Feeds:
Posts
Comments

Archive for the ‘கட்டுரை’ Category

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்… திடும்… திடும்…

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

Advertisements

Read Full Post »

பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்து மெட்ரோவுக்கு வந்து, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை பார்க்கும் அன்பு உள்ளங்களுக்காக…

ரயில் பயணத்தைப் போலவே வாழ்க்கைப் பயணமும். சிலருக்கு, அது முன்பதிவு செய்யப்பட்ட சவுகர்யமான பயணமாக இருக்கும். ஆனால் பலருக்கு, முன்பதிவு செய்யப்படாத அசவுகர்யமான பயணமாக இருக்கும்.

“ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகறாங்க, பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க”ன்னு முதல்வன்லேயும், ”Rich get richer, Poor get poorer” சிவாஜிலேயும் நம்ப அமரர் சுஜாதா எழுதுனது இந்த விசயத்துல ஒரு மாதிரியா ஒத்துப் போகுது.

ஏன்னா, ரயில்வே துறையின் சட்ட மாற்றத்தின்படி( 2008 ) அதிகபச்சமாக பயண தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாகவே இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணத்தேதி அன்று இருக்கை முன்பதிவு செய்துகொண்டிருந்த”தத்கால்” எனப்படுகிற அவசர கால முன்பதிவு  சட்டமும் திருத்தபட்டு, 5 நாட்களுக்கு முன்னதாகவே செய்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

இப்போ, டெக்னாலஜிய யூஸ் பண்ண தெரிஞ்சவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நோம்பி நொடி என்னைக்குன்னு காலண்டர பாக்கறோம். வீடுலயோ, ஆபீஸ்லயோ உக்காந்து மொத நாள் கவுண்டர் தெறந்த்தொடனே நெட்டுகுள்ள கையா உட்டு (அதாங்க ரயில்வே துறையின் பிரத்யேக வலை தளமான http://www.irctc.co.in) டிக்கெட்ட வாங்கிட்டு, கையில வெச்சிருக்கற ரெண்டு மூணு அட்டைல எதோ ஒரு அட்டைய வச்சு நோகாம புக் பண்ணிற வேண்டியது. அப்புறம் கண்டிப்பா மறக்காம ஆபீஸ்ல போயி பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டு,  சௌரியமா நம்ப வேலைய பாக்க ஆரம்பிச்சிருவோம்.

ஆனா பாவம் எப்படியும் டிக்கெட் கெடசிரும்னு, எதுக்கு நிக்கறோம்னு தெரியாம ரயில்வே ஸ்டேசன்ல கியூல நிக்கறவங்க நின்னுகிட்டுத்தான இருக்கறாங்க.  கொஞ்சம் அதிகமானாலும் பரவால்லன்னு  ஏஜென்ட் மூலமா டிக்கெட் வாங்கறவங்களும் வாங்கிட்டுதான் இருக்கறாங்க, டெக்னாலஜிய தெரிஞ்சுக்காதது/ யூஸ் பண்ண தெரிஞ்சுக்காதது யார் தவறு? மக்கள் தவறா ? அல்லது சரியாக மக்களுக்கு தேவையான படிப்பறிவோ விழிப்புணர்வோ தரத்தவறியது இந்த நாட்டின் அரசிய…….ப்ச்..எனக்கு இதற்கு இப்போது நேரமில்லை..நான் அவ்வளவு நல்லவனுமில்லை.

அட, நான் சொல்ல வந்த சமாச்சாரமே வேறங்க..

நம்பாளு ஒருத்தன் தீபாவளிக்கு ஊருக்கு போகணும். அவனுக்கு நேரம் சரியா இருந்தா, அவன் 3 மாசத்துக்கு முன்னாடியே  டிக்கெட் புக் பண்ணி சந்தோசமா ரிசர்வேசன்ல ஊருக்கு போறான்..இல்லெனா அவனுக்கு அன் ரிசர்வேசன்லையே தீபாவளி… இதுதான் கான்செப்ட்.

“ரன் லோலா ரன்”, ஏக் தின்  24 கண்டே, அப்புறம் நம்ப 12B போன்ற படங்களில் வந்த மேட்டர் தான்…

ஆனா நான் முன்னால சொன்ன மாதிரி அட்டைய வெச்சு புக் பண்ற மேட்டர், விசுக்குனு சொல்றது சுலபமா இருந்தாலும், அதெல்லாம் சரியா நடக்கணும்னா நம்ப ஜாதகத்துல இருக்க சுக்ரன், சச்சின் எல்லாம் நம்பல மட்டுமே பாத்துகிட்டு இருந்தாதான் உண்டு.  இதுல ஏகப்பட்ட சிக்கல் இருக்குங்க.அதுல ஒவ்வொரு கட்டமா தாண்டனும், மொதல்ல எடம் இருக்கான்னு பாக்கணும், இருந்திச்சுன்னா, நம்ப  ஜாதகத்தையே குடுக்கணும், கடைசியா அட்டைய வெச்சு நம்பர் தட்டணும்.எல்லா முறவாசாலும் செஞ்சிட்டு பட்டன  அமுக்குனம்னா……..

100 கோடி மான்கள் ஓடும் வேகம் போல… இதயம் படக்கு படக்கு ன்னு அடிச்சுக்கும்….

அப்புறமென்ன வழக்கம்போல வெப்சைட் பல்ல இளிச்சிரும்…சமயத்துல கைகாசும்  போயிரும், ஆனா டிக்கெட் புக் ஆகாது.

இதற்கு பின் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் அதிகமில்லை ஜென்டில் மேன்..பரமபதத்துல  பாம்பு கடிச்ச மாதிரிதான் திரும்ப மொதல்ல இருந்து வெளையாட வேண்டியது தான்.

ஆமா, அத புடிச்சு எல்லாரும் ஒரே நேரத்துல தொங்குனா என்னாகும் சொல்லுங்க… அப்புறம் அதுவும் தொங்கிரும்.நாலஞ்சு தடவை தொங்கிட்டு, அஞ்சாவது தடவ போய் பாத்தம்னா வெயிடிங்  லிஸ்ட்  200ன்னு காமிக்கும் (வடை போச்சே!). அதுக்கப்பறம் எந்த ட்ரெயின்ல பாத்தாலும் வெய்டிங் லிஸ்ட் 100 மேல தான் இருக்கும்.  சரி போன போகுது, அதான் அடுத்த ஆப்சன் தத்கால் இருக்குல, இருக்குல,..இருக்குல. ஆனா மறுபடியும் நம்ப யோகத்துக்கு தத்கால்ல புக் பண்ணும் போது பழைய மாதிரி பாம்பு கடிக்காம  இருந்தா அது போன பிறவில நம்ம  பெத்தவங்க பண்ண பிரியாணி தான்.

சரி, சரி, Let us watch the play …

நல்ல நேரம்

தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு,  ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்

அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…

எல்லா கட்டத்தையும் தாண்டி அவனுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆனதும், “எஸ் எஸ் எஸ்” ன்னு மின்னலே மாதவன் மாதிரி குதிக்காத குறைதான். வாழ்கை மேலேயே  ஒரு நம்பிக்க வந்திரும் அவனுக்கு.அவன சுத்தி இருக்கறவங்க எல்லாருமே விக்ரமன் படத்துல வர்ற மாதிரி நல்லவங்களாவே தெரியுவாங்க.. அவங்கம்மாவ கூப்புட்டு அப்பவே மெனுவ சொல்ல ஆரம்பிச்சிருவான்.அடுத்தது அவன் பிரண்ட்ஸ்  எல்லாருக்கும் டிக்கெட் கெடச்சுதான்னு செக் பண்ணிக்குவான்.(அங்கயும் இதே கூத்து தான்)

சில பேருக்கு கெடைச்சிருக்காது , அவங்க பஸ்லதான் கெடச்சிதும்பாங்க…  “என்னது பஸ்சா, இந்த நாலு சக்கரம் வெச்சு கொஞ்ச நீளமா, ராத்திரி தூங்க உடாம டீ.வி ய போட்டுட்டு வருவானுக, அடிக்கடி ஜெர்க் வேற ஆகுமே அதுவா..,  வோன்ட் யூ பீல் டயர்ட்” ன்னு ஓவர் சீன் போடுவான்.

ஆனா இவனுக்கும் ஆப்பு  வெக்க ஒரு ஆசாரி இருப்பான்… “என்னது ட்ரெயினா, ரொம்ப நீளமா, பொட்டி பொட்டியா, ரெண்டு கம்பி மேல போகுமே, தடக்கு தடக்குனு சத்தம் கூட வருமே.., அட ராமா, எப்பிடி தான் 8 மணி நேரம் ட்ரேவல் பண்றயோ… பை மீன்ஸ் ஆப் ஏர், ஒன்லி டூ அவர்ஸ் மச்சி…ஐ வில் பீ தேர் பிஃபோர் யூ.. . நாங்க எல்லாம் பாலைவனத்துலையே பால் பாயசம் சாபட்றவங்க, தெரியும்ல எங்க கிட்டயேவா”ன்னு பல்பு குடுப்பான்.

“சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச பயலுக தான் நீங்கல்லாம்…எல்லாம் எங்களுக்கு தெரியும் போடா..”  திட்டிட்டு சமாதானமாவான்.

அடுத்ததா அவன் டேமேஜர்  கிட்ட தகவல சொல்லிட்டு லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணிருவான்.. அவரு வழக்கம் போல “I will approve for now, but as you know if situation demands then…”அப்படினு ஒரு pause விட்டுட்டு கடலோர கவிதைகள்ல சத்தியராஜ் லாங்சாட்ல நடந்து போற மாதிரி போயிட்டு இருப்பாரு…

லீவ் ஓகே ஆகி தீபாவளிக்கு மொதநாள், அவன் கெளம்ப வேண்டிய அன்னிக்கு, எல்லாம் திட்டபடி நடத்துவான்.லோக்கல்ல இருக்கறவங்க கிட்ட செண்டிமெண்டா பேசி வேலைய நைசா தள்ளி விட்டிட்டு ஆபிஸ்ல இருந்து ஸ்டேஷன்க்கு 2 மணி நேரம் முன்னாடியே கெளம்பிருவான்.

“பாஸ், அதான் டிக்கெட் புக் பண்ணிடிங்கல்ல அப்பறமென்ன மெதுவா போலாம்ல கேட்டா”..

“ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல யாருமே ஓடிப் போனது கெடயாது “னு வெட்டி சீன் போட்டுட்டு நேரத்துலையே கெளம்பி ரிலாக்ஸ்டா தன் பயணத்த கண்டினியூ பண்ணுவான்.

ரவுண்ட் நெக், தொவைக்காத ஜீன்ஸ் பான்ட்,காதலன்” பிரபுதேவா சூ, சோல்டர் பேக்(உள்ள பூரா வேறென்ன அழுக்கு துணிதான்), ‘ஐபாட்'(இதுவும் மொபைலும் அதிகமா பொழங்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ஊருக்குள்ள எவனும் பக்கத்துல இருக்கறவான் கிட்ட பேசமாட்றான். கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி இத காதுல இருந்து கழட்டவே மாட்றானுக) , மினரல் வாட்டர் சகிதமா மொத ஆளா வண்டி பிளாட்பாரத்துக்கு வரதுக்கு 15 நிமிஷம் முன்னாடியே போயிருவான். இவன் மட்டுமில்ல ரயில்வே ஸ்டேசன்ல பாத்திங்கன்னா ஊருக்கு போற முக்காவாசி பயலுக இந்த கெட்டப்ல தான் இருப்பானுக …

போன் போட்டு “சரியா 5 மணி, 3வது பிளாட்பார்ம் கரெக்ட்டா வந்தரனும், என்ன”ம்பான், எதோ கால் டாக்ஸி தான் புக் பண்ணறான்னு பாத்தா, “அடடடடா, எத்தன தடவப்பா..உங்களுக்கு சொல்றது சரியா 5 மணி, அலாரம் வெச்சுகிட்டு படுங்க,சரியா”ம்பான்.

வண்டி வர்ற சமயம் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவும்.பாவம், அன்ரிசர்வுல போற மக்கள் சீட் புடிக்க அரக்க பறக்க ஓடுவாங்க.

அதுல யாராது ஒருத்தன் நம்பாள் மேல மோதிருவான்.உடனே “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே” ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான்.மோதுனவனும்  “சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்.

TTR அ சுத்தி மக்கள் நின்னுகிட்டு “பாத்து எதாவது பண்ணுங்க, சார்”ன்னு. கேட்டுகிட்டு இருப்பாங்க.

யாரு இந்த ஆபிசர்,  கிளைமேட்க்கு சம்பந்தமே இல்லாம கோட் சூட்எல்லாம் போட்டுட்டு நிக்கிறாரு அப்பிடின்டு நக்கலா ஒரு பார்வையோடபாட்டு கேட்டுகிட்டே பிளாட்பாரம் ஓரமா நின்னுகிட்டு எங்கயாச்சு பராக்கு பாத்துட்டு இருப்பான்… எதோ தோள்ல ஓரசற மாதிரி இருக்கும்…

திடீர்னு யாரவது கைய புடிச்சு இழுத்து “ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா..உசிர உட்றாதிங்க”பான்.  ஹெட் செட்ட கழட்டி விட்டதுமில்லாம யார்ரா அவன் நம்பள திட்றதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதுதான் சாருக்கு அவரு  தோள ஓரசுனது ரயிலுனே ஒறைக்கும்.

அடுத்து வண்டி வந்ததும் மொதல் வேலைய ரிசர்வேசன் சார்ட்ல, அவன் பேருக்குக்கு பக்கத்துல எதாவது “ஸ்வப்னா, ஸ்வேதா, லாவண்யா” ன்னு மாடர்ன் பொண்ணு பேரு இருக்கான்னு பாப்பான்..இருந்தா அப்பவே பொகைய போட்டுட்டு கனவுலகத்துக்கு போயிருவான். இல்ல “சாரதாம்பாள், சுந்தராம்பாள், ஈசுவரி” ன்னு போட்ருந்தா போட்ட பொகைய ஆப் பண்ணிட்டு..அதென்ன சினிமால மட்டும் தான் த்ரிஷா, சதா, சமீரா எல்லாரும் பக்கத்து பெர்த்துல வருவாங்களா? ன்னு பொலம்பிகிட்டே வண்டில ஏறுவான்.

இவன் பெர்த்துக்கு போனா ..ஒரு பெரியவரும் பாட்டியும் உள்ள இருப்பாங்க…அவங்க மகன், மருமக பேரம் பேத்திக வெளிய இருந்து( “பாத்து போயிட்டு வாங்க”, “உடம்ப பாத்துகோங்க”)பேசிகிட்டு இருப்பாங்க.. அப்புறம் ஒரு மிடில் கிளாஸ் அம்மா, அப்பா அப்பறம் அவங்க குழந்தை இருக்கும்… அது போக இன்னொரு பெரியவரும் இருப்பார்.. செட்டப்ப பாத்ததுமே நம்பாளுக்கு தெரிஞ்சு போயிரும்…இன்னிக்கு படுக்க மணி பதினொன்னு ஆயிடும்னு…

ஏன்னா, நம்பாளுக்கு மிடில் பர்த்தா இருக்கும். அடச்சே, அப்பர் பர்த் கெடச்சுட்டா பிரச்சனை இல்லாம நேரமே காலமே தூங்கிறலாம்.. இல்லேனா இவங்க தூங்கற வரைக்கும் அவங்களோட அளவலாவிட்டு, அவங்க போடற மொக்கைய கேட்டுகிட்டு , எப்படா கடைய சாத்துவாங்கன்னு காத்திருக்க வேண்டியது தான். அப்படின்னு மனசுக்குள்ள சலிச்சிக்குவான்

சட்டுன்னு நம்பாளு எதிர்பாக்காத மாதிரி அந்த குழந்தையோட அப்பா “சார், குழந்தை வேற இருக்கு, நீங்க அப்பர் பர்த் போய்க்க முடியுமான்னு” கேப்பார். நம்பாளும் குஷியா வாங்கிட்டு மேல போய்டுவான்.

அறிமுகமான கொஞ்ச நேரத்துலையே அந்த ரெண்டு பெரியவரும், எந்தெந்த தட் ரெயின், எந்தெந்த ஊர் வழிய எத்தன மணிக்கு கெளம்பி எத்தன மணிக்கு சேரும் ங்கறத பத்தி ஒரு சின்ன விவாதத்த ஆரம்பிசிரு வாங்க, “இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா” ங்கற மாதிரி பேச்சுக்கள்,அப்பறம் அப்படியே கொஞ்ச நேரத்துல பொதுநலன், அரசியல், இந்தியா முன்னேற மிக எளிய வழிமுறைகள்ன்னு தீவிரமா எறங்கிருவாங்க.. பாட்டியம்மா பெரியவர் எப்ப படுப்பார் அப்புடின்னு தூக்கத்தோட அவரு வாயவே பாத்திட்டு இருப்பாங்க. குழந்தைக்கு அந்த அப்பா,அம்மா ரெண்டு பெரும் சோறு ஊட்ட ட்ரை பண்ணி டயர்ட் ஆயிருபாங்க.. பாட்டி கொஞ்சம் குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சிருக்கும்..

நமபாள், வெளியில எதாவது ஒரு பவன்ல வாங்குன சப்பாத்தியையும், இட்லியையும் 5 நிமிசத்துல சாப்டுட்டு…கவர ஜன்னல் வழியா டிஸ்போஸ் பண்ணிட்டு.. பிஸ்லரி வாடர்ல கைய கழுவிட்டு, சூவ கழட்டி சீட்டுக்கு அடியில போட்டுட்டு…கொஞ்சம் நறுமண த்தோட இருக்கற சாக்ஸோட மேல ஏறி, கவச குண்டலத்த மாட்டிட்டு, யேசுதாஸ எழுப்பி விட்டுட்டு இவன் 5 நிமிசத்துல தூங்கிருவான்.

மொதல் தவணையா நம்ப TTR வந்து எழுப்பி டிக்கெட் செக் பண்ணிட்டு போவாரு, மொனகிட்டே மறுபடி தூங்கிருவான். திடீர்னு பாதி தூக்கதுல முழிச்சு பாத்தா, ‘ஐபாட்’ல அட்னான் சாமி தமிழ்ங்கற தக்காளி பழத்து மேல புல்டோசர் வெச்சு ஏத்திகிட்டு இருப்பார்… அணைச்சிட்டு கவச குண்டலத்த கழட்டி வெச்சிட்டு திரும்பி படுப்பான்….

கால் மணி நேரத்துல, குழந்தை அழுக ஆரம்பிச்சிருக்கும்..அந்தம்மா குழந்தைய சமாதானபடுத்தி தோற்றுபோக, அப்புறம் அந்த அப்பா கொஞ்சம் அந்த குழந்தைய தூக்கிகிட்டு ஒரு சின்ன வாக் போக…புரண்டு படுப்பான்..

தூக்கத்துல நம்பாளுக்கு ஒரு கெட்ட கனவு வரும். ஒரு ஜூவுக்குல ஒரு சிங்கத்தோட கூண்டுக்குள்ள இவன போட்டிருக்காங்க அது தெரியாம தூங்கிகிட்டு இருக்கான்…திடீர்னு சிங்கம் உறுமுது…அரண்டு போயி முழிச்சு பாப்பான், முளிச்சதுக்கு அப்பறம் தான் தெரியும் உருமுனது சிங்கமில்ல, கொறட்ட விட்டிட்டு இருக்கறது அந்த பெரியவர்னு.,அட ஆண்டவா தூங்க விடமாட்டாரு, போ ..புரண்டு படுப்பான்..

மறுபடியும் நடு ராத்திரியில் புரண்டு படுப்பான்.. அந்த குழந்தையோட அப்பா கீழ பேப்பர் விரிச்சு படுத்து கிட்டு ஒரு கைய சீட்ல படுதிருக்கற குழந்தை மேல போட்டு தூங்கிகிட்டு இருப்பார்…

டுங் டூங்…

“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,

“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..

தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ஜிலேபிய வாயில வெக்கும் போது எவண்டா தள்ளி விட்டது ன்னு முழிச்சு பாத்தா அந்த பெரியவர் பெரிய மனசு பண்ணி எழுப்பி விட்டிருப்பார்.

“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்…

“அலாரமும் அடிக்கல, அப்பாவும் போன் பண்ணல என்ன ஆச்சு”ன்னு மொபைல செக் பண்ணுவான். தூக்கத்துல சுவிட்ச் ஆப் ஆயிருக்கும். மொதல்ல மொபைல ஆன் பண்ணி “எங்க இருக்கீங்க…என்னப்பா நீங்க, நான் தான் உங்கள அலாரம் வெக்க சொன்னன்லன்னு தோரணய ஆரம்ப்சிருவான்…..

கெட்ட நேரம்

“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”…..”யத்ரியோ கடி கரிபியா “…..”இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா”…… “”சார், குழந்தை வேற இருக்கு”…. ” “ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா”.. “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”…..”ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல”….” I will approve for now, but as you know”.”சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச”…..”என்னது ட்ரெயினா”…..”என்னது பஸ்சா”…..

தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு,  ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்

அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…

டிக்கெட் கன்பார்ம் ஆகி புக் ஆயிரும்… சந்தோசமா லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணுவான் … அவன் சந்தோசத்துல சாணிய கரைச்சு ஊத்தற மாதிரி, அவன் டேமேஜர் ஒரு குண்ட போடுவாரு….

திடும்…திடும்…திடும்…

ஏற்கனவே திட்டமிட்டபடி, தீபாவளி அன்றும் அதற்க்கு மறுநாளும் ஏகப்பட்ட ஆணிகள் அறையப்படும் என்றும், அத்துணை ஆணிகளையும் கழற்றி ஏறிய இந்த பிரபஞ்சத்திலேயே இவன் ஒருவனால் மட்டுமே முடியும் என்று திட்ட வட்டமாக கூறி இவனது தீபாவளி கனவை கர்ண கொடூரமாக கலைத்து விடுவார்.

“ச்சே, இப்பிடி தீபாவளி அன்னிக்கு ஊருக்கு போக முடியாம ஆயிரிச்சே”ன்னு நெருக்கமானவங்க எல்லாம் பரிதாபபடுவாங்க…

“படபடபடபட, சர், சூம், டமால், அய்யன் பட்டாசுகள் வாங்கிடிங்களா”ன்னு இந்த நேரம் பாத்து எதிரிக எல்லாம் இளக்காரமா, சேட்டை பண்ணுவாங்க…

வீட்டுக்கு போன் பண்ணி சொன்னா, அவன் அப்பத்தா மட்டும் “அப்புடி என்னடா பொல்லாத கம்பேனி, ஒரு நோம்பி நொடி கூட இல்லாம, தீபாவளி அன்னிக்கு கூடவா வேல பாப்பாங்க..என்னமோ போ”ன்னு வருத்தப்படும் .

நம்பாளு மேக்னாவ பிரிஞ்ச சூர்யா மாதிரி சோகமா ஆயிருவான்..ஒரு சிம்பதிகாக வாழ்வே மாயம் கெட்டப் லையே டேமேஜர் முன்னாடி திரியுவான்…

திடீர்னு, தீபாவளிக்கு மூணு நாள் முன்னாடி அவர் வந்து இவன் கழற்றி ஏறிய வேண்டிய ஆணிகள் இன்னும் சரியாக அறைய படவில்லை என்றும், அறைவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதாகவும் சொல்லி…இவனது தீபாவளி பயணத்தை உறுதி செய்து விடுவார்.

இந்த சந்தோசமான சேதிய வீட்டுக்கு சொல்லிட்டு , உடனே ஓடி போடி ப்ரம்ஹாஸ்த்ரத்த (தத்கால்) பயன்படுத்துவான் (டிக்கெட் எல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே தீந்து போயிருக்கும்டா முட்டாள்.அப்படின்னு புத்தி சொல்லும், ஆனா பாழாப்போன  மனசு  கேக்கவா செய்யும்) . அடுத்து டிராவல்ஸ்ல எல்லாம் செக் பண்ணுவான். அங்கயும் கைய விரிச்சிருவாங்க.

அவனுக்கு ரெண்டே ரெண்டு ஆப்சன் தான் இருக்கும்…

ஒன்னு ட்ரெயின்ல அன்ரிசர்வுல போறது, இன்னொன்னு பஸ்ல அன்ரிசர்வுல போகறது (அரசு பேருந்துன்னா, வரிசைல நின்னு நாம ஏறதுக்கே, நடு ராத்திரி ஆயிரும், ஒன்னும் பிரச்சனை இல்ல, சரியா மதியான சாப்பாடுக்கு வீடு போயிறலாம், தனியார் பஸ்ன்னா, தீபாவளிக்கு மொத நாள் பெர்மிட் இல்லாம ஏக பட்ட சுந்தரா ட்ரவல்ஸ் ஓடி கிட்டு இருக்கும். அதுல எதாவது ஒண்ணுல ஏறுனா, சொல்ல முடியாது அநேகமா “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்ன்ன்ன்ன்  முறையாக” படம் போடறதுக்குள்ள வீடு போயிறலாம்)

“எரியற கொள்ளியா, காச்சுன கம்பிய” என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி..ரெண்டுமே கொடுமைதான், இருந்தாலும்  ரயில்னா நேரத்துலயாவது போயிரலாம்னு ரெண்டாவது ஆப்சனையே தேர்ந்து எடுத்திருவான்.

ஊர்ல இருக்கறவங்களுக்கு கெட்ட நேரம் தபால்ல வந்தா, நம்பாளுக்கு தந்தில வரும். சரியா அன்னிக்குன்னு பாத்து தான் வேல வந்து குமியும், அடிச்சு புடிச்சு கடைசி நேரத்துல பஸ்ச புடிச்சு போனா, நம்பாளுக்காக ஒரு நல்ல தரமான ட்ராபிக் ஜாம் காத்துகிட்டு இருக்கும்.

நேரம் ஆக ஆக ஹார்ட் பீட் ஏறும்…பட்டுன்னு பாதி வழில எறங்கி ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு வழிய ரயில்வே ஸ்டேஷன் போயி சேர்ந்திருவான். ரயில் வரதுக்குள்ள எப்படியாவது பிளாட்பாரத்துக்கு போயரனும்ன்னு அரக்க பக்க ஓடுவான்.

ஓடற அவசரத்துல யாராது ஒருத்தன் மேல மோதிருவான்.உடனே அவன் “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான், “சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்..

சரியா ரயில் வந்துகிட்டு இருக்கும் போது போயி சேந்திருவான். வண்டி வந்து நிக்க நிக்க அந்த எடமே கலவர பூமி ஆயிரும்..அடிச்சு புடிச்சு எல்லாரும் ஏறுவாங்க..

“டேய் ரமேசு இங்க வாடா”, மாப்ள அங்க ரெண்டு சீட் இருக்காடா ”

“எலேய் சிவனாண்டி இங்கிட்டு வா”

“எண்ணே இங்க வாரியளா இங்கனக்குள்ள ஒரு சீட் இருக்கு ”

“டேவிட்டு, இங்க ஒரு சீட் இருக்குடே, இந்தால வந்திரு”,

“எடோ, கோபி இவட வரூ”

அந்த ரெண்டு நிமிஷம் பல வட்டார மொழிகளும்  நம்மாளு காதுல வந்து தேனா பாயும்…அந்த மியூஸிகல் சேர் போட்டில சந்தேகமில்லாம தோத்து போவான். பெர்த்துல ஏறி அதுக்குள்ளயே சில பேரு கர்சீப்ப மூஞ்சில மூடி தூங்கறா மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாங்க. பேக்க தூக்கி சைடுல லக்கேஜ் கேரியர்ல வெக்கலாம்னா, அந்த முக்கால் அடி கம்பிளையும் ஆளுக படுத்திருபாங்க. சரி தீபாவளி இப்பவே ஆரம்பிசிருசுன்னு நம்பாள் முடிவு பண்ணிருவான். பக்கத்துல யாராவது கிட்ட சொல்லிட்டு, அந்த அழுக்கு துணி பேக்க பாத்துக்க சொல்லிட்டு TTR பாக்கலாம்னு போவான் .

TTR  என்ன பண்ணமுடியும் இவனுக்குத்தான் saturn Solid ஆ இருக்கே.,சீட் இல்லேன்னு சொல்லிருவாரு.

தலைய தொங்கபோடுட்டு திரும்ப இவன் காம்பார்ட்மண்டடுக்கு வந்து பாத்தா. அந்த கேப்புல புதுசா ஒரு அம்பது பேர் அந்த பொட்டிய ஆக்குபை பண்ணிருபாங்க..இவன் வண்டிக்குள்ள ஏற்றதே சிரமம்னு நெலம ஆயிரும். பேக் மேல ஒரு கண்ணு வெச்சுகிட்டே..விடியலை நோக்கி விநாடிய எண்ண ஆரம்பிச்சிருவான்…

வண்டி கெளம்பின உடனே உள்ள பாத்திங்கன்னா..பெர்த்துல கர்சீப் போட்டு மூடிருகரவங்களுக்கும சக பயணிகளுக்கு சண்டை வலுக்க ஆரம்பிக்கும்…

“எழுப்புங்க சார், அந்தாள, இவளோ பேர் நிக்க எடமில்லாம படியில தொங்கிட்டு வர்றாங்க , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நாலு பேரு உக்கார எடத்துல எப்படி நீட்டி படுத்துட்டு வரான் பாருங்கன்னு”…ஒருத்தர் ஆரம்பிப்பார்.

“வேணும்னா நீயும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து எடம் புடிக்க வேண்டியது தான” (கர்சீபுக்குள்ள இருந்து கிட்டே) இவரு வண்டி கெளம்பும் போது வருவாராம், இவருக்கு எந்திரிச்சு எடம் குடுக்கணுமாம்.. போயா”

சண்ட முத்தி கடைசியா, படுத்திருகறவர் கால் பக்கத்துல ஒரு எடம் வாங்கி மேல ஏறி உக்காந்திருவார்.

நம்பாள் படி கிட்ட இருந்து கொஞ்ச கொஞ்சமா முன்னேறி ரெண்டடி நகருவான்..பக்கத்துல ஒரு ஆள் புல் சரக்குல இருப்பான்..

“சார், எப்பவுமே நான் ஜெனரல்ல போகும் போது லைட்டா ஒரு கட்டிங் உட்டுக்குவேன், எந்த டையர்டும் இல்லாம ட்ரேவல்  பண்ணல்லாம் பாருங்க” ன்னு சொல்லிட்டு இவன பாத்து சிநேகமா புன்னகைப்பான். ஆள பாத்தா கட்டிங் கட்டிங்கா உட் மாதிரி இருக்கான், இவன பாத்து நாம சிரிச்சம்னா, சொந்த செலவுல நாமலே சூன்யம் வெச்சுக்கறா மாதிரின்னு ‘வி. ஜி. பி’ல வெறப்பா ஒருத்தர் நிப்பாப்ள இல்ல அந்த மாதிரி எந்த உணர்ச்சியும் கட்டாம நிப்பான் .

இன்னொருத்தர் பக்கத்துல பாத்தா, படிச்சவர் மாதிரியே இருக்காது ஆனா ஹிந்து பேப்பர் கைல வெச்சுகிட்டு நிப்பாரு..என்னடான்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே… “சார் கொஞ்சம் கால் எடுத்துக்கோங்க., நான் உள்ள போயிக்கறேன்”னு ஏதோ விசேஷ விட்டுக்குள்ள போற மாதிரி அந்த முக்கால் அடி கேப் இருக்கற சீட்டுக்கு அடியில  மாயமா மறைஞ்சிருவார். அதுக்கப்பறம் தான் ரயிலுக்கும், நியூஸ் பேப்பர்களுக்கும் இடையில ஒரு நீங்காத பந்தம் இருக்குங்கறதே நம்பாளுக்கு புரியும்.

ஒரு ரெண்டு மணி நேரம் கால் வலிக்கு அப்பறம், ஒருத்தர் இரக்கபட்டு சீட்டு நுனில ஒரு ஓரமா எடம் குடுப்பாரு.. சந்தோசமா பத்து நிமிஷம் உக்காந்திருப்பான். திடீர்னு “சார் உங்க சூ சைஸ் என்ன எட்டா”ன்னு காலுக்கு கீழ ஒரு குரல் கேக்கும்.

ஆச்சர்யத்தோட கேப்பான் ” எப்படி சார் கண்டுபுடிசீங்க”

“யோவ் மூஞ்சிக்கு மேல வெச்சு தேச்சா தெரியாதா பின்ன, கால எட்ட எடுயா, வந்துடானுக”ன்னு சல்லுன்னு இவன் மேல எரிஞ்சு விழுவான்…மேனேஜர தவிர வாழ்கையில யாருமே அவன திட்டி இருக்க மாட்டாங்க..நம்பாள் ரொம்ப சோர்ந்து போயிருவான். அந்த பொசிசன்லையே ரொம்ப நேரம் ஒண்டிக்கிட்டு உக்காந்துகிட்டு இருப்பான்..

போதாக்கொறைக்கு எந்த நேரமும் இவன் பேண்ட்ல வாந்தி எடுக்கற மாதிரி இவன் காலுக்கு கீழ இன்னொரு குடிமகன் தலை எல்லாம் தொங்கி போயி உக்காந்துக்கிட்டு இருப்பார்.

சமயம் பாத்துட்டே இருப்பான். மேல பெர்த்துல இடம் காலியான உடனே மேல ஏறி உக்காந்துக்குவான். இவனுக்கு பின்னாடி ஒரு ரெட்ட நாடிகாரர் கட்டய சாச்சிருபார். இவனால அஞ்சு நிமிஷம் கூட கால மடக்கி உக்கார முடியாது, கொஞ்சம் நேரம் கால நீட்டி எதிர்த்த பெர்த்துல வெச்சுப்பான்.

கீழ இருந்து ஒருத்தர் சொல்லுவார் “தம்பி சூவ  கழட்டி வைப்பா மண்ணு விழுகுதில்ல, கீழ இருக்கறவங்கள பாத்தா மனுசரா தெரியல”… (இப்ப நான் என்ன செய்யயயயயய…..)

சரி, இந்த ரண காலத்துலயும் ஒரு கிளு கிளுப்பா, பாட்டு கேக்கலாம்னா..அது பேக்ல இருக்கும் ஏறங்குனம்னா ஏற விட மாட்டானுக…சரி மொபைல்லையாவது பாட்டு கேப்போம்னு பாத்தா, சார்ஜ் பண்ண மறந்திருப்பான், செல்லு செத்து போயிருக்கும்..

லேசா வயத்த வேற கிள்ளும் அப்போதான்,  இந்த கூத்துல அவன் சாப்பட மறந்ததே  தெரியும்.

மேல பார்த்து (சாமியத்தான்)  “செய்யுங்க, உங்கனால எவளோ முடியுமோ செய்யுங்கன்னு… நொந்துக்குவான் .

எப்படியோ மாத்தி மாத்தி கால வெச்சு உக்காந்து,ஏதாவது ஒரு பொசிசன்ல தூங்கி போயிருவான். நடு ராத்திரில முழிச்சு பாப்பான், எல்லாரும் அமைதியா ஒருத்தர் தோள்ள ஒருத்தர் சாஞ்சு படுத்துகிட்டு இருப்பாங்க..இவனுக்கு எதிர் பெர்த்துல சண்ட போட்ட அந்த ரெண்டு பேரும் ஒருத்தன் கால ஒருத்தன் கட்டி புடிச்சிட்டு, நேர் எதிரா படுத்திருபாங்க… உண்மையான சமத்துவபுரம் இந்த ஜெனரல் காம்பார்ட்மண்டதான்னு புரிஞ்சுக்குவான். வாழ்க்கைல நிரந்தரமா தூங்கற வரைக்கும் தான் ஒரு இடத்துக்காக(நிலைக்காக) அடிச்சிக்குறோம்ன்னு, வாழ்க்கையோட பல தத்துவங்கள அந்த அமைதி அவனுக்கு உணர்த்தும்.

ஊர் நெருங்க நெருங்க அவனுக்கு ஒரு முழு சீட் கெடச்சிரும்…விடியற்காலைல நல்லா தூங்கிட்டு வருவான்..

டுங் டூங்..

“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,

“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..

“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ன்னு யாரவது எழுப்பி விடுவாங்க..

“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்..

“அடடா, மொபைல் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு அப்பாவ வேற வர சொல்லிருந்தோமே”, அப்படின்ட்டு பிளாட்பாரத்துல எறங்கி மெதுவா அவர தேடிகிட்டே நடக்க ஆரம்பிப்பான்.

ஒரு அம்பது அடி தூரத்துலேயே அவங்கப்பா அவன கண்டு புடிச்சிட்டு வந்து மொதல்ல பேக்க வாங்குவார்.

“பரவால்ல இருகட்டும்பா”ன்னு இவன் சொன்னாலும் அவன் கிட்ட இருந்து வாங்கிட்டு.. “ரொம்ப கூட்டமா இருந்திருக்குமே, சீட்டு கெடச்சுதா, ஆமா ரொம்ப டல்லா இருக்கியே ராத்திரி சாப்டியாப்பா” ன்னு கேப்பார்.

“ம்ம்.. அதெல்லாம் சாப்புட்டம்பா”, ஜன்னல் சீட்டே கெடச்சுது, அத விடுங்கப்பா, அப்பறம் வீட்டுல எல்லாரும் எப்படி இருகாங்க”ன்னு முன்னெப்போதையும் விட பக்குவப்பட்டவனா பேசிக்கிட்டே சந்தோசமா குடும்பத்தோட தீபாவளிய கொண்டாட வேகமா நடைய போடுவான்.

பயணங்கள் எப்போதும் நம்மை பக்குவப்படுத்தும், அதுவும் விளிம்பு நிலை மக்களோடு இது போல் பயணிக்கையில், நம்மை சுற்றி இருக்கக்கூடிய வாழ்கை முறையில் இருந்து நாம் எவ்வளவு வித்யாசப் படுகிறோம் என்பதை உணர நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் .என்னை பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறையாவது, தனியாக முன்பதிவு செய்யாமல் பல தரப்பட்ட மக்களோடு பயணம் செய்ததால், யதார்த்த வாழ்வின் எளிமையும், சராசரி உலகத்…(வந்துட்டாருப்பா, மெசேஜ் சொல்றதுக்கு, இவரு பெரிய வெண்ணிற ஆடை மூர்த்தி மெசேஜ் சொல்லாம முடிக்க மாட்டாரு, போப்பா, எல்லாம் அவங்களுக்கு தெரியும்)…

My sincere thanks to my inspirers and well-wishers ‘Pinkuripukkal’ Praveen and ‘Veri goodra vellachaami’ Gowtham for proof reading this article.

Read Full Post »

“தற்காலிக குடிப்பெயர்ச்சி”யின் ஒலிப்பதிவு(Audio Blog)

“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”
-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

“அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை  அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…

ஆன்சைட் – மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு  பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை)  வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.

இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி  மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…

அப்படி போறதுனால என்னங்க…

நல்லா கேட்டிங்க….

** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!

** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!

** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.

** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்…  அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…

இங்க அவனவன் 38 degree  வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fallல வெளயாடறா  மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…

மூத்தவ நல்லா  பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse அ வெச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…

ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ” நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த “வருமோவராதோ” ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி  ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத  சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்கு “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…

மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே squad ல ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.

ஆன்சைட் போனவன்  “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்” சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25  வருஷ கனவு, தவம்”னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…

இல்ல சினிமால சொல்றாப்ல  “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.. இப்போ  அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்…அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்…அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு  பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.
இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி  பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்…

திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க  ஊர்ல  இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.
ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல  ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்…கெளம்ப வேண்டிய கடைசி நாளும்  வந்திரும்…அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல்  ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு  கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு (“மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்.

அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா  (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம்  இருக்கு…அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு,  தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்…

இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும். நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே  கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்…கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்…

விடியக்காலம் ப்லைட்டுனா ராத்திரி  பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும்.. அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு  பேச முடியும்!

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னு “என்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு”  பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும்  நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பே”ன்னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப  நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.

நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக.. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவளோ தான் லக்கேஜ் எடுத்திட்டு போகன்னும்னு ஒரு கணக்கு உண்டு..அதிகம் ஆகி 3  கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா,  “மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதுன்னு? நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.

மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்… பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க…பயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல  பேசுவானுக!

நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்…

மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!

கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்…

ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்…

யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம்…

கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை  உணர்வோம்..ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை  வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம்  இப்படி நிறைய)  தவறவிடுவோம்… கடைசி நேர போன்களில் நேரம்  கரைந்து கொண்டிருக்கும். ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி மேலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போலவே வெறுமையாக புலப்படும்.

(சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு சேரன் அலர்ட்டாவே இருக்கான்!!..)

சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல து.ம.து விஜய் மாதிரி  தேம்பித்தேம்பி  அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு  ஸ்கூல்ல, மொத நாள் LKG கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரி கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக.

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு “நோ தேங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல  பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.

பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (UK ன்னு வெச்சுப்போம் – ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.

அந்த ஊரு இமிகரேசன்  செக்கிங்..

ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..

“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”

(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..

“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”

(என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) பார்டன் மீ..

“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”

ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும் .

அப்புறம் நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான்  பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..)   தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.

ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:

** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.

நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்..

நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல  பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.

2. காலநிலை மாற்றம்

வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். நீங்க சாயங்காலம் எவளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலையே வந்த மாதிரி ப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும்.நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும்.கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும், அப்புறம் பாத்தா இன்னிக்கா அப்படி பாத்தங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.

வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது..அதே வேலை, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்ல படியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் off-shore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லென சிக்கி சீரழிய வேண்டியதுதான். விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,

“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”..

பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும்
குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது  எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…

அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  அசிங்கத்த மிதிச்ச மாதிரி அப்பறமாதான் அடங்குவான்…

வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா  இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக.  5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!

இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.

மொத்ததுல இந்த “ரீல் பாதி, ரியல் பாதி” ஜெகன் ஸ்டைல்ல சொல்லனும்னா,

ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்.

பின் குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள யாவும் யாருடைய வாழ்க்கையோடாவது ஒத்துப்போவதாக இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

My sincere thanks to Mr.Karuna (Proof reader of this blog)

Read Full Post »

%d bloggers like this: