாங்கி வெச்சிருக்க….பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள், சேகுவேராவின்  கொரிலா தாக்குதல்…பாரதிதாசன் பாடல்கள்…எவன் வாங்குவான்….ஒரு தபுசங்கர்ரோட தேவதைகளின் தேவைதை,பா.விஜயோட “திமிரழகி”, காதல் படிகட்டுகள் இந்த மாதிரி  புக்க வாங்கி வைக்க மாட்டியா….

இப்போ உனக்கு என்ன பிரச்சனை, என்னிக்காவது கடைல வந்து ஒரு புக்க பொறட்டி இருந்தா தெரிஞ்சிருக்கும்… நீ சொல்றதெல்லாம் அந்த கடைசி ராக்ல இருக்கும் பாரு…

அட சும்மா உன்ன டெஸ்ட் பண்ணே சித்தப்பு, மண்டையா என்ன கடை ஒன்னும் கள கட்டலியே…பக்கத்துல தளபதி மியூசிகல்ஸ்ல சொல்லி நல்ல 80ல வந்த இளையராஜா ஹிட்ஸ்ச போட சொல்லு….

எதுக்கு இப்படி சம்பந்தமில்லாமல் சலம்பிக்கிருக்க..நாலு நாளாவே உம்போக்கு சரியில்லையே..

அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பு….சரி காதலைபத்தி நீ என்ன நெனைக்கற..

கையைக்கட்டி கல்லுகக்குழில  குதிக்கறத பத்தி நீ என்ன நெனைக்கற..

என்ன சித்தப்பு பொசுக்குனு, இப்பிடி சொல்லிபுட்ட

மாப்ள, அப்படியா சங்கதி, யார்ரா அந்த ஜாரி….

அப்படியெல்லாம் சொல்லாதடா ரவி….

என்ன மாப்ள, புதுசா ரவின்னு பேரு சொல்லி கூப்படற…உனக்கு என்னடா  ஆச்சு…

நான் கவிதாவ மறுபடி பாத்தண்டா..

கவிதாவா?…

இது என்ன புது கதையா இருக்கு, பங்காளி

என்ன கேட்டா, எனக்கென்ன தெரியும்..வேறொன்னுமில்ல நாலு நாளைக்கு முன்னாடி தன் உனக்கு வேப்பெலை அடிச்சுது, அவனுக்கும் அடிச்சா சரியாயிரும் ….

சரி சித்தப்பு, நான் நேரடியவே சொல்லிறேன்.. அன்னிக்கு நாம இடிச்சுப்புட்டம்ல… அந்த பொண்ண நான் மறுபடி பத்தர ஆபிஸ் ஸ்டாப்ல வெச்சு பாத்தேன்….நல்ல பேசுனா…என்னமோ தெரியல… இனி அவளோட தான் வாழணுமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அதான் முடிவு பண்ணிட்டயில்ல.. அப்பறமென்ன..நாளைக்கே ரூம காலி பண்ணிட்டு தனிக்குடித்தனம் போயிரு.

அட நீயென்ன பங்காளி, அவன் இப்படி ஒரு நல்ல விஷயத்த சொல்றான்… நீ என்னமோ இப்பிடி பேசிக்கிருக்க…

டேய், ஒருத்தன் தெரியாம குழில விழுந்துட்டா கைய குடுத்து காப்பாத்தலாம்…அவன் கைத்தக்கட்டி  எறங்கிட்டு இருக்யான் அவன ஒன்னும் பண்ண முடியாது… பொட்டச்சிய நம்பி போகாத கதிரு, கடைசில சட்டைய கிழிச்சிட்டு தான் திரியப்போற…

விடு மாப்ள, பங்களிக்கு வயசாயிரிச்சு. இப்படிதான் எதையாவது சொல்லிகிருப்பாப்ல …

அமாண்டா எனக்கு வயசாயிரிச்சு, இவிங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு காலாண்டு பரிச்சை…… பாத்து படிங்கப்பா…

அந்தாள் கெடக்கறான், நல்ல விஷயம் மாப்ள…விடு அமச்சுருவோம்.

நீங்க அமைக்கறது இருக்கட்டும்..மொதல்ல சிகரட்ட அமத்திட்டு வாங்கடா….டீ ஆறுது

டீ குடித்து முடித்த பிறகு…

கதிரு கடைல இரு, நாங்க கொஞ்சம் வெளிய போறம்….

யோவ் சீக்கிரம் வாங்கையா..எவளோ நேரம் விட்டத்தையே பாத்துட்டு உக்காந்திருக்கறது….

அதன் இம்புட்டு புக் இருக்கில்ல…எதாவது எடுத்து படிச்சிக்கிருக்க வேண்டியது தானே….

நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்யா…அதெல்லாம் உன்னோடயே வெச்சுக்கோ….மண்டையா அந்தாள வெரசா கூட்டியாந்திரு…நாம மதியம் எதாச்சும் படத்துக்கு போலாம்…

சரி மாப்ள…

அவர்கள் போன பிறகு…ஜன்னலை திறந்து பக்கவாட்டில் இருந்த மியூசிகல்சில் குரல் குடுத்தான்…

சுந்தரண்ணே, ரெகார்டிங் பண்ணது போதும்ணே….செத்த நேரம் எதாச்சு பாட்டப் போடறது….

யேய்..இன்னிக்கு வேலைக்கு போலயாப்பா….சரி ரெண்டு நிமிஷம் இந்த கேசட் முடிஞ்சரட்டும் போட்ருவோம்..

ஆனந்த விகடனில் சினிமா சம்பந்தமான செய்திகளை,கட்டுரைகளை தேடித்தேடி படித்து கொண்டிருந்தான்….

எதேச்சையாக நிமிர்ந்தவன், காலண்டரை பார்காமலே 11ல் இருந்து நல்ல நேரம்தான் என்று உணர்ந்து கொண்டான்.

கடைக்குள் கவிதா…

“உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே.”

சுந்தரண்ணே சூப்பர்ணே…

                                       @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Read Full Post »

(more…)

Read Full Post »

“ஏலேய்! இன்னிக்கு வேலைக்கு போலயாடா….”சித்தப்புவின் சத்தம் கேட்டு அஷ்டகோணலாக படுத்திருந்த கதிர் எழுந்தான்…

லேசாக கண்விழி….த்து மொபைல் போனை எடுத்து மணியை பார்த்துவிட்டு…”பதினோரு மணிக்குதான் டாக்டர் வருவாப்ல!! நீ என்னைய்யா வெள்ளனவே உசுப்பி விட்ட”..

“ஏன்டா மணி 9 ஆச்சு…வெளக்கெண்ணை…..வேலைக்கு கெளம்பற வழியப்பாரு! உப்புமா கிண்டிவச்சிருக்கேன் சாப்புட்டு.. 10 மணிக்குள்ள கடைக்கு வந்துரு, டீ அடிச்சுட்டு.. அப்பறமா ஊரு மேயப்போ”

மதியத்துக்கு???

இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு கேளுடா, சோத்த உருட்டி… வாயிலயே வெக்கறேன்.. அரிசி ஆயிப்போயிரிச்சு ….மத்தியானம் பாண்டியன்ல சாப்டுக்கலாம்…

“மண்டையன் எங்க?”..

“அவன் யுனிவெர்சிட்டி கெளம்பி போயிட்யான்…..ரூமப்பூட்டி சாவிய ஷூவுக்குள்ள போட்டுரு, மண்டையன் மூணு 3 மணிக்கெல்லாம் வந்துருவ்யான்.

“யோவ் தம்மு காலியாயிரிச்சு, ரெண்டு பாக்கெட்ட வாங்கிக் குடுத்துட்டு போ”…

“தொலையறேன், வாங்கி தொலையறேன்…உங்களுக்கு மொறவாசல் செஞ்சே நான் ஒரு வழியாய்ட்டேன்…ஏலெய், இனிமே வண்டிய அவன் தொட்டன்னா கைய வெட்டீருவேன்னு சொல்லு, , நேத்து P.C பட்டிகிட்ட போயிட்ருக்கும் போது பாதிலயே பெட்ரூல் இல்லாம வண்டி நின்றுச்சு…எடுக்க வேண்டாம்னு சொல்ல, மைலேஜ் செக் பண்ணனும்னு ரிசர்வுல வச்சிருந்தேன் சொன்னாத்தான எனக்கும் கணக்கு தெரியும், …ஏன்டா என் உசுர வாங்கறீங்க….

ஏய் நீ என்னைய எம்மேல ஏர்றா…சரி பேசாம கெளம்பு…ஒரு 10  நிமிஷம் கோழித்தூக்கம் போட்டுக்கறேன்…

கதிர் ஒரு சின்ன கம்பெனியில் மெடிக்கல் ரெப், தேனியிலிருந்து ரெண்டு டிஸ்ட்டிரிக்ட் சேல்சும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்..சித்தப்பு (எ ) செந்தில் சொந்தமாக ஒரு புக் ஷாப் வைத்து நடத்திவருபவன். மண்டையன் (எ ) ரவி பட்டதாரி இளைஞன், யுனிவெர்சிட்டியில்  லேப் அசிஸ்டண்டாக தற்காலிக பணியில் இருப்பவன்.

கதிர் குளித்துக் கிளம்பி அவனது பாரம்பரிய உடையுடன், வைகை புக் ஷாப் முன் ஸ்ப்லெண்டரை நிறுத்தினான். டீக்கடையில் எட்டி பார்த்து, அண்ணே ரெண்டீய குடுத்து உடுங்க….என்று விட்டு வைகைக்குள் நுழைந்தான்…

“ஏன்டா எதுக்குடா இந்த வேசைல கழுத்துக்கு சுருக்கு போட்டுட்டு திர்ற”

“யோவ்..ஏன் கேக்க மாட்ட, நான் உன்ன மாதிரி இருந்தா காத்தாட கோமணங்கூட கட்டிட்டு போலாம்.. காலைலேயே வாயப்புடுங்காத…இந்தா தம்ம பத்த வை..
ஆமா மண்டையன் கததான் என்ன.. காலைல தலமாட்ல உக்காந்து சலச்சலண்டுகிட்ருந்தான்.இப்போ என்னாவாம்  அடுத்து எதுல ஏறங்கிருக்யான்…

நீ பாக்கலையா, ஒரே வார்மப்புதான்…ரன்னிங்தான்..படிப்புதேன்… சாயங்காலமானா நேரா “ப்ரெண்ட்ஸ்” ஜிம்முக்கு போய்யரியான்.ஏன் கேக்ற போனவாரத்துல இருந்து ரூம்ல அவன் பண்ற அலம்பல் தாங்கல…SI ஆகறாராமா…

இப்போ இவன் SI ஆகலேன்னு யார் அழுதா… செலக்ட் ஆனாலும் லச்சம் குடும்பான்…லஞ்சமா வாங்கி குடுக்கரேன்னா சொல்லுவான்…அந்த வெண்ணைய என் கம்பேனில சேத்துவிட்றேன்னு சொன்னேன்… முட்டாப்பய நாம சொன்ன எங்க கேக்கறான்…சரி, இவன் கதையப் பேசுனா நம்ம கதை ஓடாது… ராஜபாண்டியன் வந்திருபாப்ள நான் வர்றேன், அப்படியே பெரியகொளம் போகணும், மதியம் அங்கனக்குள்ளேயே எங்கயாச்சும் சாப்டுக்கறேன்…ம்ம்  என்னியா இன்னிக்கு செகண்ட் ஷோ போலாமா..??

புதுப்படம் நேஷனல் தான் ஓடுது.ஆனா நாச்சியோட அப்பா கவுண்டர்  முன்னாடியே நிப்பாரு அவிங்ய புது வீட்டு விசேஷத்துக்கு வேற நாம போகல, ஏன் வரலேன்னு கேப்பாப்ள…நாம  கிருஷ்ணா தியேட்டருக்கு போகலாம்…

“ஆத்தி மண்டையன் ஆளு நடிச்ச படம்டா, கொலையாக்கொல்லுவான்…சரி விதி விட்ட வழி. லேட் ஆற மாறி இருந்தாக்க செல்லுக்கு அடிக்கறேன், ரெண்டு பேரும் தியேட்டருக்கு வந்திருங்க….சமைக்க வேண்டாம் வெளியவே சாப்டுக்கலாம் சரியா, பாப்பம்யா….”

                                       @@@@@@@@@@@@@@@@@@@@

என்னா மாப்ள, இம்புட்டு லேட்டா வர்ற, இன்னும் அரமண்நேரந்தான் இருக்கு..சாப்பட வேற  இல்லடா!!

100 கிலோமீட்டருக்கு மேல பைக்லயே திரிஞ்சிட்டு வந்திருக்கேன்…முதுகெல்லாம் வலிக்குது…அஞ்சு நிமிஷம் பொறுடா..ஏஞ்சித்தப்பு  இவந்தா பசி தாங்கமாட்டான்னு தெரியும்ல, நீங்க சாப்புட்றுக்க வேண்டியது தான…

சரி, விடு சாப்பட்லேனா செத்தர மாட்டான்…சேந்து சாபட்லாம்னுதான் உக்காந்திருக்கேன் அவன போகச்சொல்லு அங்கிட்டு…போன வாரம் கடைல உக்காந்து பேசிக்கிருந்தோம்…கைலியோட இருந்தவன் விருட்டுன்னு SRTல ஏறிப்போய்ட்யான்.மூணு மணி நேரங்கழிச்சு திரும்பி வாரான்…எங்க போயிட்டு வந்த்யான்னு கேளு..

எங்கடா போன….

திடீருண்டு பிரியாணி திங்கணும் போல இருந்திச்சு, அதான் மதுர போயி தின்னுட்டு வந்தேன்…

அசதியை மறந்து சிரித்தான் கதிர்…..ஏன்டா, இங்கெல்லாம் பிரியாணி கெடைக்காதா…அம்புட்டு தூரம் எதுக்குடா போன..ஒரு விநோதமாத்தான் திர்ற.சரி வா மொதல்ல, ரெண்டு பொரட்டாவ பிச்சுப்போட்டு கெளம்புவோம்…

மாப்ள ரெண்டு தானா?

யார்றா இவன் எவ்வளவு வேணுமோ சாப்புட்றா….

என்ன பங்காளி, பாத்துமால “போலீஸ் ஸ்டோரி”  போட்ருக்கான் அங்கிட்டு போலாமா….

ஏன்டா, அவன் என்னடான்ன சித்தப்புன்ற்யான், நீயென்னடான்னா பங்காளின்ற.. எதாச்சும் ஒரு முறையச்சொல்லுங்கடா….கதிரு, SI செலக்ஷனுக்கு போறம்போறன்னு, இவன் பண்ற அலம்பலுக்கு அளவே இல்ல…ரூமுக்குள்ள பாரு, சினிமாவுல இருக்கற பாதி ஹீரோ போலீஸ் டிரஸ்ல பரேடுக்கு நிக்கற மாதிரியே வரிசையா ஒட்டி வெச்சிருக்கான்..அங்கிட்டு போனம்னா ரூமுக்கு வரும்போது மூட்டையோடதான் வரணும்…கொஞ்சம் நாளாத்தான் மூட்டப்பூச்சி இம்சை இல்லாம இருந்தோம்…போனவாட்டி எங்கயோ போயி ஏத்திட்டு வந்துட்யான்…மண்டையா பேசாம வா, உங்காளு படத்துக்கே போவம்..

ஆமா அவம்படத்துக்கு போறதுக்கு பேசாம போதயப்போட்டு ரூம்லேயே படுக்கலாம்….

என்னடா உங்காளு படத்த நீயே திட்ற…..

ஆமா ரெண்டு வருசமா ஹிட்டே குடுக்கமாட்றான்… 

சரி, நீ அப்ப சாப்புட்டு வந்து பேசாம படுத்துக்கோ…நாங்க வந்து ராத்திரிக்கு கதவத்தட்றோம்…என்னா…

என்னா மாப்ள பொசுக்குனு இப்படி சொல்லீட்ட.., இந்த படம் கண்டிப்பா ஹிட்டாகும் பாரு… சித்தப்பு உம்பாட்ல நின்னுகிட்டே இருந்த எப்பிடி வண்டிய எடுயா… 

உன்னைய கொல்லானும்டா, வண்டிய எடுத்தா சொல்ல மாட்டியா..மைலேஜ் பாக்கறதுக்காக ரிசர்வுல வெச்சிருந்தேன், உம்பாட்ல எடுத்துட்டு போயிட்டு பொத்துனாப்ல வந்து நிப்பாட்டிட்ட.நடூ ரோட்டுல நாய் மாதிரி நின்னுகிருந்த்தேன்..

ஆமா இல்லேனாப்ள இவரு மெயின்ல தான் வெச்சிருப்பாரு…சும்மா எனத்தவாச்சும் சொல்லாத….வண்டி எடுத்தன்னைக்கு ஷோரூம்க்காரன் மெயின்ல போட்டுக்குடுத்தது…அதுக்கும் பெறகு வண்டி மெயினையே பாத்ததில்ல…சாச்சு சாச்சு ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு போரது எதுத்தூட்டுக்காரனுக்கு கூட தெரியும்…

சரி நீ இனிமே வண்டிய தொடாத….

நாளைல இருந்து வேணா பாக்கலாம்..சாவிய கொண்டா நானே எடுக்கறேன்.. 

ஏண்டா மண்டைய அந்தாளு அந்தக்கிழிகிழிக்கிறான்…மறுபடியும் வண்டிய எடுக்கற…

என் பங்காளி வண்டிய நான் எடுக்காம வேரெவண்டா எடுப்பான்..சிரித்தபடியே சித்தப்பு வண்டியில் ஏற.. நாகர் ஹோட்டலுக்கு வண்டியை விரட்டினார்கள்…

                                  @@@@@@@@@@@@@@@@@@@

என்னடா இந்தவாட்டியும் உங்காளு கவுத்திட்டான்…என்றபடியே கதிர் கதவை திறந்து லைட்டை போட்டான்.

ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போயி, என்ன சித்தப்பு..நாளைக்கு போவமா…

ம்ம்..போவம்டா..அப்ப  நாளைக்கு சாயங்காலம் சீக்கிரம் வந்திரு…

பெருமாள் கோவிலுக்கு போலாம். சாயங்காலம் எதாவது பிரசாதம் குடுப்பாய்ங்க பங்காளி…

ஏண்டா ஒரு மணிக்கு கூட உனக்கு சோத்து நெனப்பு தானா..

கைலியை உடுத்திவிட்டு பாயை போட்டார்கள்…

இப்படியே ஏத்தின்நாளைக்குத்தான் நாம கதைய ஓட்றது. நீ எப்பய்யா கல்யாணம் முடிப்ப…

பாத்துகிட்டே இருக்காங்க்ய… இந்த மாசில முடிஞ்சிரும்…

அடப்போ பங்காளி, இப்படித்தேன் போன மாசிலையும் சொன்ன…சரி மாப்ள உங்கதை என்ன…வீட்ல ஏதும் பொண்ணுகிண்ணு பாக்கறாங்க்யலா?

இல்லடா கொஞ்சம் கடம்பாக்கியிருக்கு, கொஞ்சம் காசு சேத்ததுக்கப்பறம் பாக்கலாம்ண்டு இருக்கேன்…

என்னடா இழுக்கற, வேற ஏதும் ஜாரியகீரிய கரெக்ட் பண்ணி வெச்சிருக்கியா….

நம்மலய எவடா பாப்பா… கொஞ்ச நேரம் வெயில்ல சுத்திட்டு வந்து கண்ணாடியப்பாத்தா நம்பலாலையே நம்ப மூஞ்சிய பாக்க முடியாது…பேசாமப் பட்றா…காலைல நேரத்துல போகணும்..என்று விட்டு வேகமாய் உறங்கிபோனான்.

நாளைதான் அவன் வாழ்விலேயே மிக முக்கியமான நாள் என்பதை அறியாமல்…..

                                                                         -உங்கள் ஆசியுடன் தொடரும்

Read Full Post »

%d bloggers like this: